’மியூசிக் ஸ்கூல்’ விமர்சனம்

நடிகர்கள் : ஸ்ரேயா, சர்மன் ஜோஷி, ஓசு பரூரா, பிரகாஷ்ராஜ், கிரேஸி கோஸ்வாமி, சுஹாசினி முலே, ஷான்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கிரண் டியோஹன்ஸ்
இயக்கம் : பப்பா ராவ் பிய்யாலா
தயாரிப்பு : பப்பா ராவ் பிய்யாலா

ஐதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இசைப்பயிற்சி ஆசிரியையாக பணியில் சேரும் ஸ்ரேயா, அதே பள்ளியில் நாடக ஆசிரியராக பணியாற்றும் சர்மன் ஜோஷியுடன் சேர்ந்து இசை பள்ளி ஒன்றை தொடங்குகிறார். மாணவ, மாணவிகளுக்கு இசை மற்றும் நாடக பயிற்சி அளிப்பதோடு, அவர்களை வைத்துக்கொண்டு ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்யும் ஸ்ரேயா மற்றும் சர்மன் ஜோஷி, பயிற்சிக்காக மாணவ, மாணவிகளை கோவா அழைத்து செல்கிறார்கள்.

கோவாவில் பயிற்சியை முடித்துக்கொண்டு அனைவரும் ஐதராபாத் திரும்பும் நேரத்தில், கமிஷ்னர் பிரகாஷ்ராஜின் மகள் மாயமாகிவிடுகிறார். இந்த தகவல் பிரகாஷ் ராஜுக்கு தெரியவர, தனது மகளை தேடுவதோடு, ஐதராபாத்தில் அரங்கேர இருக்கும் நாடக நிகழ்ச்சியை நிறுத்தி ஸ்ரேயா மற்றும் சர்மன் ஜோஷியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். மாயமான பெண் கிடைத்தாரா?, இல்லையா? ஸ்ரேயா – சர்மன் ஜோஷியின் நாடகம் அரங்கேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா இசைப்பயிற்சி ஆசிரியை கதாபாத்திரத்தில், மாணவர்களுக்கு இணையாக துள்ளல் நடிப்பு மூலம் மனம் கவருகிறார்.

நாடகப் பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் சர்மன் ஜோஷிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அளவான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஸ்ரேயாவை ஒருதலையாக காதலிக்கும் பிரபல பின்னணி பாடகரும், இசைக்கலைஞருமான ஷான், சில காட்சிகள் வந்தாலும் தனது காதலை ஸ்ரேயாவிடம் வெளிப்படுத்திவிட்டு ஏமாற்றத்தோடு விடைபெறும் காட்சியின் மூலம் மனதில் நிற்கிறார்.

ஐதராபாத் கமிஷ்னராகவும், கண்டிப்பான தந்தையாகவும் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது.

இசைப் பள்ளி மாணவ, மாணவிகளாக நடித்திருக்கும் இளம் வயதினரும், சிறு வயதினரும் எந்தவித தயக்கமும் இன்றி நடிப்பிலும், நடனத்திலும் அசத்துகிறார்கள்.

லீலா சாம்சன், வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மங்களா பட், சுஹாசினி முலே, பெஞ்சமின் கிலானி, கிரேஸி கோஸ்வாமி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிரண் டியோஹன்ஸ் காட்சிகளை பளிச்சென்றும் பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். கோவா காட்சிகளையும், இசைப் பள்ளி மற்றும் மாணவர்கள் குடியிருப்பு என அனைத்து ஏரியாக்களையும் ஆல்பம் போன்று காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகமாக இருக்கிறது. அதிலும் மேற்கத்திய இசையில் புகுந்து விளையாடியிருக்கும் இளையராஜா, முற்றிலும் வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதோடு, இசை மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் பாப்பா ராவ் பிய்யாலா, படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, வசனத்தை கூட பாடல்களாகவே கொடுத்திருப்பது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், அதுவும் ஒரு வகையில் வித்தியாசமான முயற்சியாகவே இருக்கிறது.

இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக செல்ல மறுக்கிறது.

‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கான முயற்சி தான் படத்தின் மையக்கரு என்பதால், அந்த நாடகத்தில் மாணவர்கள் எப்படி நடிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அந்த நாடகம் அரங்கேறும் போது அதை முழுமையாக காட்டாமல், இளம் ஜோடியின் ஆட்டம், பாட்டத்துடன் முடித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக பார்க்க கூடாது என்ற வழக்கமான மெசஜை பெற்றோர்களுக்கும், இளம் வயதில் வரும் காதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படித்து முடித்துவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மற்றொரு வழக்கமான மெசஜை மாணவர்களுக்கும், சொல்லியிருக்கும் இயக்குநர் பாப்பா ராவ் பிய்யாலா, அதை இசையோடு சேர்த்து சொல்லும் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

இயக்குநர் பாப்பா ராவ் பிய்யாலாவின் முயற்சியை பாராட்டினாலும், அதை சொல்லிய விதம் புரியாமலும், படத்தை தொய்வடையவும் செய்கிறது. ஆனால், படத்தின் மேக்கிங், நடிகர்களை வேலை வாங்கிய விதம், இசை, ஒளிப்பதிவு போன்றவற்றுக்காக படத்தில் இருக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘மியூசிக் ஸ்கூல்’ உங்களை நிச்சயம் ரசிக்க வைக்கும்.

ரேட்டிங் 3.5/5

music school reviewsarman joshishreya saran in music schooltamil movie music school reviewtelugu and hindi movie music school review