கடந்த 25 வருடங்களாக தமிழ்சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வலம்வரும் கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் மட்டுமல்ல, கன்னடத்திலும் சேர்ந்து ‘முடிஞ்சா இவன புடி’ என்கிற படத்தின் மூலம் அக்னி பரீட்சை எழுதியிருக்கிறார். பரீட்சையில் பாஸ் ஆனாரா.? அக்னியில் சுட்டுக்கொண்டாரா என்பதை பார்க்கலாம்.
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகொண்டு வம்புதும்புகளுக்கு போகாத அமைதியானவர் சுதீப் (சத்யா).. கோடீஸ்வரர்களின் வீடுகளில் கோடி கோடியாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை கொல்லையடிபவர் இன்னொரு சுதீப் (சிவா). ஆனால் போலீசும் வில்லன்களும் சத்யா தான் இருவராக நாடகமாடுகிறார் என சந்தேகப்படுகின்றனர்.
குறிப்பாக போலீஸ் அதிகாரியான சாய்ரவி சுதீப் மேல் சந்தேகக்கண்ணோடு தான் சுற்றுகிறார். ஆனால் சத்யா தான் வேறு, சிவா வேறு என அவ்வப்போது நிரூபிக்கிறார். அதை அவரது காதலி நித்யா மேனன் உட்பட அனைவரும் நம்புகின்றனர்.. ஆனால் தான் இரண்டுபேர் அல்ல, ஒரே ஆள் தான் என்கிற வரலாற்று உண்மையை ஒரு கட்டத்தில் சுதீப் உடைக்க, காதலிக்கும் அதிர்ச்சி.. வில்லன்களுக்கும் அதிர்ச்சி. தான் ஏன் இவ்வாறு நாடகம் ஆடினேன் என்கிற கதையை கூறி காதலியின் கோபத்தை தனித்து, வில்லன்களின் ஆத்திரத்திற்கு ஈடுகொடுத்து, ஒருவழியாக சுபம் போட்டு நம்மை அனுப்பிவைக்கிறார் சுதீப்.
கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சுதீப்பை வரவேற்போம்.. அப்பாவி காட்சிகளை விட, ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார் மனிதர்.. ரஜினியின் வசனங்களாலும் ரஜினி போன்ற வாய்ஸ் மாடுலேஷனாலும் சுதீப்பை செதுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்..
சுதீப்பின் அப்பாவித்தனம் கண்டு காதலாவதும், அவர் நாடகமாடுகிறார் என தெரிந்ததும் கொபமாவதும் என வழக்கம்போல, பாசமான, கோபமான காதலியாக நித்யா மேனன். பிளாஸ்பேக்கில் வரும் பாசமான அப்பா பிரகாஷ்ராஜ், நீங்க இவ்வளவு நல்லவரா என கேட்கவைக்கும் நல்ல போலீஸ் அதிகாரியாக நாசர். சுதீப்பின் முகமூடியை கிழிப்பதாக சொல்லி அவரிடம் அடிக்கடி பல்ப் வாங்கும் சாய்ரவி.. இது போதாதென்று பெரிய வில்லத்தனம் எதையும் காட்டாத மூன்று வில்லன்கள் என வழக்கம்போல கே.எஸ்.ரவிக்குமாருக்கு துணை நின்றிருக்கிறது நட்சத்திர பட்டாளம்.
ஈமானின் இசையில் போதவில்லையே, லாமா லாமா பாடல்கள் கேட்கலாம் ரகம். காட்சிகளை சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம். டி.சிவகுமார் என்பவர் இந்தப்படத்திற்கு கதை எழுதியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கதையும் திரைக்கதையும் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே எடுத்த ‘வில்லன்’ படத்தைப்போலவே இருப்பதையும் ரஜினியின் ‘உழைப்பாளி’ ஆள் மாறாட்டத்தையும் கே.எஸ்.ரவிகுமார் எப்படி கவனிக்க தவறினார் என்றுதான் தெரியவில்லை. லிங்காவில் சரிவுக்கு சென்ற ரவிக்குமார், இன்னும் சரிவிலேயே தான் நிற்கிறார் என்பதை இந்தப்படம் அழுத்தமாக கூறியுள்ளது.
பின் குறிப்பு : இது நம் தனிப்பட்ட கருத்து.. படம் பார்ப்பவர்களுக்கு சில நேரம் இவை பிடிக்கவும் செய்யலாம்.. அதனால் முடிஞ்சா ஒரு நடை போய் பார்த்துவிட்டு வாருங்கள்..