நடிகர்கள் : ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், முத்துகுமார், பாலசரவணன், ரைச்சல் ரெபக்கா, இளவரசு, ஜார்ஜ் மரியான்
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார்
இயக்கம் : சிவகுமார் முருகேசன்
தயாரிப்பு : பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் – சுதன் சுந்தரம், சிவகார்த்திகேயன்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தாய் கிழவி’ படம் எப்படி இருக்கிறது ?, விமர்சனத்தை பார்ப்போம்.
மூதாட்டி ராதிகா சரத்குமார், கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுக்கும் அவர், அதை வசூலிப்பதில் கரார் பேர்வழி என்பதால், ஊர் மக்கள் அவரை பார்த்தாலே அச்சப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்ற எண்ணத்தோடும் இருக்கிறார்கள். அதேபோல், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது சொந்த மக்களும் அவரது இறப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, ஒரு நகைக்கடை முதலாளி மூலம் அவர் ஒரே சமயத்தில் 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது.
அந்த ஊர் வழக்கப்படி, தாய் இறந்த பிறகு வீடு, நிலம் ஆகியவை மகன்களுக்கும், அவரது நகைகள் பெண் பிள்ளைக்கு சேரும் என்பதால், தாயின் இறப்பை தள்ளி வைத்து, அதற்குள் யாருக்கும் தெரியாமல் மொத்த நகைகளையும் கைப்பற்றி பிரித்துக் கொள்ள மகன்கள் திட்டம் போடுகிறார்கள். அதற்காக ராதிகாவின் இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது மூன்று மகன்கள், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நினைத்தது போல் ராதிகா பிழைத்தாரா?, அவரது நகைகளை மகன்கள் கைப்பற்றினார்களா ? என்பதே படத்தின் கதை.
பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் மூதாட்டியாக நடித்திருக்கும் ராதிகா, கதாபாத்திரத்திற்காக மேக்கப், உடல் மொழி என்று அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். தைரியமும், திமிரும் நிறைந்த ஒரு பெண் கதாபாத்திரத்தை தனது நடிப்பில் சரியான முறையில் பிரதிபலித்திருந்தாலும், அவரது மேக்கப் மற்றும் சில மேனரிசங்களை ஏற்றுக்கொள்ள முடியாததோடு, கொஞ்சம் ஓவராகவும் இருக்கிறது.
ராதிகாவின் மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் தங்களது வழக்கமான நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், தன் கேமரா மூலம் தென் தமிழக கிராமத்து மண்ணையும், மண் சார்ந்த மக்களையும் திரையில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். ஷான் லோகேஷின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஒரு பெண் சுயமாக இயங்குவதோடு, வயதானாலும் தன்னம்பிக்கை குன்றாமல், தைரியத்துடன் பிறரின் ஆதரவு மற்றும் அனுதாபத்தை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும், என்ற கருத்தை நகைச்சுவை உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.
தென் மாவட்ட கிழாம மக்களின் வாழ்வியல் மற்றும் பவுனுத்தாயின் வாழ்க்கை ஆகியவை திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எதார்த்தமாக மக்கள் பேசும் வசனங்கள் மற்றும் வர்களின் பழக்க வழக்கங்களை வைத்தே காமெடி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சிவகுமார் முருகேசன், இந்த ‘தாய் கிழவி’ மூலம் மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5