‘ஷாட் பூட் த்ரீ’ விமர்சனம்

நடிகர்கள் : சினேகா, வெங்கட் பிரபு, அருணாச்சலம் வைத்தியநாதன், யோகி பாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த், சாய் தீனா
இசை : ராஜேஷ் வைத்யா
ஒளிப்பதிவு : சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்
இயக்கம் : அருணாச்சலம் வைத்தியநாதன்
தயாரிப்பு : யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் – அருணாச்சலம் வைத்தியநாதன்

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘ஷாட் பூட் த்ரீ’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குழந்தைகளுக்கான இப்படம் குழந்தைகளை கவர்ந்ததா? விமர்சனத்தை பார்ப்போம்.

ஐடி துறையில் பணியாற்றும் வெங்கட் பிரபு – சினேகா தம்பதிக்கு ஒரே மகன் கைலாஷ் ஹீட். தாய், தந்தை எந்த நேரமும் பணியில் பரபரப்பாக இருப்பதால், தன்னுடன் பழகுவதற்கும், நேரல் செலவிடுவதற்கும் நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறார். அந்த நாய் திடீரென்று காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து கைலாஷ் நாயை தேடுகிறார். நாய் கிடைத்ததா? இல்லையா? என்பதை சிறுவர்களின் தேடல் பயணத்தோடு சொல்வது தான் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தின் மீதிக்கதை.

சினேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு நடுத்தர வயது பெற்றோர்களாக கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு அளவான நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கைலாஷ் ஹீட், வேதாந்த், பூவையார் மூன்று சிறுவர்களும், சிறுமி பிரணித்தியும் தங்களது இயல்பான வாழ்வியலை நடிப்பாக வெளிக்காட்டி ரசிகர்களை கவர்கிறார்கள்.

ஏழை வீட்டு பிள்ளையாக இருந்தாலும், நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் பூவையாரின் வேடமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் சிறப்பு. பாடகியாவதற்கு ஆசைப்படும் பிரணிதியின் நடிப்பில் மட்டும் அல்ல குரலிலும் முதிர்ச்சி தெரிகிறது.

சிறுவர்களின் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கும் கைலாஷ் ஷீட், குழந்தை அஜித் போல் இருப்பதோடு, தெளிவான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். பல்லுவாக நடித்திருக்கும் வேதாந்த் வசந்த் ஹல்க் போல் பல்க்காக இருந்தாலும், பால் வடியும் முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் குறும்புகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.

யோகி பாபு மூன்று காட்சிகளில் வருகிறார். ஆனால், அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விசயம் இல்லாதது பெருத்த ஏமாற்றம். சிவாங்கி, சாய் தீனா, இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாத், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் சுகேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எளிமையான பணி என்றாலும் கதையின் நோக்கத்தை சிதைக்காமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை சுமார் ரகமாக இருப்பதோடு, தேவையில்லாத சத்தங்களை நிரப்பி சில இடங்களில் காட்சிகளை சிதைக்கவும் செய்திருக்கிறது.

சிறுவர்களின் வாழ்க்கை, அவர்களுடைய எதிர்பார்ப்பு மற்றும் விலங்குகள் மீது இரக்கம் காட்டுவது போன்றவற்றை மையப்படுத்தி படம் நகர்ந்தாலும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் பல பெற்றோர்கள், நிகழ்காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போவதால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகிறது என்ற விசயத்தையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன்.

விலங்குகள் மீது இரக்கம் காட்டுவது, சிறுவர்களின் தேடல் பயணம் போன்றவற்றை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சிறுவர்கள் ஜாலியாக பார்க்க கூடிய சிறுவர்களுக்கான படமாக கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 3/5

arunachalam vaidhyanathanshot bhoot three movie reviewtamil movie shot bhoot three review