இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில், இளையராஜா இசையில், பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் காதல் திரைப்படமான ‘நினைவெல்லாம் நீயடா’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
பள்ளியில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் பிரஜின், பிரிந்து சென்ற தனது காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியாத பெண்ணுக்காக காத்திருப்பதை விட, உன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்துக்கொள், என்று பெற்றோர் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அதன்படி, தனது அத்தை மகளை பிரஜின் திருமணம் செய்துக் கொள்கிறார்.
பிரஜினின் திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில், அவர் எதிர்பார்த்தது போல், அவரது காதலி அவரை தேடி வருகிறார். தான் நினைத்தது போல் தனக்காக பல வருடங்களாக காத்திருந்த தனது காதலி, தன்னை தேடி வந்திருப்பதை அறிந்த பிரஜின், பள்ளி பருவத்தில் பிரிந்த காதலியுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட மனைவியுடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பதே ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலிக்காக, ஏக்கத்தோடும், சோகத்தோடும் காத்திருக்கும் மனநிலையை தனது நடிப்பில் மட்டும் இன்றி முகத்திலும் படம் முழுவதும் வெளிக்காட்டியிருப்பது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும், பார்வையாளர்களை வருத்தப்பட வைக்கிறது.
பிரஜினின் அத்தை மகளாக, அவரை ஒருதலையாக காதலிக்கும் மனிஷா யாதவ், தனது வெறித்தனமான காதலை வெறித்தனமான நடிப்பு மூலம் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் கைகொடுத்திருக்கிறது, பல இடங்களில் தடுமாற வைத்திருக்கிறது.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் சினாமிகா, முதிர் கண்ணியாக இருக்கிறார். இவருக்காகவா பிரஜின் இத்தனை வருடங்கள் காத்திருந்தார், என்று அவர் மீது நமக்கு பரிதாபம் வரும் போது, சினாமிகா ஒரு உண்மையை சொல்லி நமக்கு ஆறுதல் அளிக்கிறார்.
பள்ளி பருவத்தில் நடித்திருக்கும் ரோஹித் மற்றும் யுவலக்ஷ்மி இருவரும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகள் தான் காதல் படம் என்ற உணர்வை கொடுப்பதோடு, கொஞ்சம் ரசிக்கவும் வைக்கிறது.
பிரஜினின் நண்பராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி தனிமனிதராக சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நக்ஷத்ரா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பளபளப்பாகவும் படமாக்கியிருக்கிறார்.
முதல் காதல் நினைவுகளை கீறிவிடும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், பழைய பாணியில் திரைக்கதையை கையாண்டிருந்தாலும், ரசிகர்களின் பழைய ஞாபங்களை நினைத்து பார்க்க வைத்திருக்கிறார். குறிப்பாக, பள்ளி பருவக்காதல் காட்சிகள், நிச்சயம் படம் பார்ப்பவர்களின் முதல் காதலை நினைவுப்படுத்தும்.
ரேட்டிங் 3\5