நடிகர்கள் : ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, அழகம் பெருமாள், அஜய், துளசி
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஷாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : செல்வகுமார்.எஸ்.கே
இயக்கம் : அந்தோணி பாக்யராஜ்
தயாரிப்பு : சுஜாதா விஜயகுமார்
கொலை குற்றவாளியான ஜெயம் ரவி, 14 வருடங்களுக்குப் பிறகு பரோலி வெளியே வருகிறார். அப்படி வரும் அவர் மீது மேலும் சில கொலை பழிகள் விழிகிறது. தான் அந்த கொலைகளை செய்யவில்லை என்று ஜெயம் ரவி மறுத்தாலும், அவர் தான் கொலையாளி என்பதில் உறுதியாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும், ஜெயம் ரவி கொலை குற்றவாளியானது எப்படி, அவர் மீது சுமத்தப்படும் கொலைகளின் பின்னணி என்ன என்பதையும் சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘சைரன்’ படத்தின் மீதிக்கதை.
லுக்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஜெயம் ரவி, தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கும் ஜெயம் ரவி, வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு இரண்டிலும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அதே போல், பல உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், பல இடங்களில் தனது திமிரான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி அப்ளாஷ் பெருகிறார்.
ஜெயம் ரவியின் மனைவியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், வரும் காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி வேடம் சமுத்திரக்கனிக்கு புதிதல்ல என்றாலும், இதுவரை பேசாத வசனங்களை பேசி நடித்திருக்கிறார். காக்கி சட்டைப் போட்டுக்கொண்டு கருத்து பேசிய சமுத்திரக்கனி இதில், பேசும் வசனங்கள் அத்தனையும் தீயாக இருக்கிறது.
ஜெயம் ரவிக்கு நிழல் காவலராக வரும் யோகி பாபு, படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயம் ரவியுடனான அவரது புதிய கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், அஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என அனைத்து நட்சத்திரங்களும் அளவாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், திரைக்கதையோட்டத்திற்கும் பெரும் பலமாக பயணித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையை அதிகம் சத்தமின்றி அளவாக கையாண்டிருக்கும் ஷாம்.சி.எஸ், திரைக்கதையின் பரபரப்புக்கு எந்தவித பாதகம் இன்றி பணியாற்றி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார். எஸ்.கே காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ரூபன் திரைக்கதையில் உள்ள திருப்பங்களை சரியான முறையில் தொகுத்து, படத்தை இறுதிவரை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
படம் தொடங்கிய உடனே நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், அடுத்தடுத்த காட்சிகளை திருப்பங்களோடு நகர்த்தி சென்று படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறார்.
படம் முழுவதும் ஆக்ஷன் உணர்வு பயணித்தாலும், குடும்ப செண்டிமெண்ட் மற்றும் அப்பா – மகள் செண்டிமெண்ட்டை அல்டிமேட்டாக சொல்லி அசத்தியிருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், முழுமையாக கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விசயங்களையும் படத்தில் வைத்திருந்தாலும், அதை அளவாக கையாண்டு எந்த இடத்திலும் லாஜிக் மீறல் இல்லாத மேஜிக் நிகழ்த்தியுள்ளார்.
அதிரடி காட்சிகளின் மூலம் ஜெயம் ரவியை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக காண்பித்து, அவரது ரசிகர்களை கொண்டாட செய்திருப்பதோடு, குடும்ப ரசிகர்களையும் குஷிப்படுத்தும் விதமான காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த ‘சைரன்’ திரை ரசிகர்களுக்கான விருந்து.
ரேட்டிங் 4/5