மாப்ள சிங்கம் – விமர்சனம்


கிராமத்தில் சண்டியர் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் சமூக சேவகர் என்கிற பெயரில் ‘மாப்ள சிங்கம்’ ஆக வலம் வருபவர் விமல்.. ஊரில் வயசுப்பெண்கள் காதலித்து ஓடிப்போக முயற்சித்தால் நண்பர்கள் சூரி, காளி வெங்கட் ஆகியோருடன் சேர்ந்து அவர்களை மனம் மாற்றி காதலை உடைப்பது பெரியப்பா ராதாரவி கொடுத்த உபரி வேலை..

தேர்த்திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் ஊரே இரண்டுபட்டு கிடக்க, அந்த ஊர் பெரிய மனிதர் ஜெயபிரகாஷின் மகனை காதலிக்கிறார் ராதாரவியின் மகள்.. ராதாரவியின் காதுகளுக்கு விஷயம் போகாமல் பஞ்சாயத்து பண்ணி காதலை பிரிக்கப்போன விமல், பையனின் அக்கா அஞ்சலியை பார்த்ததும் அவரிடம் சரண்டர் ஆகிறார்..

மகள் காதலிப்பதை அறிந்து அவளுக்கு ராதாரவி வேறு மாப்பிள்ளை பார்க்க, அவரோ தனது காதலனை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி அதிர்ச்சி கொடுக்கிறார்.. இதில் இரண்டு தரப்புக்கும் இன்னும் மோதல் சிக்கலாக, விமல், அஞ்சலியின் காதலுக்கும் ரெட் சிக்னல் விழுகிறது.. ஊர்ப்பிரச்சனையை சமாளித்து தேரை இழுத்தார்களா..? குடும்ப பிரச்சனை முடிந்து காதல் கைகூடியதா என்பது நமக்கு விடைசொல்லும் க்ளைமாக்ஸ்..

ராமராஜன் காலத்தில் இருந்து தவறாமல் பார்த்துவரும் ஊர்பிரச்சனை, தேர்பிரச்சனை, கூடவே காதலிக்க கூடாது என உபரி பிரச்சனை இவற்றை வைத்து கேசரி கிண்ட முயற்சித்து கிச்சடியாக மாற்றியிருக்கிறார்கள்… உஷாராக படத்தின் நாயகன் விமலை தனியாக எங்கும் விடாமல் சூரி, காளி வெங்கட், போதாதற்கு வெள்ளைக்கார ஆசாமி என மூவர் கூட்டணியுடன் சேர்த்தே உலாவ விட்டுள்ளார் இயக்குனர் ராஜசேகர். அதனால் கதை வீக்காக இருந்தாலும் காமெடி ஏரியா ஓரளவு களைகட்டவே செய்கிறது..

வழக்கம்போல ஸ்ட்ரிக்ட்டான ஸ்கூல் டீச்சர் போல அஞ்சலியின் நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அவர் வெட்கப்படும்போது எல்லாம் நம்மை கவிழ்த்து விடுகிறார்.. அந்தஸ்து, கெளரவம் பார்க்கும் கேரக்டர் என்றால் ராதாரவிக்கு சொல்லியா தரவேண்டும். கலெக்டராக இரண்டு காட்சிகளில் வந்தாலும் பாண்டியராஜன் ‘நச்’.

நம்ம கிராமத்து பெரிசுகளின் கோமாளித்தனமான சட்டதிட்டங்களை அந்த வெள்ளைக்கார இளைஞர் குத்திக்காட்டி சூரியை டென்ஷனாக்குவது நல்ல காமெடி. கூடவே எதிர் தரப்பில் அஞ்சலியின் முறைமாமனாக வரும் முனீஷ்காந்தும் தனது பங்குக்கு காமெடியில் சலம்புகிறார்.. ‘ஆபீஸ்’ புகழ் மதுபாலா துருதுருவென கவனம் கவனம் ஈர்க்கிறார். ரகுநந்தனின்‘ இசையில் ‘எதுக்கு மச்சான் காதலு’ பாடல் ஜாலி குத்தாட்டம்..

கலகலப்பான கிராமத்து கதை கனமில்லாத காட்சிகளால் மனதில் தங்க மறுத்தாலும் நகைச்சுவையால் சந்தோஷப்படுத்தவும் தவறவில்லை.

AnjaliEscape ArtistsMapla Singam Movie ReviewRadharaviSooriVemal