நடிகர்கள் : கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், விவேக், நெடுமுடி வேணு
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : ரவிவர்மன்
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் – சுபாஸ்கரன், உதயநிதி ஸ்டாலின்
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் யூடியுப் சேனல் மூலம் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, இந்தியன் தாத்தாவை திரும்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதற்காக அவர் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளும் பிரச்சாரம், தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா கவனத்திற்கு போகிறது. அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.
முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார். அதே சமயம், அவர் இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தே அவரை வெறுக்கிறார். மறுபக்கம் அவரை தேடிக்கொண்டிருக்கும் விசாரணை அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள். அதிகாரிகளிடம் இருந்து இந்தியன் தாத்தா தப்பித்தாரா?, சித்தார்த் அவரை வெறுப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாட்டில் நடக்கும் பெரிய பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சிறிய அளவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே மூலக்காரணம் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், இலவசங்கள் வழங்கும் தமிழக அரசியல் பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு, குஜராத் தொழிலதிபர்களை பற்றியும், அவர்களின் ஊழல் பின்னணி பற்றியும் விரிவாக பேசியிருப்பதும், அதை தனிமனித ஊடகமான யூடியுப் உடன் இணைத்து சொல்லியிருப்பது கவனம் ஈர்க்கிறது.
முதுமையான உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறும் கமல்ஹாசன், ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுவதோடு, தனது நடிப்பால் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார்.
சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மறைந்த நெடுமுடி வேணு, விவேக் ஆகியோரது அளவான நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா குறைவான காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அவரது வேடம் பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் “தாத்தா வராரே…” பாடல் திரையரங்கையே அதிர வைக்கிறது. மற்ற பாடல்களும் ஓகே ரகம் தான். பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையே முன்னணி பெறுகின்றன.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் பிரமாண்ட கற்பனைக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மூன்று மணி நேரம் படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. கலை இயக்குநர் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் ஆகியோரது பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
முதல் பாகத்தை ஓப்பிட்டு பார்த்தால் இயக்குநர் ஷங்கர் இதில் சற்று தடுமாறியிருப்பது தெரிந்தாலும், படத்தின் சண்டைக்காட்சிகள், இந்தியாவின் பெரும் தலைகளை இந்தியன் தாத்தா நெருங்கும் காட்சிகள், காலண்டர் மற்றும் தாத்தா வராரே ஆகிய பாடல்கள் உள்ளிட்டவை மூலம் பிரமாண்டம் என்ற தனது மாயாஜாலம் மூலம் மக்களை முழுமையாக திருப்திப்படுத்தி விடுகிறார்.
ரேட்டிங் 3.7/5