நடிகர்கள் : முனீஷ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரேஷி, கோடங்கி வடிவேல், மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி
இசை : பிரனவ் முனிராஜ்
ஒளிப்பதிவு : சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்
இயக்கம் : கிஷோர் முத்துராமலிங்கம்
தயாரிப்பு : அக்சஸ் பிலிம் பேக்டரி, குட் ஷோவ் – தேவ், கே.வி.துரை
சென்னையில் வாடகை வீடு, தேவைக்கு குறைவான ஊதியம், மனைவி, இரண்டு பிள்ளைகள் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் முனீஷ்காந்துக்கு தனது கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்த இடம் வாங்கி, வீடு கட்டி வாழ வேண்டும் என்று ஆசை. முனீஷ்காந்த் வாங்கும் சம்பளத்தினால் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாது என்றாலும், தன்னால் முடிந்தவரை சிக்கனம் செய்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது மனைவியின் ஆசை பெரிய அளவில் இருப்பதால், அவ்வபோது இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், குடும்ப பிரச்சனை அனைத்தும் தீர்ந்து, தாங்கள் ஆசைப்படி செல்வ செழிப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஒன்று முனீஷ்காந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு கிடைக்கிறது. ஆனால், முனீஷ்காந்தின் அஜாரக்கிரதையால் அந்த வாய்ப்பு பறிபோய்விடுகிறது. இதனால் குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்க முனீஷ்காந்த் இழந்த வாய்ப்பை திரும்ப பெற போராடுகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பது தான் படத்தின் கதை.
காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்திருந்தாலும், அதற்காக எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான நடிப்பை கொடுத்து தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார்.
கதையின் நாயகியாக, முனீஷ்காந்தின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்ப பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்து எதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறார்.
காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளியாக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களும் அறம் மற்றும் மனிதம் போற்றும் மக்களாக வலம் வந்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை எந்தவித கலப்படமும் இன்றி நம் கண் முன் நிறுத்தி இருக்கிறது.
குடும்ப நாடக பாணியிலான கதை என்றாலும், அதை பரபரப்பாக நகர்த்தி செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற கேள்வியோடு சில இடங்களில் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை வைத்து கம்யூனிசம் பேசியிருக்கிறார். தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், அதை பிறர்க்கு பகிர்ந்தளித்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை, என்ற கருத்தை பல குறியீடுகள் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, எளிமையான முறையில் அனைத்து தரப்பினருக்கும் புரிய வைத்திருக்கிறார்.
எளிமையான கதை மற்றும் யூகிக்கும்படியான திரைக்கதையாக இருந்தாலும், திரை மொழியில் சற்று சுவாரஸ்யமாக சொன்னதோடு, அறம் மற்றும் மனிதத்தை வலியுறுத்தும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை வடிவமைத்து, பார்வையாளர்களுக்கு நேர்மறை சிந்தனையை விதைத்திருக்கிறார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்.
குடும்பத்துடன் பார்க்க கூட பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, கதை மாந்தர்களுடனும், கதைக்களத்துடனும் பார்வையாளர்களை தொடர்பு படுத்திக்கொண்டு சிந்திக்க வைக்கும் நல்ல பாடமாகவும் இருக்கிறது இந்த ‘மிடில் கிளாஸ்’.
ரேட்டிங் 3.5/5