’சிங்கப்பூர் சலூன்’ விமர்சனம்

தென்காசியை சேர்ந்த நாயகன் ஆர்ஜே பாலாஜி, தனது ஊரில் சலூன் நடத்தி வரும் லாலை பார்த்து தானும் சிகை அலங்கார கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதன்படி, அவரிடம் அது தொடர்பான விசயங்களை கற்றுக்கொள்பவர், பெரியவன் ஆனதும் அந்த தொழிலில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால், அவரது குடும்பத்தார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களுக்காக பொறியியல் படிக்கிறார். படிப்பு முடிந்ததும் தனது ஆசைப்படி சலூன் தொழிலில் ஈடுபட முடிவு செய்கிறார். இதனால், அவருடையா காதலி அவரை விட்டு பிரிந்து விடுகிறார். என்ன நடந்தாலும் முடி வெட்டும் தொழிலில் மிகப்பெரிய அளவில் தன்னால் சாதிக்க முடியும் என்று நம்பும் ஆர்ஜே பாலாஜி, அதற்காக பல கோடிகளை முதலீடு செய்து மிகப்பெரிய சலூனை திறக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அவர் எதிர்பார்க்காத வகையில் பிரச்சனைகள் உருவெடுக்க அவற்றில் இருந்து விடுபட்டு தான் நினைத்து போல் சிகை அலங்கார கலைஞராக சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆர்ஜே பாலாஜி தான் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார். சுற்றியிருப்பவர்களை காமெடியில் ஸ்கோர் பண்ண விட்டுவிட்டு, தன்னை ஒரு கதாபாத்திரமாக முன் நிறுத்தியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, ஆர்ஜே பாலாஜியை நல்ல நடிகராகவும் அடையாளப்படுத்தியிருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ், மற்றொரு கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு கலக்கியிருக்கிறார். இதுவரை பார்த்திராத ஒரு சத்யராஜை நிச்சயம் இந்த படத்தில் பார்க்கலாம். முதல் பாதி முழுவதையும் தனது காமெடி கலாட்டா மூலம் ஜாலியாக நகர்த்தி செல்கிறார்.

கிராமத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சிகை அலங்கார கடை நடத்தி வரும் லால், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

ரோபோ சங்கர் சத்யராஜை கலாய்க்கும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ் படம் முழுவதும் வந்து திரைக்கதையின் ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார். ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஒரு சில காட்சிகளில் வரும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை குறையில்லை.

செல்வா.ஆர்.கே-வின் படத்தொகுப்பு, கலை இயக்குநரின் பணி அகியவையும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை நகைச்சுவை உணர்வோடு ஆரம்பிக்கும் இயக்குநர் கோகுல், அதே பாணியை இதிலும் கடைபிடித்திருக்கிறார். சத்யராஜ் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு முதல் பாதி முழுவதையும் படு ஜாலியாக நகர்த்தி ரசிகர்களை சிரிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் நல்ல கருத்தை சொல்லி சிந்திக்க வைக்கிறார். அதை பிரச்சாரம் போன்று சொல்லாமல், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருப்பது படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

படத்தின் முதல் பாதி முழுவதும் திரையரங்கில் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்கும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் கோகுல், அந்த காட்சிகளை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிப்பது போல் அமைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. அதே சமயம், இரண்டாம் பாயில் காமெடியை தவிர்த்து விட்டு பயணித்திருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்தாலும், இயக்குநர் சொல்லும் மெசஜ் மற்றும் அதை சார்ந்த வசனங்கள், ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு போன்றவை அந்த பலவீனத்தை மறைத்து படத்தை கொண்டாட வைக்கிறது.

இளைஞர்களுக்கான உத்வேகத்தை கமர்ஷியலாக சொல்லியிருப்பதோடு, அதை குடும்ப பின்னணியில் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து மகிழ்வதற்கான சரியான படம்.

ரேட்டிங் 4\5

Director Gokulmovie newsMovie Reviewrj balaji in singapore saloon reviewsingapore saloon movie reviewtamil movie singapore saloon reviewசிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்சிங்கப்பூர் சலூன் பட விமர்சனம்சிங்கப்பூர் சலூன் விமர்சனம்தமிழ்ப் படம் சிங்கப்பூர் சலூன் விமர்சனம்