நடிகர்கள் : சுரேஷ்கோபி, அனூப் மேனன், கல்பனா, மேக்னா ராஜ், மது, சுராஜ் வெஞ்சாரமூட், இந்திரன் மற்றும் பலர்
இசை : ஜெயச்சந்திரன்
ஒளிப்பதிவு : ஜித்து தாமோதர்
கதை : அனூப் மேனன்
இயக்கம் : தீபன்
மிகவும் ஆடம்பரமான ‘டால்பின் பார்’ உட்பட நகரத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட பார்களுக்கு சொந்தக்காரர் கிட்டத்தட்ட 45 வயதான சுரேஷ்கோபி.. அவரது மனைவி கல்பனா (நம்புங்கள் ஊர்வசியின் அக்காவே தான்).. டீனேஜில் ஒரு பையனும் உண்டு.. சுரேஷ்கோபியின் நண்பர்கள் அனூப் மேனன், மது ஆகியோர்.
சுரேஷ்கோபிக்கு நீண்ட ஆயுள் என்றாலும் இடையில் ஒரு கண்டம் வர இருக்கிறது என்றும் அதிலிருந்து முன்பின் அறியாத பெண் ஒருவர் அவரை காப்பாற்றுவார் எனவும் ஜோசியர் சொல்கிறார். அதற்கேற்ற மாதிரி சுரேஷ்கோபியுடன் தொடர்புடையவர்கள் மூன்று பேர் வரிசையாக கொலையாகின்றனர். போலீஸ் ஒருபுறம் துப்பு துலக்குகின்றனர்.
இந்த நிலையில் வசதிகள் இருந்தாலும் போரடித்துப்போன மன நிலையில் இருக்கும் சுரேஷ்கோபி, கடற்கரையில் அமர்ந்திருக்கும்போது சுருட்டிய பேப்பர் அடங்கிய ஒரு மூடிய பாட்டில் கரையில் வந்து விழுகிறது. அதை திறந்து பார்த்தால், அதில் “இந்த கடிதம் யார் கையில் கிடைக்கிறதோ அவர் தான் என் கணவர்” என ஒரு பெண்ணால் எழுதப்பட்டிருக்கிறது.
அனூப் மேனன் தன் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண் ஏழு வருடங்களுக்கு முந்தி உபயோகத்தில் இருந்தது என்றும் தற்போது அந்த பெண்ணின் புதிய எண் என்று கூறி அவளது எண்ணை தருகிறார்.. அந்த பெண் தான், கடிதம் எழுதிய பின் திருமணமாகி, பின் விவாகரத்து ஆகி தற்போது தந்தையுடன் வசிக்கும் மேக்னா ராஜ்..
மேக்னா ராஜுடன் போனிலேயே பேசி நட்பை வளர்க்கிறார் சுரேஷ்கோபி.. பட்டிக்காட்டுத்தனமாக பேசும் சுரேஷ்கோபிக்கு காதலுடன் பெண்களை கவரும் விதமாக பேச பக்கத்திலிருந்தபடியே ஐடியா கொடுக்கிறார் அனூப் மேனன்.. சமயத்தில் சுரேஷ்கோபிக்காக போனிலேயே பாடவும் செய்கிறார். ஒரு கட்டத்தில் மேக்னா ராஜை சந்திக்க விரும்பும் சுரேஷ்கோபி, அவரை தனது டால்பின் பாருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரச்சொல்கிறார்..
சொன்ன தேதியில் மேக்னா ராஜும் வந்துவிட, அவரை தூரத்தில் இருந்து பார்த்துவிடும் சுரேஷ்கோபிக்கு, அவரை சந்தித்து முகம் காட்டுமுன் ஒரு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது.. அதன்பின் சுரேஷ்கோபி மேக்னாராஜை சந்தித்தாரா, கொலையாளி சுரேஷ்கோபியை நெருங்கினானா, சுரேஷ்கோபியின் முடிவு என்ன என்பது நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ்..
கதாநாயகனாக.. ஸாரி.. கதையின் நாயகனாக சுரேஷ்கோபி.. ரொம்ப நாட்கள் கழித்து ஆக்சன் இல்லாமல் குடும்பக்கதையில் அவரை பார்க்க முடிவது ஒரு அதிசயம் என்றால், கமல் கோவை சரளாவை கதாநாயகியாக ஏற்றுக்கொண்டதுபோல, சுரேஷ்கோபி நகைச்சுவை நடிகை கல்பனாவை தனக்கு ஜோடியாக ஏற்றுக்கொண்டது மகா மகா ஆச்சர்யம்..
