காலை பூஜை முடிந்த நிலையில் கும்பகோணம் தெப்பக்குள படிக்கட்டில் சற்றே ஆசுவாசமாக அமர்கிறார் கோவில் குருக்கள். சுவாமியை தரிசித்துவிட்டு வந்த ரிட்டையர்டு வாத்தியார் ராமலிங்கம் குருக்களை பார்த்துக்கொண்டே அவர் அருகில் வந்து அமர்கிறார்.
வாத்தியார் : என்ன குருக்களே.. நேத்து சாயங்கால பூஜைல ஆளை பார்க்க முடியல.. உம்ம பையன் தான் இருந்தான். எங்கே போயிட்டீர்..?
குருக்கள் : அதுவா.. பையனுக்கும் ட்ரெய்னிங் குடுக்கணுமோ இல்லையோ.. அதான் சித்த ரெஸ்ட் உட்டுட்டு ஆத்துக்காரி கூட படத்துக்கு போயிட்டேன்..
வாத்தியார் : படத்துக்கா..? நீங்க சினிமாவுக்கெல்லாம் போற ஆள் இல்லையே..?
குருக்கள் : யாரு சொன்னா.. வாராவாரம் சண்டே தஞ்சாவூர் போறேனே எதுக்கு? புதுசு புதுசா படம் பார்க்கத்தான்.. குருக்கள்னா படம் பாக்க்க்கூடாதுன்னு எதுவும் சாமி சொல்லலையே.. அதுவுமில்லாம ஆத்துக்காரி கூப்பிட்டுட்டாளே.. என்ன பண்றது.? இந்தப்படத்தோட ஷுட்டிங் நம்ம கும்பகோணத்துல கொஞ்ச நாள் எடுத்தாளே.. அதுல ஒரு நா ஷூட்டிங்ல என் ஆத்துக்காரியும் இன்னும் நாலஞ்சு பொம்மனாட்டிகளும் நடிச்சிருக்காளாம்.. எங்க நடிச்சிருக்கா.. கூட்டத்தோட கூட்டமா நின்னுருக்கா.. அது படத்துல எப்படி வந்துருக்குன்னு பார்க்கணும்னு கிளம்பிட்டா… அதுவுமில்லாம நம்ம விவேக் இதுல காமெடி பண்ணாம சீரியஸா நடிச்சிருக்கிறார்ல.. அதையும் பாத்துருவோம்னுதான் நானும் கிளம்பிட்டேன்
வாத்தியார் : ‘நான் தான் பாலா’ன்னு ஒரு படம் எடுத்தாங்களே அதுவா..?
குருக்கள் : அதேதான்..
வாத்தியார் : ஷூட்டிங் டைம்ல நாங்கூட ஒருவாட்டி விவேக் கிட்ட பேசுனேனே.. அப்பகூட சீரியஸாத்தான் இருந்தார்.. சீரியஸா நடிக்கிற அளவுக்கு அப்படி என்ன கதையாம்..?
குருக்கள் : அவரும் கும்பகோணம் கோவில் குருக்களாத்தான் நடிச்சிருக்கார். பழைய கேஸ் ஒண்ணு தீர்ப்பானதுல வயசான அவா தோப்பனாரை போலீஸ் புடிச்சிண்டு போயிடுறா.. லட்ச ரூபா பக்கமா கட்டுனாத்தான் விடுவாங்க.. ஆனா அக்ரஹாரத்துல யாருமே உதவலை.. அப்ப காஞ்சிபுரத்துல இருந்து கும்பகோணத்துக்கு வந்த பூச்சிங்கிறவன் விவேக்கோட கஷ்டத்தை பார்த்துட்டு லட்சரூபாயை கொடுத்துட்டுப்போறாரு
வாத்தியார் : மகராசன்.. கடைசில வெளியூர்க்காரன் தான் ஹெல்ப் பண்றான் பாத்தீங்களா..?
குருக்கள் : வாஸ்தவம் தான்.. ஆனா அந்த பூச்சி யாருங்கிறீங்க.. அவன் ஒரு கூலிப்படை ஆளு.. இங்க கும்பகோணத்துக்கு வந்தது ஒரு ஆள போட்டுத்தள்ள.. ஆனா விவேக்குக்கு இது தெரியாது.
வாத்தியார் : அடப்பாவி. அப்புறம் என்ன ஆச்சு..?
குருக்கள் : விவேக் அப்பாவ ரிலீஸ் பண்ணி கூட்டிட்டு வந்தாலும் அக்ரஹாரத்துல எல்லாருமே இவாள எதுக்குறா.. கோயில் குருக்கள் வேலையும் புடுங்கிண்டுடுறா.. இதுனால அவமானம் தாங்காம விவேக்கோட பெத்தவா ரெண்டுபேரும் குளத்துல குதிச்சு ஆத்மஹத்தி செஞ்சுக்கிறா.
வாத்தியார் : அய்யய்யோ… என்ன சொல்றீங்க குருக்களே..?
குருக்கள் : ஆமாங்க வாத்தியாரே.. அப்புறம் காஞ்சிபுரத்துக்கு பூச்சிய தேடி வர்ற விவேக் நிலமைய பூச்சிகிட்ட சொல்லி, காசுக்கு பதிலா தன்னோட வீட்டுப்பத்திரத்தை கொடுத்துட்டு கிளம்புறாரு. ஆனா பூச்சி அவரை எங்கயும் போகவேணாம்னு தன் வீட்டுலயே தங்கிக்க சொல்றான்..
வாத்தியார் : அது எப்டிங்க.. அவன் ரவுடியாச்சே..?
