செஞ்சிட்டாளே என் காதல ; விமர்சனம்


நாயகன் வீரா திடீரென ஒருநாள் காணமல் போகிறார்.. நண்பர்களும் அவரின் அம்மா, தங்கை ஆகியோரும் வலைபோட்டு தேடுகிறார்கள்.. அவரது (முன்னாள்) காதலியான அனுவுடன் வீராவுக்கு காதல் முறிவு ஏற்பட்டதால் ஒருவேளை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமோ அல்லது அனுவின் அப்பா மூலமாக ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாமோ என விசாரிக்கிறார்கள்..

இவர்கள் அத்தனை பேரையும் பதற்றப்பட வைத்த வீரா திடீரென இடைவேளையின்போது வந்து நிற்கிறார்.. வீரா எங்கே போனார்.. வரத்து காதல் பிரேக் அப் ஆனதற்கு கரணம் என்ன என இன்ச் பை இன்ச்சாக அலசியிருக்கிறார்கள்.. இதற்கிடையே படம் ஆரம்பித்தில் இருந்து, வீராவுக்கும் அனுவுக்குமான காதல் உருவானது, பிரேக் அப் வரை போனதற்கான விஷயங்களை விட்டு விட்டு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்..

வீராவாக நடித்திருக்கிறார் டைரக்டர் எழில் துரை.. இவர்தான் படத்தின் டைரக்டரும் கூட.. அதனால் காட்சிகளை தனக்கேற்றபடி வளைத்து புகுந்து விளையாடி இருக்கிறார்.. ஆரம்பத்தில் இவரெல்லாம் ஹீரோவாப்பா என நாம் ஜெர்க் ஆனாலும் போகப்போக கதையுடன் ஒன்றி படம் பார்க்க ஆரம்பித்ததும் அந்த கேரக்டராகவே நமக்கு தெரிகிறார். காதலியுடனான பிரச்சனை தொடங்கியது முதல் அவரது டயலாக் டெலிவரியும், பாடி லாங்குவேஜும் ஆச்சர்யப்படுத்துகின்றன.

அடேங்கப்பா காதலி அனுவாக நடித்திருக்கும் (விஜய் டிவி ‘ஆபீஸ்’ புகழ்) மதுமிலா, ஒவ்வொரு காதலாக பிரேக் அப் பண்ணிவிட்டு, புதுப்புது காதலர்களாக தேடும்போது இவரல்லவோ புரட்சிப்பெண் என நம்மை வாய்பிளக்க வைக்கிறார். ஆனாலும் நம்ம பையன்கள் காதல் ஒர்க் அவுட் ஆனபின் சந்தேகப்பிராணிகளாக மாறி பண்ணும் டார்ச்சர்களை பார்க்கும்போது அவரது கேரக்டர் மீது குற்றம் சொல்லவும் முடியவில்லை.

இன்னொரு நாயகியாக அபிநயா. நாயகனை ஒருதலையாக காதலித்து பின் அவரை கைபிடிக்கும் கேரக்டரில் சிறப்பாக செய்திருக்கிறார். வீராவின் அம்மாவாக ‘மெட்ராஸ்’ ரமா, தங்கையாக நடித்துள்ள திவ்யா, நண்பனாக நடித்துள்ள கயல் வின்சென்ட் என உப கதாபாத்திரங்கள் அனைத்தும் உபத்திரவம் பண்ணாத கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்..

இளசுகளின் காதல் எப்படி அற்பாயுசில் முடிகிறது.. இதற்கான பிள்ளையார் சுழி யார்மூலம் போடப்படுகிறது என்பதை ஆண்களின் கோணத்தில் பெண்களை குற்றப்படுத்துவதாக மட்டுமே சொல்லியிருப்பது மிகப்பெரிய குறை.. காதலி பேட்மிண்ட்டன் பிராக்டீஸ் செய்யும்போது காதலன் வேலைவெட்டிக்கெல்லாம் போகாமல் அவளுக்கு ஜூஸ் பிழிந்து தருவதே வேலையாக இருப்பதை பார்க்கும்போது இவனுங்களுக்கு இந்த பிரேக் அப் அவசியம் தான் என்றே சொல்ல தோன்றுகிறது.

விபரம் தெரியாமல் இந்தப்படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைபவர்களுக்கு அடடா தெரியாமல் வந்து மாட்டிகொண்டோமே என்கிற எண்ணத்தை ஏற்படுத்தாமல், பரவாயில்லைய்யா பாக்கிற மாதிரித்தான் படம் பண்ணிருக்காங்க என்று சொல்லவைக்கும்படியான படமாக இது இருப்பது படத்திற்கு பிளஸ்.

Senjitale Yen KathalaSenjitale Yen Kathala Movie Reviewசெஞ்சிட்டாளே என் காதல ; விமர்சனம்மதுமிலாவீரா