’மெட்ராஸ்காரன்’ விமர்சனம்

நடிகர்கள் : ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன், கீதா கைலாசம், கருணாஸ்
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ்.குமார்
இயக்கம் : வாலி மோகன் தாஸ்
தயாரிப்பு : எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் – பி.ஜெகதீஷ்

‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மெட்ராஸ்காரன்’ மாஸ் காட்டுகிறானா? அல்லது பார்வையாளர்களை மந்தமாக்குகிறானா? விமர்சனத்தை பார்ப்போம்.

சென்னையைச் சேர்ந்த நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்பாராமல் நடக்கும் சிறிய விபத்து மூலம் ஷேன் நிகமின் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாதபடி தடம் மாறுகிறது. அது எப்படி?, அதனால் அவர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார், இறுதியில் அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் சொல்வதே ‘மெட்ராஸ்காரன்’.

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மலையாள நடிகர் ஷேன் நிகம், முதல் படத்திலேயே ஆக்‌ஷன் கதைக்களத்தை அசால்டாக கையாண்டிருக்கிறார். அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவது, அம்மாவிடம் பாசம் காட்டி பேசுவது, காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று வயதுக்கு ஏற்ப துறுதுறு என்று நடித்திருப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆனால், என்ன அவரது வசன உச்சரிப்பில் அக்மார்க் கேரளத்து வரவு என்பது அப்பட்டமாக தெரிகிறது.

நாயகியாக நடித்திருக்கும் நிஹாரிகாவின் ஒரு வார்த்தை தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்றாலும் படத்தில் அவரது திரை இருப்பு என்பது மிக மிக குறைவே. அதை சமாளிப்பதற்காகவே அம்மணியை ‘அலைபாயுதே’ படத்தின் பாடல் ஒன்றில் சில நிமிடங்கள் ஆட வைத்து ஆறுதலடைய செய்திருக்கிறார்கள்.

ஆண்டி வில்லன் என்று சொல்லக்கூடிய நல்லவனா?, கெட்டவனா? என்ற கேள்வியை எழுப்பும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சாம்.சி.எஸ் இசையில் திருமண பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக மட்டும் இன்றி கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றவாறும் இருக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், வேகமான திரைக்கதைக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் வீரியம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார், சண்டைப்பயிற்சி இயக்குநர், கலை இயக்குநர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம், திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், மேக்கிங் மூலம் மிரட்டியிருக்கிறார்.

படத்தின் மிக முக்கியமானது ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல், இவை இரண்டையும் சம அளவில் திரைக்கதையில் பயணிக்க வைத்திருந்தாலும், சில இடங்களில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் பாதி படம் என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை கதையுட்ன ஒன்றிட செய்வது போல், இரண்டாம் பாதியில், நடந்த தவறுக்கு தான் காரணம் இல்லை, என்பதை அறிந்துக் கொள்ளும் நாயகனின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் திரைக்கதையின் விறுவிறுப்பையும், வேகத்தையும் அதிகரிக்கப்பதோடு, ரசிகர்களுக்கு பரபரப்பான திரில்லர் அனுபவத்தையும் கொடுக்கிறது.

ரேட்டிங் 3/5

madraskaaran reviewtamil film madraskaaran reviewtamil movie madraskaaran reviewதமிழ்ப் படம் மெட்ராஸ்காரன்மெட்ராஸ்காரன் விமர்சனம்