சிறு வயதில் குடும்பத்தை ஒதுக்கி, வீட்டை விட்டு ஓடும் சிறுவன், அந்த இளம் வயதிலேயே வாழ்க்கையை எதிர்கொள்ளும் அளவுக்கு பக்குவப்பட்டால் அவன் தான் ‘ஞானகிறுக்கன்’ என சொல்லவந்திருக்கிறார்கள்.
அமைதியான குடும்பத்தலைவானான டேனியல் பாலாஜி, அவருக்கு மகன் பிறக்கும் சமயம் சித்தம் தடுமாறி போகிறார். அம்மாவான ‘பசங்க’ செந்தி கண்டிப்புடன் பிள்ளைகளை வளர்க்க, அது பிடிக்காத மகன் ஜெகா ஊரைவிட்டு ஓடுகிறான். ஓடியவன் ஒருகட்டத்தில் மீண்டும் தேடியும் வருகிறான்.
வந்தவனுக்கு அன்பை அள்ளித்தரும் அம்மாதான், அப்போது முகிழ்க்கும் அவனது இளம்பருவ காதலையும் கிள்ளி எறிகிறாள். இதனால் மனம் வெறுத்தவன் வேலை தேடி சென்னை சென்று பரதேசியாய் சுற்றுகிறான். வழியில் கைகோர்க்கும் வஞ்சிக்கப்பட்ட இளம்பெண் ஒருவளை காப்பாற்ற போராடுகிறான்.. காலம் அவனுக்கு என்ன பதில் தந்தது என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கதாநாயகன் போலவே அறிமுகமாகும் டேனியல் பாலாஜியும் அந்த கிராமத்து கதையும் குழந்தை பிறந்தவுடன் அவருக்கு பித்து பிடிப்பதும் சிறு வயதில் ஜெகா வீட்டைவிட்டு ஓடுவதும் என படம் ஒரு புதிய களத்தில் பயணிக்கிறதே என உற்சாகத்தில் துள்ளி குதிப்பவர்களை இடைவேளைக்குப்பின் இலக்கில்லாமல் திசைமாறிப்போய் திரியும் கதையால் சம்மட்டி அடி கொடுக்கிறார்கள்.
முன்பாதி கிராமத்து கதையில் டேனியல் பாலாஜியும், பசங்க’ செந்தியும் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் காட்டுகிறார்கள்.. ஆனால் கதை நகரத்துக்கு நகர்ந்து தன் சுபாவம் மாற்றுவதால் ஜெகா, அர்ச்சனா கவி, தம்பி ராமையா மூவரும் ஏதோ ஒரு சாதாரண கதையில் நடித்திருக்கிற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. முன்பாதியை அழகாக முன்னெடுத்துச்சென்ற இயக்குனர் இளையதேவன், பின்பாதியில் நன்றாகவே தடுமாறியிருக்கிறார். கிராமத்து படமாகவே விட்டிருந்தால் படம் நம் உணர்வுகளை தட்டியெழுப்பி இருக்கும்.