போலியாக மதச்சாயங்களை பூசிக்கொண்டு வெகு தூரத்தில் இருந்தபோது இரு மனங்களில் காதல் பற்றிக்கொண்டது. வேஷம் கலைந்து அருகில் நெருங்கும்போது காதல் விலகி வெகுதூரம் போனது. இப்படிச்சொன்னால் ஏதாவது புரிகிறதா..?
விஜய ராகவாச்சாரி என்கிற ஜெய்யும், ப்ரியா என்கிற நஸ்ரியாவும் ஒரு ரயில் பயணத்தின்போது வெவ்வேறு முஸ்லீம் பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளில் பயணிக்கிறார்கள். அதே பெயரில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பாகிறார்கள். ஜெய் முஸ்லீமாகவே நினைத்து நஸ்ரியாவை காதலுடன் தொடர்கிறார்.
நஸ்ரியாவும் ஜெய்யை முஸ்லீமாகவே நினைத்து தயக்கத்துடன் காதலை ஏற்கிறார். இதில் ஜெய் ஒரு படி மேலாக ஒரு முஸ்லீம் பெரியவர் குடும்பத்துடன் நெருங்கிப்பழகி அவர்களது மத சம்பிரதாயங்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் தங்கள் வீட்டில் தங்கள் காதலைச்சொல்கிறார்கள்.
ஆனால் அப்போது இருவரின் முஸ்லீம் வேஷமும் அவர்களை அறியாமல் கலைகிறது. இதனால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கிறது. ஆனால் மத அடையாளத்துடன் இருவருமே காதலை அங்கீகரித்ததால் இப்போது நிஜ முகங்கள் வெளிப்பட்டதால் காதல் ஒட்டவில்லை. திருமணத்தை நிறுத்தி இருவரும் பிரிகிறார்கள்.. காதல் மீண்டும் அவர்களை சேர்த்ததா என்பது க்ளைமாக்ஸ்..
ஜெய்க்கு லட்டு மாதிரியான வேடம். அடித்து பின்னுகிறார். ஜெய் மாதிரி சென்சிடிவான ஆட்கள் காதலிக்கும்போது காதலியை கவர எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போவார்கள் என்பதை முஸ்லீம் கலாச்சாரங்களை பழக ஆரம்பிப்பதன் மூலம் சரியாக பிரதிபலித்திருக்கிறார் ஜெய்.
நஸ்ரியாவின் கேரக்டரும் அவரது காதலும் அழுத்தம் இல்லாமல் இருந்தாலும் நஸ்ரியாவின் ஒவ்வொரு செய்கையுமே பார்த்துக்கொண்டிருக்கலாம் போல அவ்வளவு க்யூட்.. ரயில் பயணியாக வரும் பாண்டியராஜனும், டிக்கெட் புரோக்கராக வரும் மயில்சாமியும் அந்த நேரத்துக்கு மட்டும் கலப்பூட்ட முயற்சித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் என்றாலும் ஜெய் மீது அன்பு செலுத்தும் அந்த முஸ்லீம் பெரியவர் நம்மை கவர்கிறார்.
ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை.. இந்துக்கள் இருவர் முஸ்லீம்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு காதலிக்கும்போது ஏற்படும் மன உறுத்தலை படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் அனீஸ். அருமையான கதைக்களம்.. இடைவேளை வரை, ஏன் இடைவேளைக்குப்பின் இருவருக்கும் உண்மை தெரியும் வரை கதையை சரியான கோணத்தில் கொண்டு சென்றிருக்கிறார் அனீஸ்.
ஆனால் க்ளைமாக்சிற்கு முன்பு எப்படி செல்வது என தடுமாறி நிற்பது நன்றாக தெரிகிறது. இருவரும் மனங்களை காதலிக்கின்றனரா அல்லது மத அடையாளங்களை காதலித்தனரா என்பதில் குழம்பி இருப்பதும் அதனாலேயே ஜெய் தனது திருமணத்தை நிறுத்துவதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
குறிப்பாக நஸ்ரியாவின் அமெரிக்க பயணம், இன்னொரு திருமண முயற்சி, கிளைமாக்ஸ் சண்டையால் மீண்டும் காதலர்கள் ஒன்று சேர்வது இவற்றையாவது மாற்றி யோசித்திருந்தால் இன்னும் சுவராஸ்யம் ஏற்பட்டிருக்கும். இருப்பினும் மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமான காட்சிகளையும் வசனங்களையும் முன்னிறுத்தியதற்காக இயக்குனர் அனீசை பாராட்டலாம்.