கார்களில் லிப்ட் கேட்டு ஏறி லிப்ட் கொடுத்தவர்களையே கொல்கிறான் சைக்கோ கொலைகாரன் ஒருவன். எம்.எல்.ஏ ஒருவரின் காரை ஒப்படைக்க செல்லும் ட்ரைவர் கார்த்திக் யோகி, அதில் அவசரமாக தனது திருமணத்திற்கு செல்லவேண்டி லிப்ட் கேட்டு பயணிக்கும் போலீஸ் அதிகாரி பெனிட்டோ இவர்கள் இருவரின் பயணத்தில் சைக்கோ கொலைகாரனும் லிப்ட் கேட்டு ஏறுகிறான்.. சைக்கோவின் கைவரிசையில் இருந்து இருவரும் தப்பினார்களா அல்லது கொலைகாரன் இவர்களிடம் சிக்கினானா என்பது க்ளைமாக்ஸ்.
கார் பயணம், சைக்கோ கொலைகாரன் என படம் நெடுக திகிலையும் த்ரில்லையும் தூவியிருக்கிறார் இயக்குனர் குகன். போலீஸ் அதிகாரியாக வரும் பெனிட்டோ ஒரு பக்கம் நடிப்பில் மிடுக்கு காட்டுகிறார் என்றால், மெக்கானிக் ட்ரைவராக வரும் கார்த்திக் யோகி கலகலப்பூட்டுகிறார். சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்..
எம்.எல்.ஏவாக வரும் அருண், சைக்கோவாக வரும் மதிவாணன் ராஜேந்திரன் என அனைவரும் மிகையில்லாத இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விஷால் சந்திரசேகரின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் காட்டின் இயற்கை அழகை அள்ளி வந்திருப்பதுடன், சவாரியின் பயங்கரத்தையும் உணர்த்தி இருக்கின்றன.
இடைவேளைக்குப்பின் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்கிற எண்ணம் படம் முடிந்ததும் இயல்பாகவே எழுகிறது. இருந்தாலும் ஒரு நல்ல க்ரைம் த்ரில்லருக்கு உண்டான அம்சங்கள் இந்த ‘சவாரி’யில் நிறையவே இருக்கின்றன.