தூங்காவனம் – விமர்சனம்


‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்கிற பிரெஞ்சு கதையைத்தான் தமிழுக்காக தூங்காவனமாக மாற்றியிருக்கிறார்கள்..

போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். போதைப்பொருள் கடத்தல் செய்யும் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான 10 கிலோ கோகைனை கடத்துகிறார்.. கடத்தல் கும்பலின் தலைவனான சம்பத், சரக்கு எங்கே என்று பிரகாஷ்ராஜை டார்ச்சர் பண்ண, போதைப்பொருளை திரும்ப பெறுவதற்காக கமலின் மகனைக் கடத்தி பிளாக் மெயில் செய்கிறார் பிரகாஷ்ராஜ்.

இதனால் கடத்திய போதைப்பொருளை கொடுத்து மகனை மீட்பதற்காக பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான நைட் கிளப்புக்கு செல்கிறார் கமல். கமல் மீது சந்தேகப்படும் சக அதிகாரிகளான த்ரிஷாவும் கிஷோரும் பின் தொடர்ந்து செல்வதுடன் கமலுக்கு தெரியாமல் அந்த போதைப்பொருளை இடம் மாற்றுகின்றனர்.

சரக்கை கொடுக்கவில்லை என்றால் மகனை கொன்றுவிடுவதாக பிரகாஷ்ராஜ் கமலை மிரட்ட, தொலைந்து போன கோகைனை கமல் அந்த நைட் கிளப்புக்குள் தேட, அவரை திரிஷாவும் கிஷோரும் பின் தொடர, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் பிபியை எகிற விட்டிருக்கிறார்கள்.

போலீஸ் ஆபிசர் என்பதாலோ என்னவோ நவரசம் காட்டி நடிக்கும் வாய்ப்பு இதில் கமலுக்கு குறைவாக கிடைத்திருக்கிறது.. குறிப்பாக ஒருநாள் இரவில் நடக்கும் கதை என்பதால் கமலும் கடத்தப்பட்ட அவரது மகனும் தங்களது அன்பை ஃபோனில் பரிமாறிக்கொள்ளும் அந்தக் காட்சியில் கூட அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் வழக்கம்போல பல நுணுக்கமான விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கமல்.

போலீஸ் ஆபீஸராக த்ரிஷாவுக்கு அவரது கனவை நிறைவேற்றும் கதாபாத்திரம். ஓரளவுக்கும் மேலேயே அதில் சோபிக்க முயற்சிக்கிறார்.. பிரகாஷ்ராஜ், சம்பத் இருவரும் கடத்தல்காரனின் வில்லத்தனம் காட்ட, போலீஸ் கிஷோர் போலீஸ்காரன் மிடுக்கை நடிப்பில் காட்டியிருக்கிறார். பாபநாசத்தில் மிரட்டிய ஆஷா சரத்துக்கு இதில் வாய்ப்பு குறைவுதான்.

யூகிசேது, ஜெகன் உட்பட துணை கதாபாத்திரங்கள் பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள். முக்கால்வாசி கதை நைட் கிளப் ஒன்றிலேயே படமாக்கப்பட்டுள்ளது.. இது இடைவேளை வரை விறுவிறுப்பை தந்தாலும், அதன்பின் ஒரே இடத்திற்குள் சுற்றி வருவது கொஞ்சம் அலுப்பை தரவே செய்கிறது..

ஜிப்ரனின் பின்னணி இசை தேவையான இடங்களில் கதையின் கம்பீரத்தை தாங்கி பிடிக்கிறது. நைட் கிளப் காட்சி, மற்றும் சண்டைக்காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது சானு வர்கீசின் கேமரா. சூதாட்டம் ஆடப்போன இடத்தில் சூறாவளி ஆட்டத்தை சந்தித்து வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா.

KamalKamalahasanRajesh M SelvaThoongavanam ReviewTrisha