நடிகர்கள் : வருண், ராஹே, கிருஷ்ணா, கிட்டி, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா
இசை : கார்த்திக்
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர்
இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் – டாக்டர்.ஐசரி கே.கணேஷ்
கெளதம் மேனன் இயக்கத்தில், வருண் நடிப்பில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
லண்டனைச் சேர்ந்த நாயகன் வருண் சர்வதேச அளவிலான கூலிப்படையைச் சேர்ந்த நபர். ஆனால், இந்த அமைப்பு பணத்திற்காக கை காட்டுபவர்களை எல்லாம் கொலை செய்யாமல், போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களையும், சமூதாயத்திற்கு எதிரானவர்களையும் கொலை செய்கிறார்கள். அப்படி ஒரு சமூக விரோதியை கொலை செய்வதற்காக லண்டனில் இருந்து சென்னை வரும் நாயகன், அந்த இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞரான நாயகி ராஹேவை சந்திக்கிறார். நட்பாக பழகும் இருவரும் காதல் வசப்படுகிறார்கள். ராஹே அமெரிக்கா திரும்பும் போது, வருண் தான் யார்? என்ற உண்மையை அவரிடம் சொல்வதோடு, இனி அந்த வேலையை நான் செய்ய மாட்டேன், என்றும் கூறுகிறார். ஆனால், அதை ஏற்க மறுக்கும் ராஹே, வருணை பிரிந்து சென்றுவிடுகிறார்.
4 வருடங்களுக்குப் பிறகு நாயகி ராஹேவுக்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தில் இருந்து ராஹேவை காப்பாற்றுவதற்காக மீண்டும் அவருடன் வருண் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எதிரிகளிடம் இருந்து ராஹேவை காப்பாற்றும் இந்த பயணம், பிரிந்த காதலர்களை மீண்டும் ஒன்று சேர்த்ததா?, ராஹேவுக்கு வரும் ஆபத்தின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் கெளதம் மேனன் படங்களில் ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அவை அனைத்தும் இந்த படத்தில் இருப்பதோடு, இதுவரை அவர் செய்யாத ஒரு புதிய மேஜிக்கும் இருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் வருண், கண்களில் நெருப்பு, உடலில் துடிப்பு, முகத்தில் தேடல் என படம் முழுவதும் தீயாக பயணித்து ரசிகர்கள் மனதில் ஜோஷ்வா என்ற வேடமாக அழுத்தமாக பதிந்துவிடுகிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் எந்தவித டூப் இல்லாமல் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் உடல் மொழியில் மட்டும் நடிக்காமல் உள்ளத்தின் மூலமாகவும் நடிப்பதை தனது கண்களின் மூலம் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தனது தந்தையிடம் இருந்து தப்பிக்க அவர் போராடும் காட்சியே அதற்கு சாட்சி.
நெட்கட்டிவான வேடத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணாவின் வேடம் சர்பிரைஸாக இருந்தாலும், படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்க பெரிதும் பயன்பட்டிருக்கிறது. வருண் பணியாற்றும் கூலிப்படை அமைப்பின் முக்கியமானவராக நடித்திருக்கும் டிடி, ”கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கு ஏற்றபடி கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டி, இறுதிக்காட்சியில் வந்து மிரட்டுகிறார். மன்சூர் அலிகான், விசித்ரா ஆகியோர் ஒரு காட்சியில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கர்திர், இசையமைப்பாளர் கார்த்திக் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோர் இயக்குநர் கெளதம் மேனனுக்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்கள். இவர்களது பணி படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தியிருக்கிறது.
ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென்னுக்கு இயக்குநர் கெளதம் மேனனை விட கூடுதல் பணி இருந்திருக்கும், ஆனால் அதை அனைத்தையும் நேர்த்தியாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். படம் முழுவதுமே சண்டைக்காட்சிகள் வந்தாலும், அவற்றை ரசிக்கும்படி வடிவமைத்து, “வாவ்…” சொல்ல வைத்திருக்கிறார்.
ஆக்ஷன் படம் தான் என்றாலும், அதை தனது பாணியில் மிக ஸ்டைலிஷாக சொல்லியிருப்பதோடு, வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இரண்டரை மணி நேரம் படத்தை பரபரப்புடன் பயணிக்க வைப்பதோடு, ரசிகர்களையும் காட்சிகளுடன் பயணித்து எண்டர்டெய்ன் செய்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5