’குரங்கு பெடல்’ விமர்சனம்

நடிகர்கள் : காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், சாய்கணேஷ், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்‌ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : சுமீ பாஸ்கரன்
இயக்கம் : கமலக்கண்ணன்
தயாரிப்பு : சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன்

கோடை விடுமுறையை பல வழிகளில் கொண்டாடி தீர்க்கும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
சைக்கிள் ஓட்ட தெரியாத காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஆசையை புரிந்துக்கொள்ளாமல் காசு கொடுக்க மறுக்கிறார். இதனால் பல வழிகளில் காசு திரட்டி சந்தோஷ் வாடகை சைக்கிள் எடுக்க, அவனது நண்பர்கள் சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கும் பணக்கார வீட்டு பையனுடன் செல்கிறார்கள். இதனால், குரங்கு பெடல் போட்டு தனியாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்கிறார் மாஸ்டர் சந்தோஷ்.

இதற்கிடையே, அவர் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதோடு, அதற்காக கொடுக்க காசும் இல்லாததால், அந்த காசை திரட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார், அது முடியாமல் போக, அந்த சைக்கிளோடு தனது ஊரை தாண்டி பயணிக்கும் சிறுவனின் பயணம் எங்கு போய் முடிந்தது? என்பதையும் சைக்கிள் ஓட்ட தெரியாத தந்தைக்கும் – சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையிலான பாச போராட்டத்தையும் உயிரோட்டமாக சொல்வது ‘குரங்கு பெடல்’.

கந்தசாமி என்ற கிராமத்து மனிதராக எதார்த்தமாக நடித்திருக்கும் காளி வெங்கட், சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அதன் வலியை ஒரு ஓரத்தில் வெளிப்படுத்தும் காட்சிகள் அட்ரா சக்கை ரகம். மகனிடம் பேச்சு வாங்கி, அமைதியாக நிற்பவர் வசனம் இன்றி தனது முகபாவனைகள் மூலமாகவே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்து அசத்துகிறார். எந்த வேடமாக இருந்தாலும் தனது இயல்பான இருப்பு மூலம் அந்த வேடமாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் காளி வெங்கட் இந்த படத்திலும் ரசிகர்கள் மனதில் கந்தசாமியாக சிம்மாசனம் போட்டு உட்கார்கிறார்.

முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் கிராமத்து மண் மனம் மாறாமல் நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழ் பேசி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், மிலிட்டெரி என்று கெத்தாக இருந்த பிரசன்னாவை பற்றிய உண்மை தெரிந்ததும், அவரை வெத்தாக்கும் ஜென்சனின் பேச்சுக்கள் அத்தனையும் சிரிப்பு சரவெடி.

சிறுவனின் அக்காவாக நடித்த தக்‌ஷனா, அம்மாவாக நடித்த சாவித்திரி, வாத்தியார் வேடத்தில் நடித்த செல்லப்பா, தோல் பாவை கலைஞராக நடித்த குபேரன் என அனைவரும் கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன், கோடைக்காலத்தின் வெப்பத்தையும், கிராமத்து நீர் நிலைகளின் குளிர்ச்சியையும், புழுதி படர்ந்த நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஜிப்ரானின் இசையில், பிரம்மாவின் வரிகளில் பாடல்கள் கிராமத்து வாழ்க்கையையும், சிறுவர்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. எளிமையான பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் சிறப்பான பணி படத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார்.

எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு கிராமத்து சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைத்திருப்பதோடு, ரசிகர்களின் பழைய சைக்கிள் நினைவுகளை தட்டி எழுப்பியுள்ளனர்.

தற்போதைய தொழில்நுட்பக் காலக்கட்டத்தில் சிறுவர்கள் சிறுவர்களாக வாழ்வதில்லை என்ற குறையை மறந்து, இப்படியும் ஒரு காலம் இருந்தது, என்பதை சொல்லும் விதமாக இயக்குநர் கமலக்கண்ணன் காட்சிகளை வடிவமைத்திருப்பதோடு, சிறுவர்களின் போட்டி குணம் மற்றும் அதை எளிதில் மறந்துவிட்டு நட்பு பாராட்டும் மனம் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் அழகு.

சைக்கிள் மூலம் கதை சொன்னாலும், அப்பா – மகன் இடையிலான பாசப் போராட்டம், கிராமத்தின் கோடைக்காலம் மற்றும் கிராம மக்களின் வாழ்வியலை எந்தவித அரிதாரமும் இன்றி மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இந்த ‘குரங்கு பெடல்’ சிறுவர்களுக்கு மட்டும் அல்ல சினிமா விரும்பிகள் அனைவருக்கும் கோடை கொண்டாட்ட படம் தான்.

ரேட்டிங் 3.5/5

kurangu pedal movie reviewkurangu pedal reviewtamil movie kurangu pedal reviewகுரங்கு பெடல் திரை விமர்சனம்குரங்கு பெடல் திரைப்பட விமர்சனம்குரங்கு பெடல் விமர்சனம்தமிழ்ப் படம் குரங்கு பெடல்