‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ விமர்சனம்

நடிகர்கள் : த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத், ஆலி, ரகு பாபு
இசை : அருணகிரி
ஒளிப்பதிவு : சி.விஜய ஸ்ரீ
இயக்கம் : ராஜசேகர்.ஜி
தயாரிப்பு : அருண் விஷுவல்ஸ் – கோவை ரமேஷ்

த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகியோரது நடிப்பில், ராஜசேகர்.ஜி இயக்கத்தில், கோவை ரமேஷ் தயாரிப்பில், கிளு கிளு காதல் படமாக வெளியாகியிருக்கும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ ரசிக்க வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவர் இடையே ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. காதல் காமத்தில் முடியும் போது, நாயகன் தான் ஏற்கனவே அக்கா வயதுள்ள ஒரு பெண்ணுடனும், ஆண்டி வயதுள்ள ஒரு பெண்ணுடம் உடலுறவு வைத்துக் கொண்ட உண்மையை காதலியிடம் சொல்கிறார். இதனால் கோபமடையும் காதலி, இவனை இப்படியே விட்டால், காமலீலைகளை தொடர்ந்துக் கொண்டே இருப்பான் என்பதால், கல்யாணம் செய்து கணவனாக்கிக் கொள்கிறார்.

தன் காதல் கணவனை அழைத்துக் கொண்டு கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, தன் மனைவி மூலம் கிடைக்கப் போகும் குடும்பத்தை காண ஆவலோடு செல்லும் த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியா மற்றும் அம்மா ராதாவை பார்த்ததும், பேரதிர்ச்சி அடைகிறார். அவரது அதிர்ச்சிக்கான காரணம் என்ன ?, அதிர்ச்சியில் இருந்து மீண்டாரா? இல்லை அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை எதிர்கொண்டாரா? என்பதை அடல்டு காமெடியாக சொல்வதே ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’.

இப்படி ஒரு கதையில் நாயகனாக நடித்திருக்கும் த்ரிகுணின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அடல்டு காமெடி படத்தில் நடிப்பது பெரிதல்ல, ஆனால் இப்படிப்பட்ட ஒரு சில்மிஷமான சிந்தனையோடு எழுதப்பட்ட கதையில் பயணித்திருப்பது பெரிய விசயம் மட்டும் அல்ல, நாயகனுக்கு மூச்சு முட்டவும் செய்திருக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் அறிவுரை மூலம் காதலனை கட்டிலில் சாய்ப்பதும், அவர் செய்த தவறை மன்னித்து மீண்டும் மீண்டும் அவருடன் நெருக்கம் காட்டுவதும் என்று, இப்படி ஒரு பெண் காதலியாகவும், மனைவியாகவும் அமைவது தான் இறைவன் கொடுத்த வரம், என்று பார்வையாளர்களை ஏங்க வைத்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தன் முகத்தை மட்டும் இன்றி உடல் அங்கங்களையும் காட்டி பார்வையாளர்களை கிரங்கடிக்கும் இனியா, உதட்டோடு உதடு முத்தமிட்டு, ”பாடம் சொல்லிக் கொடு”, என்று நாயகனிடம் கேட்கும் டியூசன் டீச்சராக நடித்து பரங்கிமலை ஜோதியையே தோற்கடிக்கும், கவர்ச்சி மலையாக பார்வையாளர்களை மயக்குகிறார்.

‘சுந்தாரா டிராவல்ஸ்’ படத்தில் இளமையாக இருந்த போது கூட ராதாவை இப்படி ரசித்திருக்க மாட்டார்கள் போல, அம்மணி இந்த படத்தில் ஆண்டியாக வந்து அதிரடி காட்டியிருக்கிறார்.

தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், காம நெடி அதிகம் இருப்பதால், இவர்களது காமெடி குறைவாகவே தெரிகிறது.

சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பளிச்சென்று இருக்கிறார்கள். அவர்களது பிரகாசம் காட்சிகளிலும் இருப்பதால், படம் முழுவதும் ஒரே வண்ணமயம் தான்.

அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காம காட்சிகளை தூக்கலாக காட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் கே.குமார், அதிஷ்ட்டசாலி தான். பார்வையாளர்களுக்கே இவ்வளவு காட்டியிருக்கிறார் என்றால், அவர் எவ்வளவு பார்த்திருப்பார்…!

எழுதி இயக்கியிருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்டு காமெடி என்ற பெயரில் அசிங்கமான சிந்தனையை, ஆபாசமாக சொல்லியிருந்தாலும், அதை இலை மறை காய் மறையாக சொல்லியதோடு, காமெடி பின்னணியில் சொல்லி இளைஞர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
சர்ச்சையான கதைக்கரு என்றாலும், அதற்கு காமெடி என்ற போர்வையை போர்த்தி, மேலோட்டமாக சொல்லி சமாளித்திருக்கும் விதம் படத்தை முகம் சுழிக்காமல் பார்க்க வைத்திருக்கிறது.

படத்தில் இடம்பெற்றிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களும், சில நேரடியான வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்தும் விதமாக இருக்கிறது. கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் இடையே இருக்கும் எல்லையை சரியாக கணித்து காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜசேகர்.ஜி, இந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ இளசுகளை கொண்டாட வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3.2/5

sweety naughty crazy movie reviewsweety naughty crazy reviewதமிழ்ப் படம் ஸ்வீட்டில் நாட்டி கிரேஸி விமர்சனம்ஸ்வீட்டில் நாட்டி கிரேஸி விமர்சனம்