குருக்கள் : இருக்கட்டுங்க.. இவருக்காக அவன் தன்னை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறான்ல.. அப்ப அங்க போளி விக்கிற சௌராஷ்ட்ரா பொண்ணு விவேக்க லவ் பண்ணுது. விவேக்கோட குணத்தை பார்த்து அவா தோப்பனாரும் ஒத்துக்கிட்டா.. நிச்சயமும் பண்றாங்க.. இந்த கல்யாண செலவெல்லாம் பூச்சிதான் இழுத்துப்போட்டு செய்யுறான்.. அந்த சமயத்துலதான் போலீஸ் மூலமா பூச்சி ஒரு கூலிப்படை ஆளுன்னு விவேக்குக்கு தெரியவருது. அவா விவேக்குகிட்ட பூச்சிய அப்ரூவரா மாறச்சொல்லி சொல்லச்சொல்றா..?
வாத்தியார் : எதுக்கு திடீர்னு அப்ரூவரா மாறணும்..
குருக்கள் : பூச்சிய வச்சு நிறைய ஆளுங்கள போட்டுத்தள்ளிட்டு அதுல லட்சலட்சமா சம்பாதிக்கிறாரு அவரோட முதலாளி.. அதனால விவேக் சொன்னா பூச்சி அப்ரூவரா மாறுவான்னு போலீஸ் நம்புது.. பூச்சியால பாதிக்கப்பட்ட ஒருத்தனோட ஆத்துக்காரியோட துயரத்த பூச்சிக்கு காட்டுறாரு விவேக். இதனால மனசு மாறி விவேக் பேச்ச கேட்டு சரண்டர் ஆக கிளம்புறான் பூச்சி.
வாத்தியார் : முடிவு சாஃப்ட்டா இருக்கேங்க..!.
குருக்கள் : இருங்க ஓய்.. நான் இன்னும் முடிக்கலை.. நீங்க நினைக்கிற மாதிரி இல்லாம முடிவு வேற மாதிரி ஆகிருது..
வாத்தியார் : வேற மாதிரியா..? எப்படி
குருக்கள் : வாத்யாரே.. அத மட்டும் நீங்க தியேட்டர்ல போய் பாத்துக்குங்க..?
வாத்தியார் : என்ன குருக்களே இப்படி சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்க.. சரி சீரியஸா இருக்க விவேக் எப்படி? ரசிக்க முடியுதா..?
குருக்கள் : ஏன் முடியாம..? அக்ரஹாரத்து அம்பியாவே மாறிட்டாரு போங்க.. அதுலயெல்லாம் குறை சொல்ல முடியாது. ஆனா காதல் காட்சிகளை குறைச்சிருந்தா அவர் கேரக்டர் இன்னும் மெருகேறி இருக்கும்.. அது சரி.. அவரு குருக்கள் தானே.. சாமியார் இல்லையே
வாத்தியார் : அந்த பூச்சி யாருங்க..?
குருக்கள் : அவரு புது ஆளுங்க.. பேரு வேங்கடசாமியாம்.. டைட்டில் கார்டுல போட்டாங்க.. மகாபாரதத்துல வர்ற கர்ணன் மாதிரியான் ஒரு கேரக்டர்.. ஓஹோன்னு சொல்ல முடியலைன்னாலும் படத்தை டிஸ்டர்ப் பண்ணாம நடிச்சிருக்கா..
வாத்தியார் : ஆமா போஸ்டர்ல பாத்தேன்.. அந்த பொண்ணு ஹன்சிகா தான..?
குருக்கள் : ஹன்சிகா இல்ல வாத்தியாரே.. இதுபேரு ஸ்வேதா.. ஆனா சிரிக்கிறப்ப ஒரு சில சாயல்ல மட்டும் ஹன்சிகா மாதிரியும் இருக்கும். வீதி வீதியா கூவிக்கூவி ‘போளி’ வித்துட்டு, நல்லாத்தான் நடிச்சிருக்கு
வாத்தியார் : விவேக்கே சீரியஸா நடிச்சிருக்கார்னா.. அப்ப காமெடியே இருக்காதே..?
குருக்கள் : அதான் இல்ல.. இந்தப்படத்துல விவேக்கோட எல்லா படங்கள்லயும் நடிப்பாரே அவரோட அசிஸ்டெண்ட் செல் முருகன்.. அவரும் கூட மயில்சாமியும் சேந்துக்கிட்டு காமெடி பண்ணிருக்காங்க.. டயனோரா டிவி காமெடி ஒண்ணு இருக்கு.. சரி..சரி..அத படத்துல பாருங்க..
வாத்தியார் : பாட்டு, டூயட்டுன்னு ஏதாவது..?
குருக்கள் : இருக்குங்க.. வெங்கட க்ரிஷின்னு ஒருத்தர்தான் மியூசிக்.. ஆனா மனசுல எதுவும் தங்கலை.. பாலாகிட்ட அஸிடெண்ட்டா இருந்த கண்ணன் தான் இந்தப்படத்த டைரக்ட் பண்ணிருக்காரு. ஆனா பால டைப் படம் மாதிரியெல்லாம் இல்லை.. காட்சிகளை அழுத்தமாத்தான் வச்சிருக்காரு.. ஆனா அதான் சொன்னேனே.. காதல் காட்சிகளை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம். க்ளைமாக்ஸ்ல ஏன் திடீர்னு ரூட்டு மாறுன்னாருதான் தெரியல..?
வாத்தியார் : இருங்க குருக்களே.. நான் இன்னைக்கு இந்த படத்தை பாத்துட்டு வந்து சொல்றேன். ஏன்னா என் பாயிண்ட் ஆஃப் வியூவே வேற..என்று சொல்லிக்கொண்டே எழ, குருக்களும் அடுத்த பூஜைக்கு தயாராகிறார்.