மாம் – விமர்சனம்

ஸ்ரீதேவி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘மாம்’..

அன்பான கணவர் அழகான இரண்டு பெண் குழந்தைகள் என்கிற குடும்பத்துக்கு சொந்தக்காரர் தான் பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி.. ஆனால் பள்ளிக்கூடம் செல்லும் டீனேஜ் பெண்ணான அவரது மூத்தமகள் (ஸ்ரீதேவி கணவரின் முதல் மனைவியின் பெண்) ஸ்ரீதேவியின் உண்மையான அன்பைக்கூட புரிந்துகொள்ளாமல் விரோதமாகவே பார்க்கிறாள்.

ஒருநாள் தாயின் சொல்லை கேளாமல் பார்ட்டிக்கு சென்ற மகள் அவளது வகுப்பு மாணவன் மற்றும் அவனது கூட்டாளிகள் என நால்வரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். குற்றுயிராய் கிடக்கும் அவளை மருத்துவமனையில் சேர்க்கும் ஸ்ரீதேவி, அந்த நால்வருக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். இருப்பினும் அவர்கள் வழக்கை உடைத்து விடுதலையாகின்றனர்..

பெண்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் தானா, அவர்களால் நாட்டில் சுதந்திரமாக நடமாடவே முடியாதா என பொங்கி எழும் ஸ்ரீதேவி அந்த கயவர்களுக்கான தண்டனையை தானே தருவதற்கு புரட்சிப்பெண்ணாய் வீறுகொண்டு கிளம்புகிறார்.. அவரால் தான் நினைத்தை சாதிக்க முடிந்ததா, இந்த சமூகம் அதற்கு உறுதுணையாய் நின்றதா என்பது மீதிப்படம்.

பெற்றால் தான் பிள்ளையா என தான் பெறாத மகளுக்காக இழைப்பட்ட அநீதிக்காக போராடும் ஒரு சராசரி தாயின் நேர்மையை, பாசத்தை, பரிதவிப்பை காட்சிக்கு காட்சி இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் கதையின் நாயகி தேவகியாக நடித்துள்ள ஸ்ரீதேவி. அவரது டீனேஜ் மகளாக, அந்த வயதிற்கே உரிய விட்டேத்தியான குணாதிசயங்களை அழகான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார் பார்ப்பதற்கு ராதிகா ஆப்தேயின் தங்கை போல தோற்றமளிக்கும் சாஜல் அலி.

ஸ்ரீதேவியின் கணவராக ஜென்டில்மேன் கேரக்டரிலும் அதேசமயம் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாகவும் பாந்தமாக பொருந்தியுள்ளார் அட்னன் சித்திக். பிரைவேட் டிடெக்டிவ் டிகேவாக வரும் நவாசுதின் சித்திக்கின் படு யதாரத்தமான காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு படம் முடிந்தும் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.

அதேபோல நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வரும் அக்சய் கன்னா இன்னொரு கவனம் ஈர்க்கும் கதாபாத்திரம்.. குற்றவாளிகளாக நடித்துள்ள அபிமன்யு சிங் உட்பட நால்வரும் மிகச்சரியான தேர்வு..

காரில் மாணவிக்கு நடக்கும் அந்த கொடூரத்தை நமக்கு காட்டாமலேயே பயங்கரமாக உணர வைக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை.. படத்தின் முதுகெலும்பும் பின்னணி இசை தான். ஸ்ரீதேவி தனது மகளுக்கு நியாயம் தேடி செய்யும் அனைத்தும் ஏற்புடையதுதான் என்றாலும் அதில் சில இடங்களில் லாஜிக் மீறல் இல்லாமலும் இல்லை.

இருந்தாலும் டில்லியில் நடைபெற்ற கல்லூரி மாணவி பாலியல் பாலத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் மிக நேர்த்தியாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குனர் ரவி உத்யவார்.. இளம்பெண்களின் அம்மாக்கள் வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு பொழுதுகளை நகர்த்தும் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். அதேசமயம் ஒரு மாற்றாந்தாயை தனது தாயாக அந்த பெண் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வையும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியுள்ளார்.

மொத்தத்தில் மாம் ஒரு நல்ல தரமான படைப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை.

A R RahmanMom Movie ReviewSri Deviமாம்ஸ்ரீ தேவி