ரவுடியிடம் விசுவாசமான வலதுகையாக செயல்படும் அடியாள் அவனுக்கு எதிராகவே திரும்பும் தமிழ்சினிமாவின் ரெடிமேட் பார்முலா கதைதான் இந்த ‘திருநாள்’..
தஞ்சாவூரில் மிகப்பெரிய ரவுடியான சரத் லோகித்ஸ்வாவிடம் அடியாளாக இருக்கிறார் யாருமில்லாத அனாதையான ஜீவா.. இவரது பலத்தில் ஊருக்குள் பல அநியாயங்கள் செய்கிறார் சரத் லோகித்ஸ்வா. இவர் நடத்திவரும் சாக்கு மண்டியின் பார்ட்னராக அமைதியே உருவான ஜோ மல்லூரி இருக்கிறார். இவரின் மகளான நயன்தாராவை ஒருமுறை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றும் ஜீவா, தான் பல வருடங்களாக அவரை காதலித்து வருவதை கூற, நயன்தாராவும் காதலுக்கு சம்மதிக்கிறார்.
இந்நிலையில் நயன்தாராவின் காதல் ஊரார் மத்தியில் வெளிப்பட்டு ஜோ மல்லூரிக்கு தலைகுனிவை ஏற்படுத்த, அவர் அந்த ஊரை விட்டு கிளம்பி திருச்சிக்கே செல்ல முடிவெடுக்கிறார் தன்னுடைய பார்ட்னர்ஷிப் பணத்தை சரத்திடம் கேட்க அவரோ இல்லை என மறுக்கிறார். இதைக்கண்டு வெகுண்டு எழும் ஜீவா, சரத்திற்கு எதிராக திரும்புகிறார் அந்தப்பணத்தை போலீஸார் மூலமாக ஜோ மல்லூரிக்கு வாங்கித்தருகிறார்.
இதனால் ஜீவாவின் நல்ல மனதை உணர்ந்து அவருக்கே தன்னுடைய மகளை திருமணம் செய்து தர முன் வருகிறார் ஜோ மல்லூரி. இது சரத்திற்கு மேலும் ஆத்திரமூட்ட, ஜீவாவை தீர்த்துக்கட்டும் வேலைகளில் இறங்குகிறார் சரத்.. இந்த நிலையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான கோபிநாத், சரத் லோகித்ஸ்வாவுக்கும் அவரது கையாளாக இருந்த ஜீவாவுக்கும் குறி வைக்கிறார். யாருடைய முடிவு எப்படி அமைகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.
மீடியமான நகரம் ஒன்றில் ரவுடி – அடியாள் கதையில் வழக்கமாக என்னனென்ன நடக்குமோ அதெல்லாம் இந்தப்படத்திலும் நடக்கிறது. ‘ஈ’ படத்துக்குப்பின் ஈவு இறக்கமில்லாத ரவுடியாக கெட்டப்பில் பாஸ் மார்க் வாங்கும் ஜீவாவுக்கு, அவரது கேரக்டரைத்தான் ரொம்பவே சொதப்பலாக கொடுத்திருக்கிறார்கள். சரத்திடமிருந்து பிரிந்தபின் வாழை இலை வெட்டி விற்கும் அளவுக்கு அப்பாவியாக மாறுவது நம்பும்படி இல்லாவிட்டாலும் ரசிக்கும்படி இருக்கிறது.
கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக நயன்தாராவின் ஹைடெக் நடிப்பை பார்த்து ரசித்தவர்களுக்கு இந்த கிராமத்து நயன்தாரா புதுசு தான். ஆனால் அவரை சாதாரண கிராமத்து பெண்ணாக வீணடித்து விட்டார்களோ என்கிற எண்ணமும் எழாமல் இல்லை.
வில்லத்தனத்திற்கு பொருத்தமான ஆள் என்பதை சரத் லோகித்ஸ்வா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.. இந்தப்படத்தில் அவர் புதிதாக செய்திருப்பது அவரது ஆசை நாயகியான மீனாட்சியின் முதுகில் தலை வைத்து படுத்திருப்பதுதான்.
கருணாஸ், ஜோ மல்லூரி, போலீஸ் அதிகாரிகளாக வரும் மாரிமுத்து, ‘நீயா நானா’ கோபிநாத், நயன்தாராவின் அம்மாவாக வரும் ரமா, சரத்தின் ஆசைநாயகியாக வரும் மீனாட்சி என எல்லோரும் வந்துபோகும் கேரக்டர்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை பிசகாமல் செய்திருக்கிறார்கள்..
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மெலடி பாடல் நன்றாக இருக்கிறது. ஆமாம்.. கடைச்யில் எதற்காக தேவையே இல்லாமல் அப்படி ஒரு குத்துப்பாட்டு..? ஒரு பெண் போலீஸாரின் யூனிபார்மையே கழட்டும் அளவுக்கு ஜீவாவை காட்டியிருக்கத்தான் வேண்டுமா.? ஏற்கனவே சரிவு நிலையில் இருக்கும் ஜீவா கைதூக்கிவிட யாராவது வரமாட்டார்களா என காத்திருக்கும் நிலையில், இயக்குனர் பி.எஸ்.ராம்நாத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் கூட அதை முழுமையாக செய்ய தவறிவிட்டார்.