பாயும் புலி – விமர்சனம்

விஷால் – சுசீந்திரன் கூட்டணியில் இன்னொரு படம், போலீஸ் அதிகாரியாக விஷாலுக்கு இரண்டாவது படம். இந்த ‘பாயும் புலி’.. என்ன செய்திருக்கிறார்கள்..?

தம்பி விஷால், போலீஸ் வேலைக்கு சேர்வதற்கு முன்பே ரவுடிகளை பொளந்துகட்டும் பாயும் புலி.. ஆனால் அண்ணன் சமுத்திரக்கனியோ, நல்லவர் போர்வையில் அரசியல் ஆசைக்காக, கூலிப்படையை வைத்து கோடீஸ்வரர்களை மிரட்டி பணம் பறிக்கும் பசுத்தோல் போர்த்திய புலி.. அண்ணனே வில்லன் என பாசமான் தம்பிக்கு தெரிய வருகிறது.. முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.

எதிரிகளை எகிறி அடிக்கும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் பாயும் புலியாகவே மாறியிருக்கிறார் விஷால்.. ஆனால் நம்ம ஊர் சினிமா சூத்திரப்படி பெயரளவுக்கு ஒரு காட்சியில் போலீஸ் யூனிபார்மில் வருவதோடு சரி.. பயந்தாங்கொல்லி காஜலுடன் ரொமான்ஸ் வளர்க்க திட்டம் போடுவது சிரிப்பு ரகம்..

அண்ணன் சமுத்திரக்கனி தான் மாட்டிக்கொள்வோமோ என்கிற கட்டத்தில் குண்டடிபட்டு நாடகம் ஆட, அதை விஷால் கண்டுபிடிப்புது விறுவிறுப்பு.. ஆனால் தனது வீட்டிற்குள்ளேயே வில்லன் இருக்கிறான் என்பதை விஷால் தாமதமாக கண்டுபிடிப்பதும், இந்த மிரட்டல் கும்பலை கண்டுபிடிப்பதற்கு புதிய டெக்னிகல் உத்திகளை பயன்படுததாதும் விறுவிறுப்பை குறைக்கின்றன.

என்னம்மா.. ஒரு யூடர்ன் அடிக்க கூட தெரியாதாம்மா என் கேட்கும் வகையில், காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் ஜெனிலியா விட்டுசென்ற அப்பாவி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொள்கிறார். ஆனால் என்னதான் ஸ்வீட் என்றாலும் சாப்பாட்டு இலையில் அதற்கு அளவான இடம் தானே..

நல்லவராகவே பார்த்து பழகியதால், சமுத்திரக்கனியின் வில்லத்தனத்தை ஜீரணிப்பது நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.. கெட்டவனாக இருந்தாலும் குடும்ப கெளரவம் காக்க தம்பி விஷால் அவரை கொல்ல முடிவு செய்வது ஒகே.. ஆனால் சமுத்திரக்கனியின் மனைவி, இதை அறிந்தும் மனதை கல்லாக்கிக்கொண்டு, கதவை சாத்திக்கொள்ளும் அளவுக்கு தியாகியா என்ன..? ஒரு தாயின் மனம் கூட அதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளுமா என்ன..? அந்த இடத்தில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

படம் முழுவதும் விஷாலின் கூடவே வரும் சூரி, ஒவ்வொரு முறை குடித்துவிட்டு செல்லும்போது, தனது மனைவியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் கலகலப்பு. ஜெயபிரகாஷ், அருள்தாஸ் என சுசீந்திரனின் நட்புக்கூட்டணியும் உண்டு.

இமானின் இசையில் யார் அந்த முயல் குட்டி, சிலுக்கு மரமே பாடல்கள் சுகம். வேல்ராஜின் ஒளிப்பதிவு மதுரைய புது நிறத்தில் காட்ட முயற்சித்தாலும், அவ்வப்போது சில இடங்களில் சென்னை லொக்கேஷனை மதுரையாக மேட்ச் பண்ணியிருப்பது அப்பட்டமாக தெரிவதை கவனித்து தவிர்த்திருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக ஹீரோவின் அதிரடி என்ட்ரி, வில்லன் ஹீரோவுக்கு விடும் நேரடி அல்லது மறைமுக சவால், அதை உடைக்க ஒவ்வொரு முறையும் ஹீரோ வகுக்கும் வியூகம் என போலீஸ் கதைக்கென ஒரு சில விதிமுறைகள் உள்ளன. அதுதான் ரசிகர்களுக்கு முழு தீனி போடும்.. ஆனால் அந்த பார்முலாவில் இருந்து சுசீந்திரன் நன்றாகவே விலகி இருப்பதால் புலியின் பாயும் வேகம் ரொம்பவே மட்டுப்பட்டிருக்கிறது.

அருள்தாஸ்சமுத்திரக்கனிசுசீந்திரன்சூரிஜெயபிரகாஷ்பாயும் புலிவிஷால்