பாசக்கார அண்ணன் தம்பியும் அவர்களின் காதல் சார்ந்த கிராமத்து வாழ்க்கையும் தான் இந்த ராஜா மந்திரி.
காளி வெங்கட் அண்ணன்.. கலையரசன் தம்பி.. இவர்களது பக்கத்து வீட்டுக்கு குடிவரும் வைஷாலி மீது காளி வெங்கட் காதலாகிறார். ஆரம்பத்தில் கலையரசனும் சேர்ந்த அவரை டாவடிக்க அவரை கல்லூரிக்கு அனுப்பி தனது காதலை காப்பாற்ற முயற்சிக்கிறார் காளி வெங்கட். கல்லூரியில் சேரும் கலையரசன் உடன் படிக்கும் ஷாலின் சோயாவை காதலிக்கிறார்..
கிராமத்திற்கு திரும்பி வரும் கலையரசன் தனது அன்ன இன்னும் தன காதலை வைஷாலியிடம் சொல்லாமல் இதயம் முரளி போல இருப்பதைக்கண்டு அவரை தூண்டிவிடுகிறார்.. இதனால் வைஷாலி குடும்பத்துடன் இவர்கள் குடும்பத்துக்கு பிரச்சனை ஏற்பட, வைஷாலி ஊரைவிட்டே போகிறார்.. காளி வெங்கட்டும் தனது காதலியை தேடிப்போகிறார்.. காதல் கைகூடியதா என்பது க்ளைமாக்ஸ்.
படத்தின் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை வைத்து பார்த்தால் காளி வெங்கட் தான் ராஜா.. கலையரசன் தான் மந்திரி என சொல்லும் விதமாக கதாநாயகன் ரேஞ்சில் காளி வெங்கட் காமெடி, குணச்சித்திர நடிப்பில் கலக்குகிறார். கலையரசனும் இந்தப்படத்தில் முழு ஹீரோவாக மாறியிருக்கிறார்.
காமெடி கூட்டணிக்கு கைகோர்த்திருக்கும் பாலசரவணன் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார்.. கதாநாயகிகளில் ஷாலின் சோயா பரவாயில்லை என்றாலும், கிராமத்து பைங்கிளியாக அமைதியாக வரும் வைஷாலி தான் ரசிகர்களை அதிகம் ஈர்க்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் இசை நாளுக்கு நாள் மெருகேறி வருவது தெரிகிறது.
கிராமத்து கதைகள் குறைவாக வரும் இந்த காலகட்டத்தில் அறிமுக இயக்குனராக களம் இறங்கியிருக்கும் உஷா கிருஷ்ணன் அருமையாக கதை சொல்லியிருக்கிறார்.. நகைச்சுவையும் மென்சோகமும் மாறி மாறி இழையோடினாலும் எந்த இடத்திலும் போரடிக்காமல், கதையில் எதையும் வலிந்து திணிக்காமல் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்தி இருக்கிறார்.