அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு கிராமத்திலேயே இயற்கை விவசாயம் பார்க்க விரும்பும் கதிருக்கு (மகேஷ்) லோன் தர வங்கி மறுக்கிறது. வெளிநாட்டில் இருந்து தொழில் செய்ய வருபவர்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்யும் அரசு, உள்ளூரில் விவசாயம் பார்க்க விரும்பும் தன்னை புறக்கணிப்பதால், கோபத்தில் வங்கி மேனேஜரை அடித்து உதைக்கும் கதிர், வேலைதேடி சென்னைக்கு வருகிறான்.
பி.இ படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சென்னையில், பொம்மைகள் விற்கும் வேலைபார்க்கும் கதிரின் நண்பன் அருண் (சுரேஷ் சக்காரியா), குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து, அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு வைக்க, அதுவும் மறுக்கப்படுகிறது.
நேர்மையான சி.பி.ஐ ஆபிசரான வெற்றிமாறன் (சமுத்திரக்கனி), ஆயிரம் கோடி வரிப்பணம் கள்ளத்தனமாக கைமாறியதை கண்டுபிடித்து கொடுக்கிறார். ஆனால் அவரது பைல் உயர் அதிகாரிகள் மூலம் எதிரிகளின் கைகளுக்கே போகிறது. வெறுத்துப்போய் வேலையை ராஜினமா செய்கிறார் வெற்றிமாறன்.
அரசாங்கத்தால் நேரடியாக புறக்கணிக்கப்பட்ட, ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் மூவரும் ஒரு புள்ளியில் இணைவது தான் க்ளைமாக்ஸ்.
சமுத்திரக்கனியின் மிடுக்கான நடிப்பும், மகேஷின் காதலியாக வரும் மித்ராவின் நடிப்பும் தான் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டுகள். மகேஷின் கதாபாத்திரம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லும்போது நமக்கே அவர் மீது கோபம் தான் வருகிறது. ‘தர்மதுரை’ படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்த மதுவை 25 வருடங்கள் கழித்து, மீண்டும் இந்தப்படத்தில் பார்க்கும்போது சந்தோசம் ஏற்படுகிறது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம் அரசு விவசாயத்தை எப்படி புறக்கணிக்கிறது என்றும், திறமையான மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் தர மறுகிறது என்றும், வரிப்பணத்தை ஏமாற்றியவர்களுக்கு அரசே உதவி செய்வதையும், யாரென்றே தெரியாத வெளிநாட்டு நபர்களுக்கு பணம், இடம் வசதி செய்துகொடுத்து தொழில் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் அரசு, நமது மக்களை புறக்கணிப்பதையும் கோபத்துடன் சொல்ல முயற்சித்திருப்பதை பாராட்டும் அதே நேரத்தில் அதை சரியாக சொல்லாமல் விட்டுவிட்டார்களே என்கிற வருத்தமும் எழுகிறது.
சமுத்திரக்கனி வேலையை ராஜினமா செய்துவிட்டு ஊருக்கு வந்தபின் பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அடாவடி செய்யும் ட்ராபிக் போலீஸாரை புரட்டி எடுக்கும் இறுதிக்காட்சி மட்டுமே சமுத்திரக்கனிக்கான தீனி. ஆனாலும் அங்கிருந்து மாற்றம் உருவதாக சொல்லிவிட்டு, எடுத்துக்கொண்ட பிரச்சனைகள் எதற்குமே தீர்வு சொல்லாமல் படத்தை டக்கென முடித்திருப்பது மன்னிக்கவே முடியாத மைனஸ். மொத்தத்தில் விருந்து வைப்பதாக அழைத்த இயக்குனர் விக்டர் டேவிட்சன், அரைகுறை சமையலையே நமக்கு பரிமாறி இருக்கிறார்.