கோ-2 ; விமர்சனம்

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அராஜக அரசியல்வாதிகள் ஓரிருவரின் முகத்திரையை கிழிக்கும் விதமாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘கோ-2’.

மாநிலத்தின் முதல்வர் பிரகாஷ்ராஜை சேனலில் பணிபுரியும் பாபி சிம்ஹா கடத்துகிறார். டெக்னாலஜியை பயன்படுத்தி தங்கள் இருவரையும் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு வளையம் போட்டுக்கொண்டு முதல்வரை கடத்தியதற்கான விளக்கத்தை சொல்லாமல் இழுத்தடிக்கிறார் பாபி சிம்ஹா. இதற்கிடையே கடத்தல்காரன் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் போலீசாருக்கு அதன்மூலமாக உள்துறை அமைச்சரின் கொலைகார முகம் தெரியவருகிறது.. அதன்பின் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன…? முதலைமைச்சர் மீட்கப்பட்டாரா..? பாபி சிம்ஹா என்ன ஆனார் என்பது க்ளைமாக்ஸ்.

முதல்வரை கடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதனாலேயே படம் ஆரம்பிக்கும்போதே அதை பெரிதாக பொருட்படுத்தவேண்டாம் என சொல்லிவிட்டு லாஜிக்கை சரி செய்திருக்கிறார்கள். முதல்வராக பிரகாஷ் ராஜ்… சொல்லவும் வேண்டுமோ..? வழக்கம்போல ஜமாய்க்கிறார்.

நாயகனாக பாபி சிம்ஹா. ஒரு பாட்டு, ஒரு பைட்டு என சிம்பிளாகவும் அரசியல்வாதியின் முகத்திரையை கிழித்தெறிவதற்கு தந்திரமாக திட்டமிடும் சாணக்யனாக அதிரடியாகவும் ஸ்கோர் பண்ணுகிறார். முதல்வரிடம் இவர் கேட்கும் கேள்விகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், இன்னும் சில முக்கியமான கேள்விகளையும் வைத்திருந்தால் இந்த தேர்தல் நேரத்தில் சூட்டை கிளப்பியிருக்கும்.

கதாநாயகனுக்கு உதவியாக கச்சிதமாக வேலை செய்யும் ‘ஸ்மைல் குயீன்’ நிக்கி கல்ராணி, நண்பனாக வந்து தளபதி வசனம் பேசி சிரிக்கவைக்கும் பாலசரவணன், நடப்பு தமிழக அரசியலில் ஒரு அமைச்சரை காப்பியடித்தது போல உருவாக்கப்பட்ட கேரக்டரில் நடித்திருக்கும் இளவரசு, சமூக சேவகராக நாசர் என அனைவருமே சோடை போகாத கதாபாத்திரங்கள் தான்.

இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய இன்னும் இவர்களில் ஒருவர் மனநிலை குன்றியவராக கொஞ்ச நேரமே வரும் கருணாகரன்.. சூப்பர் பெர்பார்மன்ஸ்.. அதேபோல கமிஷனராக வரும் ஜான் விஜய்யின் எகத்தாளம் ரசிக்க வைக்கிறது.. விசாரணை அதிகாரியாக பரத் ரெட்டியும் பாந்தம் காட்டியுள்ளார்..

படத்தின் நோக்கம் முதல்வரை அழுத்தமாக குற்றம் சாட்டுவது அல்ல என்பதும் அவரது தலைமையில் செயல்படும் மற்ற அமைச்சர்களின் அடாவடிகளை மட்டுமே சுட்டிக்காட்டுவது என்பதும் நன்றாகவே தெரிகிறது.. ஆங்காங்கே மழை வெள்ள பிரச்சனை, டாஸ்மாக் வியாபாரம், சில்லறை பிரச்சனை என சில அரசியல் விஷயங்களை தைரியமாக தொட்டிருந்தாலும் முழுக்கிணறு தாண்டாமல் சமரசம் பண்ணியிருக்கிறார் இயக்குனர் சரத்.. யதார்த்தத்தில் அரசியல் சூழ்நிலையும் அப்படித்தானே இருக்கிறது என்பதால் சமாதானமாகி கொள்வோம்.

இந்த தேர்தல் நேரத்தில் ஒரு சிறு தீப்பொறியையாவது மக்கள் மனதில் இந்த ‘கோ-2’ உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Bobby SimhaDirector SarathElred KumarKo 2ManihasanNikki GalraniPrakash RajR S Infotainment