மலேசியாவில் சிறுவர்கள் காப்பகம் என்கிற பெயரில் , அந்த காப்பகத்தில் இருக்கும் சிறுவர்களை வீதிவீதியாக சென்று பொருட்கள் விற்க விடுவது, இன்னும் சிலரை வெளிநாட்டுக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் அந்த நிறுவனத்தின் காப்பாளராக இருக்கும் உதயகுமார். ஒருமுறை அவரிடமிருந்து ஒரே ஒரு சிறுவன் மட்டும் தப்பிக்கிறான்.
அவன் கப்பலில் வேலைபார்த்துவிட்டு லீவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் சி.கே.குமரேசனிடம் அடைக்கலமாகிறான்.
இதை அறிந்த உதயகுமாரின் ஆட்கள் குமரேசனின் காரை அடித்து உடைக்கப்போவதாக மிரட்டி, சிறுவனை தங்களிடம் ஒப்படைத்தால் காரை ஒப்படைப்பதாக கூறுகின்றனர்.
குமரேசனும், காருக்காக அந்த சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தாலும். பின்னர் மனம் மாறி சிறுவனை மீட்க அவர்களை தேடி புறப்படுகிறார்.. வழியில் எதிரபாராத தடங்கல் ஏற்படுகிறது. அதையெல்லாம் கடந்து இறுதியில் குமரேசன் அந்த சிறுவனை மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகனாக வரும் குமரேசனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். இங்கே அவர் புதுமுகம் என்றாலும் மலேசியாவில் பல படங்களில் நடித்தவர்தான். நடிப்பிலும் ஓரளவுக்கு நம்மை கவர்கிறார்.. குறிப்பாக சிறுவனிடம் பாசம் காட்டும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகிகளாக புன்னகை பூ கீதா, ஷைலா நாயர் நடித்திருந்தாலும் ஷைலாவுக்கு குறைவான அளவு காட்சிகள்தான். ஆனால் அதையும் நிறைவாக செய்திருக்கிறார். புன்னகை பூ கீதா சண்டைக்காட்சியிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
வில்லன் உதயகுமார் பையன்களிடம் அன்பு காட்டுவதுபோல வசியம் பண்ணுவதும் இன்னொரு பக்கம் கோர முகம் காட்டுவதும் அருமை.. நாயகன், நாயகி காட்டில் சிக்கிக்கொள்வது, நாயகனின் பிளாஸ்பேக் ஆகியவற்றின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் சுவாரசியம் இன்னும் கூடியிருந்திருக்கும்..