மெட்ரோ – விமர்சனம்

செயின்பறிப்பு திருடர்களையும் அவர்களின் நெட்வொர்க்கையும் அவர்கள் உருவாவதன் பின்னணியையும் கொஞ்சம் டீடெய்லாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் மெட்ரோ

ரிட்டையர்டு கான்ஸ்டபிள் ராஜா அவரது மனைவி துளசி மகன்கள் சிரிஷ், சத்யா என அழகான, நிம்மதியான குடும்பம். அண்ணன் சிரிஷ் பத்திரிக்கை துறையில் வேலைபார்க்க, தம்பி சத்யா காலேஜ் படிக்கிறார். காஸ்ட்லி பைக், காஸ்ட்லி மொபைல் என காலேஜ் செல்லும் சத்யா ஆசைப்பட குடும்ப சூழல் அதற்கு சாதகமாக இல்லை.. கல்லூரி நண்பன் ஒருவன் மூலமாக செயின் திருட்டை பழகி அதில் தொடர்ந்து ருசி காண்கிறார்.

ஒருகட்டத்தில் நிலைமை அவரின் தாயை கொலைசெய்யும் அளவு போய்விடுகிறது.. தாயை கொன்ற கொலைகாரனை தேடி அண்ணன் சிரிஷும் அவரது நண்பன் சென்றாயனும் தேடுதலில் இறங்குகிறார்கள். தம்பிதான் கொலைகாரன் என்கிற உண்மை தெரிய அதிர்ச்சியாகும் அண்ணன் என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்..

நேர்மையாக சிக்கனமாக வாழ முற்படும் அண்ணனாக சிரிஷ் பக்குவமான நடிப்பு. தம்பியாக வரும் சத்யா அப்பாவியாக இருப்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டு தனது அம்மாவை கொல்லும்போதும், குருவுக்கே ஆப்பு வைக்கும்போதும் அடப்பாவி என பதறவைக்கிறார். பாபி சிம்ஹா செயின் பறிப்பு கும்பலின் மாஸ்டர் மைண்ட் என்றாலும் அதிலும் அஹிம்சையை கடைபிடிப்பது அவரை நேர்மையாளராகவே காட்டுகிறது. அவரது அசத்தலான நடிப்பு தான் பார்வையாளர்களை இழுத்து பிடிக்கிறது.

கதாநாயகி மாயாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. ஆத்மார்த்தமான தம்பதியாக வரும் ராஜா-துளசியின் நடிப்பு நிறைவு. வழக்கமாக கத்திப்பேசி எரிச்சலூட்டும் சென்றாயனுக்கு, இதில் அருமையான கேரக்டர்.. நன்றாக செய்திருக்கிறார். ஒரே சீனில் வந்தாலும் யோகிபாபு உதார் காட்டி அலறவிடுகிறார்..

இசையமைப்பாளர் ஜோகன் பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்ட, செயின் பறிப்பு சம்பவங்களின் உக்கிரத்தையும் அதன்பின்னணியில் நடைபெறும் தங்க வியாபாரத்தையும் உதயகுமாரின் ஒளிப்பதிவு மிரட்டலாக படமாக்கி இருக்கிறது.

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ஏற்கனவே ‘ஆள்’ படம் மூலம் நம்மை கவர்ந்தவர்.. இந்தப்படத்தில் செயின் திருட்டுகளின் பின்னணியை அலசியிருக்கிறார்.. இடைவேளை வரை ஒருவித விறுவிறுப்புடனேயே படத்தை நகர்த்தி இருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள ஒருவன் தான் வில்லன் என தெரிந்ததும் கதையின் மீதான பிடிமானம் அப்படியே விட்டுப்போய் விடுகிறது.

அழகான திரைக்கதையில் அந்த இடத்தில் இருந்துதான் இயக்குனர் சறுக்க ஆரம்பிக்கிறார். கடந்த வருடம் கூட இதே குடும்ப பின்னணியில் க்ரைம் என்கிற கான்செப்ட்டுடன் வந்த ஒரு படம் மண்ணை கவ்வியதை மறந்துவிட்டார்போலும். இருந்தாலும் க்ரைம் த்ரில்லர் என்கிற வகையில் ஒருமுறை ரசித்துவிட்டு வரலாம்.

MetroMetro ReviewMetro Tamil Movie ReviewSathyaSirshசத்யாசிரிஷ்மெட்ரோமெட்ரோ விமர்சனம்