’ஆட்டி’ விமர்சனம்

நடிகர்கள் : இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார், செல்வகுமார், செளந்தர், பிரவீன் பழனிசாமி, கரண் சக்கரவர்த்தி
இசை : தீசன்
ஒளிப்பதிவு : சிபி சக்கரவர்த்தி
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
தயாரிப்பு : இசக்கி கார்வண்ணன்

தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலை கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வரும் நாயகன் இசக்கி கார்வண்ணனுக்கு, அந்த காவல் நிலையத்தில் எந்தவித குற்ற வழக்குகளும் பதிவாகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கிடையே, அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் பிரவீன் பழனிசாமி, மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் இசக்கி கார் வண்ணன், அந்த ஊர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை அறிந்துக் கொள்வதொடு, முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, பலரை கொடூரமாக கொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார் ?, எதற்காக இப்படி கொலை செய்கிறார்கள் ?, ஆசிரியர் கொலைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்வதே ‘ஆட்டி’.

கதையின் நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை, தெளிவான சிந்தனை ஆகியவற்றின் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நாயகன் என்றாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா, தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். அவரது அறிமுகம் மற்றும் அவருக்கான பில்டப் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவற்றுக்கான குறைவான முக்கியத்துவம் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிசாமிக்கு சிறிய வேலை என்றாலும் அதை நிறைவாக செய்து திரைக்கதையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார். காவலராக நடித்திருக்கும் செல்வகுமார், காதல் சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு இயற்கையின் அழகையும், அங்கு நிறைந்திருக்கும் ஆபத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பதோடு, 1970 காலக்கட்டத்தில் பயணிக்கும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட வைத்திருக்கிறார்.

தீசனின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, மலைப்பகுதியில் நிலவும் ஓசைகளை துள்ளியமாக கொடுத்து கவனம் ஈர்க்கிறது.

படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

முஜீபிர் ரஹ்மானின் கலை இயக்கம், கதாபாத்திரங்களின் ஆடை வடிவமைப்பு, 70 காலக்கட்டத்தின் கட்டிடங்கள் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

திருமுருகனின் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணித்தாலும், அக்காலம் முதலே பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை வரலாற்று ரீதியாக விளக்கவும் செய்திருக்கிறது.

மர்மங்கள் நிறைந்த சூழலோடும், எதிர்பார்க்காத திருப்பங்களோடு முதல் பாதி பயணித்தாலும், இரண்டாம் பாதியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், அதற்கான தீர்வு என்று படம் அதிரடி தளத்திற்கு மாறுகிறது.

ஒரு மர்ம கொலையில் தொடங்கும் கதையை, பல சுவாரஸ்யமான அம்சங்களோடு சொல்லியிருக்கும் இயக்குநர் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடும் பெண்கள் படை, வரலாற்று ஆய்வுகள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு உள்ளிட்ட பல சுவாரஸ்யமான அம்சங்கள் மூலம் இந்த ‘ஆட்டி’-யை பாராட்ட வைத்து விடுகிறார்.

ரேட்டிங் 3.5/5

aatti movie reviewaatti reviewtamil movie aatti reviewஆட்டி திரைப்பட விமர்சனம்ஆட்டி விமர்சனம்தமிழ்ப் படம் ஆட்டி விமர்சனம்