ஒயின்ஷாப் பாரில் வேலைபார்க்கும் விக்ராந்த், அரவிந்த்(புதுமுகம்) இருவருமே யாருமற்ற அனாதைகளான நண்பர்கள்.. அந்த ஊரில் நர்சாக வேலை பார்க்கும் அபிநயாவை காதலிக்கிறார் அரவிந்த். தவிர அந்த ஊர் கவுன்சிலர் ராகுல் வெங்கட்டிடம் வலதுகையாக இருக்கும் போஸ் வெங்கட்டின் நட்பும் அரவிந்துக்கு உண்டு..
அரவிந்த் தனது மகளை காதலிப்பதை அறிந்த அபிநயாவின் அம்மாவோ, ரவுடியாக இருக்கும் தனது தம்பிக்குத்தான் அவரை கட்டிவைக்கவேண்டும் என உறுதியாக இருக்கிறார். இதனால் அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் செய்துகொள்கிறார் அபிநயா. கோபமான அவரது அம்மா, தனது ரவுடி தம்பியிடம் விஷயத்தை சொல்ல, அவர் பாலியல் தொழிலுக்காக தான் அனுப்பிவைக்கவுள்ள பெண்களுடன் சேர்த்து அபிநயாவை அடைத்து வைக்கிறார்.
அபிநயா மிஸ்ஸான விவகாரத்தில் அவளது தாய்மாமன் தான் காரணம் என கூறி, போஸ் வெங்கட்டிடம் உதவி கேட்கிறார் அரவிந்த். போஸ் வெங்கட்டினால் உதவ முடியாத சூழலில், இந்த விஷயங்களை எல்லாம் தாமதமாக அறிந்துகொள்ளும் விக்ராந்த், தனது நண்பனுக்கு உதவப்போன இடத்தில், கவுன்சிலரின் அண்ணனான அருள்தாசை போட்டுத் தள்ளி விட்டு தலைமறைவாகிறார்..
ஆத்திரமாகும் கவுன்சிலர் ராகுல், அரவிந்தை கொலைசெய்துவிட்டு விக்ராந்தின் வரவுக்காக காத்திருக்கிறார். விக்ராந்த் திரும்பி வந்தாரா, அபினயாவை பத்திரமாக மீட்டாரா, தனது நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை பழிதீர்த்தாரா.. இல்லை தானும் பலியானாரா..? என்பது க்ளைமாக்ஸ்.
விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் இது. தனது தம்பியின் சீரியஸ் மூடுக்கு தகுந்தவாறு ஒரு ஆக்சன் படத்தை தந்துள்ளார். விக்ராந்த் தனி நாயகனாக நடிக்கும் படத்தைவிட, நண்பனுக்காக, நண்பனின் காதலுக்காக போராடும் ‘பாண்டிய நாடு’ டைப் பாணியிலான கேரக்டர் இதிலும் அவருக்கு சரியாக பொருந்தியிருக்கிறது. எதிரிகளை பந்தாடும் அந்த பத்துநிமிட க்ளைமாக்ஸ் காட்சியில் விக்ராந்தின் உழைப்பு அபாராம்.
நண்பனாக நடித்திருக்கும் புதுமுகம் அரவிந்த் சில சாயல்களில் மாதவனை ஞாபகப்படுத்துகிறார்.. காதலிக்காக உருகும் காட்சியிலும், நண்பனை காட்டிக்கொடுகாமல் உயிர் விடும் காட்சியிலும் ஸ்கோர் பண்ணுகிறார். கதாநாயகி என்றால் விக்ராந்தை காதலிக்கும் பார்வதி நிர்பனை விட அபிநயாவைத்தான் சொல்லியாகவேண்டும்.. காதலனுடன் நடத்தும் ஊடல், கூடல் ரொமான்ஸில் கலக்குபவர், இடைவேளைக்குப்பின் கடத்தப்பட்டு பரிதாபம் அள்ளுகிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன் க்ரூப் நடிகர்கள் அனைவரும் சரியான் தேர்வு.. அதிலும் அருள்தாஸ் கொடூரம், காமெடி என இரண்டுவித பாவங்களை வெளிப்படுத்துவது சூப்பர். மெயின் வில்லனாக வரும் கவுன்சிலர் ராகுல் வெங்கட்டும், அவரது வலதுகையாக வரும் போஸ் வெங்கட்டும் சரியான தேர்வு..
நன்பனின் காதலுக்கு உதவி, அவனது சாவுக்கு பழிதீர்க்கும் ‘பிதாமகன்’ பாணி கதைதான். இதுதான் நடக்கப்போகிறது என பல காட்சிகளை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. ஆனால் ஆரம்ப காட்சியில் வரும் அருள் தாஸ், இடைவேளைக்குப்பின் வில்லனின் அண்ணனாக என்ட்ரி கொடுப்பது உண்மையிலேயே ட்விஸ்ட் தான்.
விக்ராந்தின் அம்மாவாக வரும் பெண் பாலியல் தொழிலாளியாக்கப்படுவதும், மகனை காப்பற்ற உயிர்விடுவதும் நல்ல பிளாஸ்பேக் தான் என்றாலும் அதை அவ்வளவு நீளமாக இழுத்திருக்கவேண்டுமா என்ன..? ஆனாலும் ஆக்சன் பட பிரியர்களுக்கு தேவையான கரம் மசாலாவை இடைவேளைக்கு பின்னர் தேவையான அளவு சேர்த்திருப்பதால் படம் போரடிக்காமல் நகருகிறது.
தாக்க தாக்க… படத்தை ஆக்சன் காட்சிகளுக்காக ஒருமுறை தாராளமாக பார்க்க பார்க்க.. நீங்கள் கிளம்பலாம்.