‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) விமர்சனம்

நடிகர்கள் : ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சண்ட்
இசை : திபு நிணன் தாமஸ்
ஒளிப்பதிவு : அருள் வின்செண்ட்
இயக்கம் : மனு ஆனந்த்
தயாரிப்பு : பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் – ஸ்ரீ வினீத் ஜெயின், எஸ்.லக்‌ஷ்மண் குமார்

ஆர்யா, சரத்குமார், கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டணியில், ‘எப்.ஐ.ஆர்’ புகழ் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ரசிகர்களை எக்சைட் படுத்துகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

இந்திய முதன்மை வெளிநாட்டு உளவு அமைப்பான ராவில் பணியாற்றும் உளவாளியான சரத்குமார் பல வருடங்களாக அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல்வேறு நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்து பாதுகாத்து வருகிறார். இதற்காக தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் சரத்குமாரை கைது செய்யும் ரஷ்ய ராணுவம், அந்த அணு ஆயுத மூலப்பொருளையும் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறது. சரத்குமாருடன், அந்த மூலப்பொருளையும் கைப்பற்றும் பணியை ரா அதிகாரியான மஞ்சு வாரியர், மற்றொரு உளவாளியான கெளதம் கார்த்திக்கிடம் ஒப்படைக்கிறார். கெளதம் கார்த்திக் சரத்குமாரை காப்பாற்றினாலும், உலகளவில் பெரும் நாசவேலைகளை செய்து வரும் மிகப்பெரிய சிண்டிகேட்டின் முகம் தெரியாத ஒருவருக்காக ரா அமைப்புக்கு துரோகம் செய்கிறார். இதனால் ரா அமைப்பின் ரஷ்ய திட்டம் தோல்வியில் முடிந்ததால், மஞ்சு வாரியர் மற்றும் குழுவினரை தேச துரோகிகளாக்கி விசாரணை மேற்கொள்ள இந்திய பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்கிறது.

இந்த நிலையில், என்ன நடந்தாலும் அணு ஆயுத மூலப்பொருள் வேறு யாரிடமும் கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மஞ்சு வாரியர், அதையும், அதை பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சரத்குமாரையும் காப்பாற்றும் பணியை சென்னையில் இருக்கும் உளவாளி ஆர்யாவிடம் ஒப்படைக்கிறார். அதன்படி, ரஷ்யா செல்லும் ஆர்யா மற்றும் குழுவினர் அணு ஆயுத மூலப்பொருளை வெற்றிகரமாக இந்தியாவுக்கு எடுத்து வந்தாலும், சரத்குமாரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு பதிலாக அதுல்யா ரவியை காப்பாற்றி அழைத்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு அவர்கள் அணு ஆயுத மூலப்பொருளை எடுத்து வந்ததும், நிலமை மாறிவிடுவதோடு, அனைத்தும் கெளதம் கார்த்திக்கின் திட்டம் என்பதும், அதை வைத்து இந்தியாவில் அவர் மிகப்பெரிய சதிவேலைக்கு திட்டமிட்டிருப்பதும் தெரிய வருகிறது. கெளதம் கார்த்திக்கின் சதி திட்டம் என்ன ? அதை ஆர்யா முறியடித்தாரா? இல்லையா?, இந்த சதி திட்டங்களுக்கு பின்னணியில் இருக்கும் ராணா யார் ? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, வலிமையான உடல், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், உளவாளியாக அறிமுகமாகி வில்லனாக மிரட்டும் கெளதம் கார்த்திக், ரா அமைப்பு அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர் ஆகியோர் கதாபத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ரய்சா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் பிரமாண்டமான லொக்கேஷன்கள் மூலம் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படத்தை தரமாகவும் காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்திருக்கிறார்.

பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், சண்டைக்காட்சிகளில் அதீத சத்தத்தை தவிர்த்து ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, சண்டைப்பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் என தொழில்நுட்ப கலைஞர்களின் கடும் உழைப்பு திரையில் தெரிகிறது.

இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் மனு ஆனந்த், அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக கொடுத்திருக்கிறார்.

இந்திய உளவு அமைப்பான ரா பின்னணியில் சில உண்மை சம்பவங்களை கோர்த்து முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக கையாண்டிருந்தாலும், அதை பிரமாண்டமாகவும், ஆங்கிலப் படங்களுக்கு நிகராகவும் கொடுத்திருக்கும் இயக்குநர் மனு ஆனந்த், எதிர்பார்ப்பின்றி வரும் ரசிகர்களை இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ மூலம் மிகப்பெரிய அளவில் திருப்திப்படுத்துகிறார்.

ரேட்டிங் 3.2/5

arya in mr x reviewmr x movie reviewmrx reviewமிஸ்டர் எக்ஸ் திரைப்பட விமர்சனம்மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்