’ரகு தாத்தா’ விமர்சனம்

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : யாமினி யக்ஞமூர்த்தி
இயக்கம் : சுமன் குமார்
தயாரிப்பு : அம்பாலா பிலிம்ஸ் – விஜய் கிரகந்தூர்

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘ரகு தாத்தா’ ரசிகர்களை சிரிக்க வைக்கிறதா? அல்ல தலைதெறிக்க ஓட விடுகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

இந்தி எதிர்ப்பு காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. புனைப் பெயரில் கதைகள் எழுதும் எழுத்தாளராகவும், தீவிரமான இந்தி எதிர்ப்பாளருமான நாயகி கீர்த்தி சுரேஷ், எந்த வகையிலும் தனது ஊரான வள்ளுவன் பேட்டையில் இந்தி மொழி நுழைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக மக்களை திரட்டி பல போராட்டங்களையும் நடத்தி வருகிறார். ஆனால், சூழ்நிலை அவரை இந்தி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளுகிறது.

இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடுவதில் வீரமங்கையாக பலருக்கு முன்மாதிரியாக திகழும் கீர்த்தி சுரேஷ், தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக இந்தி தேர்வில் வெற்றி பெற இந்தி மொழியை கற்றுக்கொண்டாரா அல்லது வீரமங்கையாக நின்று தொடர்ந்து இந்தி மொழியை எதிர்த்ததோடு, தனது பிரச்சனையில் இருந்தும் விடுபட்டாரா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ரகு தாத்தா’.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதோடு, பெண்ணியம் பேசும் புரட்சிகரமான மங்கையாக வலம் வந்து, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கூட்டமே இல்லாத பொதுக்கூட்டத்தில் தொண்டை வலிக்க பேசுபவரை போல் தன்னால் முடிந்தவரை ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

தேவதர்சினி, ஆனந்தசாமி, ரவீந்திர விஜய் ஆகியோரை தவிர மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரும் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் போல் விபத்தில் சிக்கி படத்தை சிதைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தி, பீரியட் படம் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெட்டிருந்தாலும், அங்கும் சில லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சுமன் குமார், இந்தி திணிப்பு மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டாலும் எந்த இடத்திலும் சர்ச்சையான விசயங்களை பேசாமல் மற்றும் காட்சிப்படுத்தாமல் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதற்கான வாய்ப்பு திரைக்கதையில் இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தாமல் சில இடங்களில் மட்டுமே சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகளை எழுதிவிட்டு மற்ற காட்சிகளில் ரசிகர்களின் பொருமையை சோதிக்கிறார்.

ரேட்டிங் 2.5/5

Keerthy Sureshraghu thatha reviewtamil movie raghu thatha reviewகீர்த்தி சுரேஷ்..!தமிழ்ப் படம் ரகு தாத்தா விமர்சனம்ரகு தாத்தா திரைப்பட விமர்சனம்ரகு தாத்தா விமர்சனம்