ரியல் ரவுடியின் கதையை லைவ்வாக தெரிந்துகொண்டு சினிமா எடுக்க, அவன் ஏரியாவுக்குள்ளேயே நுழைந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் கிட்டத்தட்ட 3 மணி நேர ‘ஜிகர்தண்டா’வாக நமக்கு படம் காட்டியிருக்கிறார்கள்…
குறும்பட இயக்குனரான சித்தார்த்துக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. உயிருடன் உலாவரும் ரவுடி ஒருவனைப்பற்றி நேரில் கண்டு தெரிந்துகொண்டு அதை படமாக்க மதுரை செல்கிறார். ரவுடியான பாபி சிம்ஹாவை தனது மதுரை நண்பன் கருணாகரணின் உதவியுடன் நெருங்கி அவரைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார்..
சில முயற்சிகள் தோல்வியை தழுவ, கடைசியில் சிம்ஹாவின் அடியாள் ஒருவனை சிநேகமாக்கி அவனுக்கு தெரியாமலேயே அவன் மூலம் ஸ்பை மைக் கொடுத்து சிம்ஹாவின் பேச்சுக்களை லைவ்வாக ஒட்டுக்கேட்க முனைகிறார்.. ஆனால் அந்த அடியாள் சிம்ஹாவுக்கு எதிராக திரும்பியதால் கொல்லப்பட, எதிர்பாராதவிதமாக மைக் விவகாரம் சிம்ஹாவுக்கு தெரிய வருகிறது..
அடுத்த ஒரு மணி நேரத்தில் சித்தார்த், கருணா இருவரும் சிம்ஹாவின் பிடியில்.. ஏற்கனவே 48 கொலைகள் செய்த சிம்ஹாவின் கணக்கு 50ஆக உயருமோ என பதைபதைக்கும் வேளையில் இன்டர்வெல் விடுகிறார்கள்.. அடுத்து என்ன நடக்கும் என்பதை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்த்தால் தான் அட இப்படியும் நடக்குமா என உங்களால் தொடர்ந்து ஆச்சர்யப்பட்டுக்கொண்டே இருக்க முடியும்..
சித்தார்த்தின் ஆர்வக்கோளாறான, ஆனால் அசட்டுத்துணிச்சலான கதாபாத்திரத்தை நாமும் திக் திக் இதயத்துடன் தான் பின் தொடர வேண்டியிருக்கிறது. அவரது பயத்தை நமக்கு லைவ்வாக தொற்றவைத்திருக்கிறார். ரவுடியிடம் சிக்கியபின் அவர் ஒரு புது உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பிப்பது நமக்கும் புதுசுதான்..
படத்தின் மிக முக்கிய பலம் ரவுடி சேதுவாக வரும் பாபி சிம்ஹா தான்.. முன்பு ‘வட்டிராஜா’வாக மிரட்டியவர்தான் இந்தப்படத்தில் நகைச்சுவையும் குரூரமும் கலந்த ரவுடியாக நமக்கு பயம் காட்டியிருக்கிறார். ஆனால் இடைவேளைக்குப்பின் இவரது கேரக்டர் யு டர்ன் அடிப்பது திருப்பம் என்பதுடன் அதிலும் ஒரு புதியமுகம் காட்டி அசத்துகிறார் மனிதர்.
இட்லிக்கடை நடத்தும் அம்பிகாவின் மகளாக லட்சுமி மேனன்.. ஜவுளிக்கடையில் சேலை திருடும்போது ‘இங்க பாருடா’ என புருவம் உயர்த்த வைக்கிறார். ஆனால் இவருக்கான வேலை குறைவுதான். தன் காதலை மறுத்துவிட்ட கடுப்பில் சாதாரணமாக பேச்சுவாக்கில் சொன்ன வார்த்தை சித்தார்த்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக திரும்புவது யாரும் எதிர்பாராதது.
நடிகராகவே வரும் விஜய் சேதுபதியின் திடீர் எண்ட்ரி நமக்கு எதிர்பாராத போனஸ்… அதிலும் ரவுடி சேதுவின் முன் வரலாறை காட்சிப்படுத்துவதற்கும் அவரையே பயன்படுத்தி இருப்பதும் சூப்பர்.. பசியில் இருந்தபோது ‘பீட்சா’ தந்த இயக்குனருக்கு நட்புக்கரம் நீட்டியிருக்கிறார்.
கருணாநிதி இடைவேளை வரை சித்தார்த்துடன் சுத்தியபடி, பய கமெண்ட்டுகள் மட்டுமே அடித்தாலும் இடைவேளைக்குப்பின் தான் அவரது ஆட்டமே.. மாஸ்டர் முத்துவாக வரும் குரு சோமசுந்தரம் கவனிக்க வைக்கிறார். சிம்ஹா குரூப்பை அவர் பரேடு எடுக்கும் காட்சிகள் அனைத்துக்குமே தியேட்டரில் சிரிப்பலையுடன் கைதட்டல் பறக்கிறது.
பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டு சித்தார்த்தை அனுப்பிவைக்கும் ஆடுகளம் நரேன் கடைசியில் தானே பலியாடாக மாட்டுவதும் நல்ல பினிஷிங் டச். குருவம்மா கதை சொல்லை அனைவரையும் தெறித்து ஓடவைக்கும் சங்கிலி முருகன் சுவராஸ்யம் கூட்டுகிறார்.
ரவுடி குரூப்பில் இருக்கும் ராமச்சந்திரன் உட்பட அனைவருமே நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார்ர்கள். பாடல்களை விட பின்னணி இசையில் முழு கவனத்தையும் செலுத்தி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கேவ்மிக் யு அரியின் ஒளிப்பதிவு மதுரையை இதுவரை பார்க்காத கோணங்களில் காட்டியிருக்கிறது.
சினிமாவை பின்னணி காலமாக வைத்து சினிமா எடுத்தால் ஜெயிக்க முடியாது என்கிற செண்டிமெண்ட் நம் தமிழ்சினிமாவில் (மட்டும்) உண்டு. ஆனால் ஜிகர்தண்டா மூலம் கார்த்திக் சுப்புராஜ் அதை உடைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்..
ஒரு இயக்குனர் ரவுடி பற்றி கதை எழுத வேண்டும் என்றால் அவனது ஏரியாவில், அவன் வாழ்க்கையில் நுழையத்தான் வேண்டுமா, ஒரு பயங்கர ரவுடி சினிமாவுக்காக தன்னை மாற்றிக்கொள்வானா, வீடியோவில் படம்பிடிக்கும்படி தன்னைப்பற்றி அவ்வளவு ஓப்பனாக வாக்குமூலம் கொடுப்பானா என பல கேள்விகள் நிச்சயம் அனைவருக்கும் எழுத்தான் செய்யும்.
இருந்தாலும் அதற்கு தோராயமாக, நியாயமான விளக்கம் கொடுத்தே படமாக்கி இருப்பதால் அந்த கேள்விகள் அனாவசியமாகத்தான் படுகின்றன. படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் ஒரு ரவுடியின் கதையை சீரியஸும் சிரிப்புமாக சொல்லியிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் முயற்சியை பாராட்டுவோமே..