பைசா – விமர்சனம்

குப்பை பொறுக்கும் சிறுவனுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்தால் என்ன ஆகும்..? அதைத்தான் இந்த ‘பைசா’ சொல்கிறது.

தெருவில் குப்பை பொறுக்கி சம்பாதிக்கும் இளம் வாலிபர்கள் கூட்டணியில் ஸ்ரீராமும் ஒருவர்.. குப்பத்து பெண்ணான ஆராவுக்கும் இவருக்கும் காதல் ஏற்படுகிறது. இந்தநிலையில் எதிர்பாராமல் நூறு கோடி ரூபாய் அடங்கிய பணமூட்டை ஒன்று ஸ்ரீராமிடம் மாட்டுகிறது. அதை தனது இருப்பிடத்தில் மறைத்து யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்கிறார்.

அந்தப்பணம் தொழிலதிபர் மதுசூதன், தனக்கு நம்பகமான ரவுடி ராஜசிம்மனிடம் கொடுத்து மறைத்து வைக்க சொன்னது.. பணம் காணாமல் போனதால், அதை எடுத்துக்கொண்டு ராஜசிம்மன் தன்னை ஏமாற்றுவதாக நினைக்கும் மதுசூதன் அவருக்கு பணத்தை திருப்பித்தரும்படி ஒருவார கெடு கொடுக்கிறார்.

தனது உயிருக்கு உலை வைக்கப்பட்டுள்ளதால் பணத்தை எடுத்தவனை உக்கிரமாக தேடுகிறார் ராஜசிம்மன். இந்த சூழலில் நண்பன் விபத்தில் சிக்க காசிருந்தும் அவனது சிகிச்சைக்கு ஸ்ரீராமால் உதவமுடியாமல் போகிறது. நண்பனின் மரணத்திற்கு காரணம் ஸ்ரீராம் தான் என அவரை மற்றவர்கள் ஒதுக்குகிறார்கள். ஸ்ரீராம் கோடி கோடியாய் பணம் வைத்துள்ள விபரம், காதலி ஆராவுக்கும் தெரியவர அவரும் அவரை வெறுத்து ஒதுங்குகிறார். பணத்தால் நட்பும் காதலும் விலகி, ஆபத்து நெருங்குவதை உணர்ந்த ஸ்ரீராம் தன்னிடம் பணம் உள்ள விஷயத்தை தனக்கு ஏற்கனவே அறிமுகமான வருமானவரி அதிகாரி நாசரிடம் சொல்கிறார். பணம் கடைசியில் யார் கைக்கு போனது. ஸ்ரீராமின் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்..

குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்குள்ள சுக துக்கங்களையும் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அப்துல் மஜீத். ஸ்ரீராம் உள்ளிட்ட குப்பை பொறுக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருந்தாலும் எப்போதும் குப்பை பொறுக்கி கொண்டிருப்பதும் அதை கடையில் போடுவதுமாக காட்டிக்கொண்டு இருப்பது சலிப்பை தருகிறது..

ஸ்ரீராம் கைக்கு பணம் வந்ததும் கூடும் விறுவிறுப்பு, அதை சென்ராயன் பார்த்துவிட்டு அடிக்கடி பணம் கேட்கும்போது கொஞ்சம் அதிகரிக்கவே செய்கிறது.. ஆனால் அப்படி வந்த பணத்தை கேட்பதிலும் கூட நேர்மையை கடைபிடிக்கும் சென்ராயன் நம்மை கவர்கிறார்.. கதைக்கு ஏற்ற அழகான ஹீரோயினாக வரும் புதுமுகம் ஆரா, நம் மனதில் நிற்கிறார்.

கொடூர வில்லன்களைப்போல காட்சியளிக்கும் ராஜசிம்மன், மதுசூதன் ராவ் ஆகியோர் உறுமுவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள். பாஸிட்டிவ் கேரக்டரில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் நாசர் பளிச். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் கோலிசோடாவையும் ரேணிகுண்டாவையும் மிக்ஸ் பண்ணி ஜூஸ் அடித்திருகிரர்கள்.

குப்பை பொறுக்கும் சிறுவனின் கைக்கு பணம் கிடைத்தால் அவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை தனது கோணத்தில் இருந்து இயக்குனர் சொல்லியிருந்தாலும் அவனது செயல்கள் செயற்கையாகவே இருக்கறது.. இருந்தாலும் பேராசை பெருநஷ்டம் என்பதை சொன்னதற்காக குறைகளை பொறுத்துக்கொள்வோம்.

Paisa Tamil Movie Reviewபைசா – விமர்சனம்ஸ்ரீராம்