‘பெத்தி’ விமர்சனம்

நடிகர்கள் : ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு
இயக்கம் : புச்சி பாபு சனா
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், விருத்தி சினிமாஸ் – வெங்கட சதீஷ் கிலாரு

பெயரே இல்லாத மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவிதமான அடையாளமும் இன்றி தினக்கூலிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ரேஷன் கார்டு, ஓட்டு உரிமை என்று எதுவும் இல்லாத அவர்களும், அவர்கள் வாழும் கிராமம் அரசு பதிவேட்டில் கூட இல்லாததால், தங்களுக்கான அங்கீகாரத்திற்காக பல்வேறு வகையில் போராடுகிறார்கள். அவர்களில் ஒருவரான நாயகன் ராம் சரண், தங்களுக்கான அடையாளத்தை விளையாட்டால் பெற முடியும் என்ற நம்பிக்கையில், விளையாட்டு கூலியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கூலி கொடுத்தால் எந்த அணிக்காகவும் விளையாடக் கூடிய அவரது அபாரமான விளையாட்டு திறனால் அப்பகுதியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையே, பணம் படைத்தவர்களின் சூழ்ச்சியால் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ராம் சரண், தோற்கடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை, என்று அவர் முடிவு எடுக்க, குஸ்தி வாத்தியாரான சிவ ராஜ்குமார், அவருக்கு குஸ்தி பயிற்சி அளிக்க விரும்புகிறார். அதன்படி, குஸ்தி விளையாட்டிலும் தன் அபாரமான திறனால் கவனம் ஈர்க்கும் ராம் சரண், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தங்களது சமூகத்திற்கான அடையாளத்தை பெற முயற்சிக்கிறார். ஆனால், இறுதிப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாவதோடு, இனி குஸ்தி போட்டிகளில் பங்கேற்க முடியா நிலைக்கு தள்ளப்படுகிறார். இருந்தாலும், தனது ஊருக்கான அடையாளத்தை பெற தொடர்ந்து முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகும் போது, இங்கே வெற்றி பெற்றவர்களின் பேச்சை மட்டும் தான் கேட்பார்கள், என்பதை புரிந்துக் கொள்பவர், தனி மனித சாதனை மூலம், தன் ஊர் மர்க்களை சோதனையில் இருந்து மீட்டெடுக்க களத்தில் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்று, தான் நினைத்ததை செய்து முடித்தாரா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

விளையாட்டு வீரருக்கான உடல் மற்றும் ஆற்றலோடு படம் முழுவதும் வலம் வரும் நாயகன் ராம் சரண், கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. தன் சமூகத்திற்கான அடையாளத்தை அடைவதற்காக பல தடைகளை தாண்டிய அவரது பயணத்தை உணர்வுப்பூர்வமான நடிப்பால் பார்வையாளர்களிடம் கடத்தும் ராம் சரண், துடிப்பான அசைவுகள் மூலம் பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக வலம் வருகிறார். மற்றபடி, கதைக்கும் அவருக்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லை.

குஸ்தி வாத்தியாராக நடித்திருக்கும் சிவ ராஜ்குமாரின் பேச்சும், செயலும் கம்பீரமாக இருப்பதோடு, ஒரு வாத்தியாருக்கான அனைத்து அசைவுகளையும் தன் உடல்மொழியில் மிக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.

ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டத்தின் உச்சத்தை தொட வைத்திருக்கிறது. கிரிக்கெட் , குஸ்தி, ஓட்டப்பந்தயம் என அனைத்து விளையாட்டு போட்டிகளையும் பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகங்களில் முணு முணுக்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

நவீன் நூலியின் படத்தொகுப்பு, அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

நவீன இந்தியாவில், பெயரே இல்லாத பல கிராமங்கள் இருப்பதையும், அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் புச்சி பாபு சனா, ஒரு விளையாட்டு வீரனால் ஒரு சமூகத்திற்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு விளையாட்டு போட்டியை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்காமல், எந்த விளையாட்டாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான அடையாளத்தை பெற துடிக்கும் ஒரு இளைஞனின் போராட்ட வாழ்க்கையை திரைக்கதையாக்கி இருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, மற்ற விளையாட்டு படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனாவின் மேக்கிங், நாயகன் ராம் சரணின் கடுமையான உழைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் தரமான படைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த ‘பெத்தி’ மக்கள் மனதில் கெட்டியாக பதிந்து விடுவார்.

ரேட்டிங் 3.8/5

peddi movie reviewpeddi reviewtelugu movie peddi reviewபெத்தி திரைப்பட விமர்சனம்பெத்தி விமர்சனம்ராம் சரணனின் பெத்தி விமர்சனம்