பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஷேத்ரா, நிகாரிகா, கிருஷ்ணவேணி மூவரும் வேலை, வேலைவிட்டால் வீக் என்ட் பார்ட்டி என ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக கழிக்கிறார்கள். அப்படி ஒருநாளில் தான், நடிகனாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் இளைஞனான பாலராஜுவை சந்திக்கிறார்கள்…
அவனுக்குள் இருக்கும் நடிப்பு திறமை அவர்களை பரவசப்படுத்த, அவனுக்கு எப்படியாவது உதவவேண்டும் என முடிவெடுக்கும் மூவரும் ஒரு குறும்படம் எடுக்கலாம் என முடிவு செய்கின்றனர்.. இன்றைக்கு டிரெண்டிற்கு ஹாரர் தான் உடனே ஒர்க் அவுட் ஆகும் என்பதால் திகில் குறும்படம் எடுக்க தீர்மானிக்கிறார்கள்.. இதற்காக இரண்டு ஊஜா (ஓஜா) போர்டுகளை (ஆவிகளை வரவழைத்து பேச உதவும் மீடியம்) தயார் செய்கிறார்கள்.
ஆனால் விபத்தில் அல்பாயுசில் இறந்துபோன மாயா என்கிற பெண்ணின் ஆவி அந்த ஊஜா போர்டின் வழியாக உள்ளே நுழைந்து அவர்களை மிரட்டுவதோடு குறும்படம் எடுப்பதையும் தடுக்கிறது.. மாயா எதற்காக இவர்களை இந்தப்பாடு பாடுத்துகிறது என்பதும் மாயாவிடம் இருந்து இந்த நால்வரும் தப்பிக்க முடிந்ததா என்பதும் தான் மீதிக்கதை.
ஹாரர் படம் என்றாலும் பேயை உள்ளே கொண்டுவருவதற்காக கதையில் புதிய ஊஜா என்கிற புதிய களத்தை பயன்படுத்தியுள்ளார்கள். மாயா வரும் வரை பாலராஜுவாக வரும் பரத்துக்கும் மூன்று இளம் யுவதிகளுக்குமான காட்சிகள் வேடிக்கையாக, நகைச்சுவை தளத்தில் நகர்கின்றன. மாயா வந்ததும் படம் ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டுவந்து விடுகிறது..
மாயாவாக நடித்திருக்கும் ஷ்ரதா தாஸுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ஹாரர் படத்துக்கென தனது நடை உடை பாவனைகளை மாற்றியுள்ள ஷ்ரதாவை தாராளமாக பாராட்டலாம்.. கதாநாயகன் பரத்தும் தன் பங்கு வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
மூன்று தோழிகளாக வரும் காயத்ரி, மாதுரி, காதம்பரி மூவருமே அல்ட்ரா மாடர்ன் கேரக்டர்களுக்கான சரியான தேர்வு.. மாயாவிடம் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளை அழகாக பிரதிபலித்திருக்கிறார்கள். மாயாவிடம் இருந்து இவர்களை காப்பற்ற உதவும் மந்திரவாதி வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே அற்புதமாக நடித்துள்ளார்.
ஒரு ஹாரர் படத்திற்கான மிரட்டலான பின்னணி இசையை இசையமைப்பாளர் ஹரி நிகேஷ் கொடுத்திருக்கும் அதேசமயம், ஹாரர் படம் என்பதற்காக படம் முழுவதையும் இருளிலேயே நகர்த்தாமல் பகல் காட்சிகளின் ஊடாகவும் டெரர் ஏற்றுகிறது ரவிகுமாரின் ஒளிப்பதிவு.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும் ரிச்னெஸ் தயாரிப்பாளர் விக்ரம் ராஜூ படத்தின் மேக்கிங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதையும் பணத்தை அள்ளி வீசியிருக்கிறார் என்பதையும் தெளிவாக காட்டுகிறது. தெளிவான கதையும் அழகாக பின்னப்பட்டுள்ள திரைக்கதையும் படத்தை இயக்கியுள்ள ராஜ்குமார் ரெட்டிக்கு வெற்றியை தேடி தந்துள்ளன என்பது உண்மையிலும் உண்மை.