களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

தங்கர் பச்சான் டைரக்சனில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் பூமிகா நடிப்பில் தடைகள் பல தாண்டி, பல வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள படம் தான் ‘களவாடிய பொழுதுகள்’..

மனைவி இன்பநிலா, சிறுவயது மகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்தும் டாக்ஸி ட்ரைவரான பிரபுதேவா, சவாரிக்காக கர்நாடக மாநிலத்திற்குள் சென்றுவிட்டு திரும்புகிறார். வரும் வழியில் விபத்தில் சிக்கிய தொழிலதிபர் பிரகாஷ்ராஜை காப்பாற்றி, தனது கையில் இருந்த பணத்தையெல்லாம் கட்டி மருத்துவமனையில் சேர்க்கிறார். அதேசமயம் கணவனை தேடி அங்கே வரும் பிரகாஷ்ராஜின் மனைவியாக தனது காதலி பூமிகாகவை பார்த்ததும் அதிர்ச்சியடையும் பிரபுதேவா சொல்லாமல் கொள்ளாமல் ஈரோடு பக்கம் இருக்கும் தனது ஊருக்கு திரும்புகிறார்.

நாட்கள் சென்றாலும் தன்னை காப்பாற்றிய நபர் இன்னும் தன்னை வந்து சந்திக்கவில்லையே என வருத்தப்படுகிறார் பிரகாஷ்ராஜ். அதை தொடர்ந்து பிரபுதேவாவை தொடர்பு கொண்டு பேசும்போதுதான், தனது கணவனை காப்பாற்றியது தனது காதலன் என பூமிகாவுக்கு தெரியவருகிறது.

தானே நேரடியாக பிரபுதேவாவின் ஊருக்கு சென்று அவருடன் பழைய நட்பை புதுப்பிக்கவும், பிரபுதேவாவின் ஏழ்மை வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கவும் முயற்சி எடுக்கிறார் பூமிகா. ஆரம்பத்தில் பிடிவாதமாக அந்த உதவிகளை மறுத்தாலும், பிரகாஷ்ராஜின் அன்பாலும், குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காகவும் சென்னைக்கு வருகிறார் பிரபுதேவா.

பிரகாஷ்ராஜின் கம்பெனியில் முக்கிய பொறுப்பேற்கும் பிரபுதேவா, எக்காரணம் கொண்டும் பூமிகாவை சந்திப்பதை கவனமாக தவிர்க்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கும் பூமிகாவுக்கு, பிரபுதேவாவின் இந்த பாராமுகம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பிரகாஷ்ராஜுக்கு இவர்களது காதல் தெரியாத நிலையில், இனியும் தேவையில்லாத சிக்கல் ஏற்படவேண்டாம் என பிரபுதேவா ஒரு முடிவெடுக்கிறார். அந்த முடிவை தாங்கமுடியாத பூமிகா தானும் இன்னொரு முடிவை எடுக்கிறார். இறுதியில் நடந்தது என்ன..? பிரபுதேவா-பூமிகா காதல் கைகூடாமல் போன காரணம் என்ன என்பதற்கு விடைசொல்கிறது மீதிப்படம்.

காதலியின் நினைவுகளில் இருந்து மீளமுடியாமல் தவிப்பதும், காதலியை பார்த்தால் சலனப்பட்டு விடுவோம் என அவரை சந்திப்பதை தவிர்ப்பதும், குடும்ப சூழலை மனதில் கொள்ளாமல் சுயமரியாதையுடன் கஷ்டங்களை சந்திப்பதும் என ஒரு சராசரியையும் தாண்டிய மனிதனின் உணர்வுகளை அழகாக பிரதிபலித்துள்ளார் பிரபுதேவா.

ஜென்டில்மேன் என சொல்வார்களே அப்படி ஒரு கதாபாத்திரம் தனக்கு கிடைத்தால் சும்மா விடுவாரா பிரகாஷ்ராஜ். சும்மா பிரித்து மேய்ந்திருக்கிறார். அதிலும் எது கொடுத்தாலும் வாங்க மறுக்கும் பிரபுதேவாவிடம் உனக்கு என்னதாண்டா பிரச்சனை என அவர் நொந்துபோய் கேட்பது பிரகாஷ்ராஜ் ட்ரேட் மார்க்.

இந்தப்படத்தை பார்க்கும்போதுதான் பூமிகாவை தமிழ் சினிமா எவ்வளவு மிஸ் பண்ணுகிறது என்பதை உணரமுடிகிறது. காதலனை காணும் வரை இயல்பு வாழ்க்கை வாழ்வதும், அவனை கண்டபின் குடும்பத்தலைவியாகிவிட்ட ஒரு பெண்ணின் மனது என்ன பாடுபடும் என்பதையும் இதைவிட யாராலும் அவ்வளவு அழகாக வெளிப்படுத்திவிட முடியாது அழகு பூமிகாவுக்காகவே இந்தப்படத்தை மறுமுறையும் பார்க்கலாம்.

சிலநிமிடங்களே வந்தாலும் தந்தை பெரியார் வேடத்தில் சத்யராஜ் கனகச்சிதம் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் என சொல்வதுபோல காதலால் பாதிக்கப்பட்ட பிரபுதேவாவின் அப்பாவி மனைவியாக, ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையை கூட வாழ முடியாமல் தவிக்கும் பெண்ணாக இன்பநிலாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். நிறைவாகவே செய்திருக்கிறார்.

பரத்வாஜின் இசை பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும் தங்கர் பச்சானின் ஒளிப்பதிவில் விரியும் காட்சிகள் ஓரளவு அதை ஈடுகட்டுகிறது. படத்தில் அதிக கதாபாத்திரங்கள் இல்லை என்பது ஒருவகையில் பலவீனம் தான். இந்தப்படம் அவரின் முந்தைய ‘அழகி’ படத்தின் ரிவேர்ஸ் வெர்ஷன் தான் என்பதும் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து தங்கர் பச்சான் மீளவில்லையோ என்கிற எண்ணமும் தான் படம் பார்க்கும்போது நமக்கு ஏற்படுகிறது.

பருவம் தப்பி விதைக்கப்பட்ட பயிர் என சொல்வதுபோல, அழகான நேர்த்தியான படமாக உருவாகியுள்ள இந்தப்படம் இப்போது மாறியுள்ள ட்ரெண்டில் வெளியாகி இருப்பதை என்னவென்று சொல்வது..?

ஆனாலும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுவதை மறுக்க முடியாது.

Boomikakalavadiya PoluthugalPrabhu Devaதங்கர் பச்சான்பிரகாஷ்ராஜ் பூமிகாபிரபுதேவா