தண்ணியடிக்கும் பழக்கம் எதுவும் இல்லாமல் பார் நடத்திக்கொண்டு, சால் அன்ட் அன்ட் பேப்பர் லுக்கில் வலம் வரும் சுரேஷ்கோபி, அதற்கு காரணமாக மங்காத்தா அஜித் ஸ்டைலை பாலோ பண்ணுவதாக சொல்வது கேரளத்துக்கரர்களிடம் நம்மவர்களின் தாக்கம் எப்படி ஆக்கிரமித்துள்ளது என்பதை காட்டுகிறது..
புதிய காதலியுடன் மழை பெய்யும்போது அது பற்றி ரசனையுடன் பேசும் சுரேஷ்கோபி, அதே நேரத்தில் வீட்டிலிருந்து மனைவி போன் செய்து தங்களுக்கு திருமணமானபோது வந்த ஒரு மழைக்காலத்தை பற்றி பேச முற்படும்போது, சாக்கு போக்கு சொல்லி அதை தவிர்க்கும் கட்டம் இன்றைய சபலிஸ்ட் கணவர்களுக்கு சூடு வைக்கும் இடம்..
க்ளைமாக்சில் தன மனைவி பற்றிய உண்மை அறிந்து மழையில் நனைந்துகொண்டே வீடு திரும்பி, தனது மனைவியை பின்புறமாக இருந்து கட்டியணைக்கும் அந்த ஒரு காட்சியிலேயே தனக்கு எல்லாம் தெரியும் என்பதையும் தனது அன்பையும் சுரேஷ்கோபி வெளிப்படுத்தும் இடம் டச்சிங்.. என்ன ஒன்று.. சுரேஷ்கோபி பேசும் திருவனந்தபுரத்து பாஷைதான் அவருடன் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.
காமெடி கல்பனா, இதில் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் சேச்சியாக நம்மை கவர்கிறார்.. டெலிபோன் காதலி மேக்னா ராஜுக்கு போனிலேயே காதல் பாடம் எடுக்கும் வேலை மட்டுமே… ரசனையுடன் காதலை சொல்லித்தரும் வேடத்தில் அனூப் மேனன் கச்சிதம்.. கடைசியில் அவருக்கு அடிக்கும் ஜாக்பாட் ஆச்சர்யம்..
நகைச்சுவை நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடுக்கு இதில் சீனியர் ஆபிசருடன் சேர்ந்து கொலைகளை துப்புத்துலக்கும் சீரியான போலீஸ் வேடம்.. காமெடி நடிகர் இந்திரன்ஸுக்கும் சீரியஸ் ரோல் தான். அதாவது சீரியசான சுரேஷ் கோபியை காமெடி பண்ணவைத்து விட்டு, காமெடி நடிகர்களை சீரியசாக்கி சாதனை படைத்திருக்கிறார் இயக்குனர் தீபன். அதேபோல சுரேஷ்கோபிக்கு பாடிகார்டாக வரும் நிஷாந்த் சாகரின் அனைவரையும் தடுக்கிவிடும் காமெடியும் சூப்பர் ரகம் தான்.
அனூப் மேனன் எழுதிய இரண்டே இரண்டு மென்மையான பாடல்களுக்கு மெல்லிசையால் வருடிக்கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன்.. ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவில் கோவா சம்பந்தப்பட்ட காட்சிகளும், இரவுக்காட்சிகளும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
இயக்குனர் தீபன் ஒரு மென்மையான குடும்பக்கதையை க்ரைம் பின்னணியில் சொல்ல முயற்சித்து ஆடியன்சை தந்திரமாக தனது வலையில் விழ வைத்திருக்கிறார்… சாராய வியாபாரி என்று பலரும் தன்னை அழைப்பதால் தனது இமேஜை உயர்த்துவதற்காக, ஒரு உதவி இயக்குனரிடம் சுரேஷ்கோபி தன்னைப்பற்றிய சினிமா எடுக்க சொல்வது கேரளாவில் ‘ஜிகர்தண்டா’ குடித்த பீலிங்கை ஏற்படுத்துகிறது.
அதேபோல வரிசையாக நடக்கும் கொலைகளும் சுரேஷ்கோபிக்கு கூறப்பட்ட ஜோசியமும் (ஒரு பெண்ணால் காப்பாற்றப்படுவது) எங்குமே ஒரு புள்ளியில் இணையாமல் போவதும் கதையை நகர்த்த இயக்குனரின் ஒருவிதமான தந்திரமான ஏமாற்று வித்தைதான். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் நம் மனதை தொட்டு அழுத்தமாக நின்றுவிடுகிறார் இயக்குனர் தீபன்..
எந்நேரமும் தங்களது கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியருக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என்று எண்ட் கார்டு போடுகிறார்கள்.. அதற்கு நூறு சதவீதம் தனது படத்தின் க்ளைமாக்ஸ் மூலமாக நியாயம் செய்திருக்கிறார்கள் கதாசிரியர் அனூப் மேனனும் இயக்குனர் தீபனும்.