ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்த, போரில் வெல்ல இப்போதும் பல புதுவிதமான ஆயுதங்களை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறது.. சில சமூக விரோத சக்திகள் கூட இதுபோன்ற நாசகார வேலைகளை செய்துகொடுக்கின்றன. அப்படி மலேசியாவில் இருந்துகொண்டு ஆஸ்துமா நோயாளிகள் உபயோகப்படுத்தும் இன்ஹேலரை ஆயுதமாக தயாரிக்கிறான் லவ் என்கிற விஞ்ஞானி (பெண் தன்மையுடைய விக்ரம்).. ஆனால் அதில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதோ மோசமான வாயு. அதை ஒரு சாதாரண மனிதன் முகர்ந்தால் கூட, அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் யானை பலம் கொண்டவனாக மாறிவிடுவான்
இதை உபயோகப்படுத்தி மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி பரீட்சித்து பார்க்கிறான் லவ்.. இந்த தாக்குதலால் இந்திய உளவுத்துறைக்கு பிரஷர் எகிற, உளவுத்துறை உயர் அதிகாரியான நாசர், ரா ஏஜெண்டான அகிலனை (விக்ரம்) அழைத்து இந்த பிரச்சனையை கையாளும் பொறுப்பை கொடுக்கிறார்.
காரணம் ஏற்கனவே காஷ்மீரில் வைத்து அந்த ‘லவ்’வையும் அவன் இருப்பிடத்தையும் அழித்தவர் தான் இந்த அகிலன்.. அதனால் தனது மனைவி நயன்தாராவையே பறிகொடுத்தவர்.. தன் மனைவியை கொன்றவன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை அறிந்ததும் அதற்கு பழிதீர்க்கும் வேகத்துடன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மலேசிய விரைகிறார் விக்ரம்..
கொஞ்சம் கொஞ்சமாக துப்பு துலக்கி, ‘லவ்’வின் இருப்பிடத்தை நெருங்கும் அகிலன் அங்கே தனது மனைவி நயன்தாரா உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.. நயன்தாராவுக்கு என்ன நடந்தது..? அகிலன் லவ்விடமிருந்து தனது மனைவியை மீட்டாரா..? லவ்வின் நாசகார வேலையை முறியடித்தாரா என்பது மீதிப்படம்..
விக்ரமுக்கு இரண்டு வேடங்கள்.. அதில் உளவு ஏஜென்டாக வரும் விக்ரமைத்தான் நம்மால் ரசிக்க முடிகிறது.. வில்லன் ‘லவ்’ கதாபாத்திரத்தில் இவர் நடிக்காமல் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டர் நம்மை நெளிய வைக்கிறது.. ஆமாம் எதற்காக அந்த கேரக்டரை பெண் தன்மையுடன் வடிவமைத்துள்ளார்கள்…? எந்த விளக்கமும் இல்லை.
விக்ரமின் காதலியாக, வில்லனின் கையாளாக என இருவேறு முகம் காட்டும் நயன்தாரா கிளாமருடன் கூடிய ரொமான்ஸ் காட்ட முயற்சித்திருக்கிறார்.. ஆனால் நயன்தாரா தான் என்றாலும் வர நடிக்கும் அனைத்து காட்சிகளையும் ரசித்து விட முடியுமா என்ன..? வ்க்ராமின் உதவியாளராக இன்னொரு ரா ஏஜென்டாக வந்து பரிதாபம் அள்ளிக்கொள்கிறார் நித்யா மேனன்.
மலேசியாவின் சிரிப்பு போலீசாக தம்பி ராமையா சில நேரங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஒரே காட்சியில் வரும் கருணாகரன் நல்லவரா.? கெட்டவரா ரேஞ்சுக்கு காமெடி இல்லாமல் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார்.
கதை 99 சதவீதம் மலேசியாவில் தான் நடக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் சுமார் என்பதும் அதுவே படத்திற்கு வேகத்தடை என்பதும் சோகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு தேவையான அளவுக்கு மலேசியாவை பயன்படுத்தி இருக்கிறது.
இன்ஹேலர் என்கிற புது விஷயம் ஒன்றை உள்ளே புகுத்தியிருக்கும் இயக்குனர், நிறைய இடங்களில் தனக்கு வசதியாக அந்த லாஜிக்கை தானே கன்னா பின்னாவென மீறியிருக்கிறார். குறிப்பாக அந்த இன்ஹேலரை பயன்படுத்துவதிலும், ‘லவ்’ விக்ரம் போலீசில் மாட்டி, பினர் தப்பிக்கும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. இடைவேளை வரைக்கும் தொய்வில்லாமல் கதையை நகர்த்தி இருக்கும் ஆனந்த் ஷங்கர், இடைவேளைக்குப்பின் நிறையவே தடுமாறி இருக்கிறார்..
மொத்தத்தில் இருமுகனில்
ஒருமுகன் இடைவேளைவரை உங்களை உற்சாகப்படுத்துவான்,
இன்னொரு முகன் இடைவேளைக்குப்பின் உங்களை சோதிப்பான்.