நடிகர்கள் : கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன்,
இசை : சங்கர் ரங்கராஜ்
ஒளிப்பதிவு : தேவராஜ் புகழேந்தி
இயக்கம் : திரவ்
தயாரிப்பு : திரவ்
சாதனையாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் பின்னணியில் நிச்சயம் மற்றவர்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கும், அப்படி இல்லை என்றால் அவர்களால் வெற்றி பெற முடியாது, என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் திரவ், ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை, அவர்களது பிள்ளைகள் மூலம் விவரிக்கும் உணர்வுப்பூர்வமான கதையை பீல்குட் படமாக கொடுத்திருக்கிறார்.
தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கிஷோர், சொந்த வீடு, மனைவி, இரண்டு பிள்ளைகள் என அன்பான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்று பயணித்தாலும், பாடகராக வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் போனதால் சற்று தோல்வி மனநிலையில் வாழ்கிறார். ஆனால், அவரது குரலுக்கு பெரும் ரசிகையாக இருக்கும் அவரது மகள், அவரை பாடகராக மேடை ஏற்ற ஆசைப்படுகிறார். தன் மகளுக்காக மேடை ஏறும் கிஷோர், தனது லட்சியப் பாதையில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளும் போது, குடும்பத்தார் மற்றும் சுற்றாரின் ஆதரவு இல்லாததால் மீண்டும் தடுமாற்றம் அடைகிறார். அதன் மூலம், தன்னிடம் இருக்கும் அனைத்தையும் இழந்து போன்ற உணர்வால், விரக்தி மற்றும் தோல்வி மனநிலைக்கு தள்ளப்படுகிறார். அதன் மூலம் அவரது வாழ்க்கை என்னவானது ? என்பதை, குடும்பத்தாரின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சரிந்து போகும், சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் சொல்வதே ‘மெல்லிசை’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார், ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது அளவான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை தனது கதாபாத்திரத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள செய்து விடுகிறார்.
கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், குடும்ப பாதுகாப்புக்காக அனுசரித்து போகும் மனைவியாக இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவரும் சிறுவர்களாக இருக்கும் போது சரி, இளம் பருவத்திலும் சரி, இயல்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் திரைக்கதையில் நிறைவாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் பணி எளிமையாக இருந்தாலும், கதைக்களத்திற்கு அதிகமான வலிமையை சேர்த்திருக்கிறது. நாயகனின் வீடு மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்களை காட்சிப்படுத்திய விதம் உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.
சங்கர் ரங்கராஜின் இசையில் பாடல் வரிகள் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
இயக்குநர் திரவ், ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமான கதையாக சொல்வதில் கவனம் ஈர்ப்பதோடு, ஒரு எளிமையான மனிதனின், எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்களை அவர் எபப்டி கடந்து செல்கிறார், அதற்கு குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை மனதுக்கு நெருக்கமான காட்சிகளுடன் உணர்த்தியிருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களின் மூலம் மனிதத்தை விதைத்து, ரசிகர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, இந்த ‘மெல்லிசை’-யை கொண்டாட வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5