நடிகர்கள் : மோகன்லால், தேவ்கில், விஜயபாபு, மியா ஜார்ஜ், மஞ்சரி பத்னிஷ், சித்திக், சாய்குமார், விஜயகுமார் மற்றும் பலர்
இசை : கோபி சுந்தர்
ஒளிப்பதிவு : சதீஷ் குறூப்
கதை, திரைக்கதை, இயக்கம் : பி.உன்னிகிருஷ்ணன்
2008ல் ‘மாடம்பி’, 2012ல் ‘கிராண்ட் மாஸ்டர்’ என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் உன்னிகிருஷ்ணனும் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.. அதேபோல கடந்த வருட இறுதியில் வெளியாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிளாக் பஸ்டர் படமான ‘த்ரிஷ்யம்’ படத்தை அடுத்து வெளியாகி இருக்கும் மோகன்லாலின் படம். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர் ஃப்ராடு’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா..?
நாற்பது வருடங்களுக்கு முன் அரண்மனை குடும்பத்தினரின் பங்காளி சண்டையால் கோர்ட் உத்தரவுப்படி நிலவறைக்குள் வைத்து பூட்டப்படுகின்றன அரண்மணை பொக்கிஷங்கள்.. நாற்பது வருடம் கழித்து பிரிந்து கிடக்கும் பங்காளிகளின் வாரிசுகளுக்கு அதை சமமாக பிரித்துக்கொடுக்கவேண்டும் என்கிற கோர்ட் உத்தரவுப்படி இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
இன்னொரு பக்கம் டெக்னாலஜியை பயன்படுத்தி மிகப்பெரிய திருட்டுக்களை செய்யும் ஹைடெக் திருடரான மோகன்லாலிடம் அந்த நகைகளை கொள்ளையடித்து தரச்சொல்லி கேட்கிறார் ஜெய்ப்பூரில் இருக்கும் தேவ்கில். அதற்கு ஒப்புக்கொள்ளும் மோகன்லால் கேரளாவுக்கு நகை மதிப்பீட்டாளர் என்கிற போர்வையில் தனது அசிஸ்டெண்ட்டுகளான விஜயபாபு மற்றும் மஞ்சரி ஆகியோருடன் வருகிறார்.
இங்கே அரண்மணை வாரிசுகளில் நால்வரில் விஜயகுமார் (நம்ம நாட்டாமைதான்) உட்பட மூவர் சொத்துக்களுக்கு ஆசைப்பட, நாலாவதாக இருக்கும் சித்திக் அவற்றை அரசாங்கத்தில் சேர்க்கவேண்டும் என்கிறார். இதற்கு மற்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் மோகன்லால் நினைத்து வந்த காரியம் ஈடேறியதா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
இப்போதைய ட்ரெண்டான லேசாக நரைத்த தலைமுடி, முழுவதும் நரைத்த தாடி என இமேஜைப்பற்றி கவலைப்படாமல் புதிய கெட்டப்பில் மிளிர்கிறார் நம்ம லாலேட்டன்.. நிதானமான நடை, அமைதியான பேச்சு, ஆக்ரோஷமான சண்டைக்காட்சி என காட்சிக்கு காட்சி மோகன்லாலின் ராஜ்யம் தான். குறிப்பாக லேசர் டெக்னாலஜி உதவியுடன் அவர் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க நடத்தும் ஒவ்வொரு மூவும் பிரமிக்க வைப்பதோடு, எங்கே அவர் மாட்டிக்கொள்வாரோ என திக் திக்கையும் ஏற்படுத்துகிறது.
மோகன்லாலின் அசிஸ்டெண்ட்டாக வரும் விஜயபாபு ஒரு சின்சியர் ரோபோ என்றால் கூடவே வரும் இன்னொரு அசிஸ்டெண்ட் மஞ்சரி அழகு ப்ளஸ் கவர்ச்சிப்பதுமை.. சித்திக்கின் மகளாக அரும் மியா ஜார்ஜ் அமைதியான நடிப்பில் நம் மனதை அள்ளுகிறார். அரண்மனை வாரிசாக வரும் நம்ம விஜயகுமாரை வில்லனாக மாற்றியதோடு அவருக்கு மலையாளத்தில் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்கள்.
மெயின் வில்லனாக வரும் தேவ்கில் படத்தின் ஆரம்பத்திலும் இறுதிக்காட்சியிலும் வந்து மோகன்லாலிடம் அடி வாங்கி பரிதாபமாக செத்துப்போகிறார். போலீஸ் அதிகாரி சாஜனாக வரும் சாய்குமார் தனது நரித்தனத்தை நன்றாகவே காட்டியிருக்கிறார்.
இரண்டு பாடல்கள்.. இரண்டுமே மோகன்லால் மேடையில் பாடுவது போன்று வெஸ்டர்னும் கர்னாடிக்கும் இணைந்த பாடல்கள்.. நாம் கைதட்டலாமா என யோசிப்பதற்கு இடம் தராமல் காட்சியில் பங்குபெறும் பார்வையாளர்களே அதை செய்து நம் வேலையை மிச்சமாக்கி விடுகிறார்கள்.
சதீஷ் குறூப்பின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கிறது. இரண்டு சண்டைக்காட்சிகள் தான் என்றாலும் அதில் ஜால வித்தை காட்டியிருக்கிறார் நம்ம ஊர் ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா.
ஹாலிவுட் படங்களைப்போல இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இதில் திருட்டிற்கு உதவும் டெக்னாலஜியை பல இடங்களில் பயன்படுத்தி இருப்பதை பாராட்டலாம். க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸும் ஓகே தான். அதே வேளையில் திரைக்கதையில் இன்னும் நன்றாகவே விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்
குறிப்பாக மோகன்லாலுக்கு இன்னும் பல சிக்கல்களை உருவாக்கி அதிலிருந்து அவர் சாமர்த்தியமாக தப்புவது போல காட்சிகளை அமைத்திருந்தால் இன்னும் சுவராஸ்யம் கூடியிருக்கும், இதில் மோகன்லாலுக்கு எல்லாமே எளிதாக செய்யமுடிவது ஒன்றுதான் குறையாக நமக்கு தெரிகிறது.
ஆனாலும் அந்தக்குறையை மறைத்து போரடிக்காமல் கதையை நகர்த்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். இருப்பினும் ‘த்ரிஷயம்’ கண்ட வெற்றியில் இது பாதியை மட்டுமே தொட இயலும் என்பதுதான் உண்மை.