நடிகர்கள் : விஷ்வம் சென், சாந்தினி செளத்ரி, அபிநயா, ஹரிஹா பெட்டா
இசை : ஸ்வீக்கர் அகஸ்தி, நரேஷ் குமரன்
ஒளிப்பதிவு : விஷ்வநாத் ரெட்டி செலுமல்லா
இயக்கம் : வித்யாதர் ககிடா
தயாரிப்பு : கர்திக் சபரீஷ்
கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காளான் மூலம் ஏதேனும் மருந்து தயாரிக்க முடியுமா? என்ற ரீதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அப்படி ஒரு நீல நிற காளானை கருவாகக் கொண்டு, வித்தியாசமான திருப்பத்துடன் கூடிய படமாக வெளியாகியிருக்கும் தெலுங்குத் திரைப்படமான ‘காமி’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
காசியில் பரதேசி போல் சுற்றித்திரியும் நாயகன் விஷ்வக் சென், வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். அதனால், மனிதர்கள் அவரை தொட்டாலே அவர் மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டு, சுயநினைவின்றி சில மணி நேரங்கள் இருக்கிறார். தனக்குள் இருக்கும் இத்தகைய பாதிப்பை குணப்படுத்த வைத்தியர் ஒருவரை நாட, அவரோ இதை தன்னால் குணப்படுத்த முடியாது, இமயமலைப் பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை வளரும் அரியவகை நீல நிற காளானை கொண்டு குணப்படுத்தலாம் என்று தெரிவிப்பதோடு, அந்த காளான் தோன்றிய 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.
அதன்படி, அந்த அதிசய காளானை தேடி செல்லும் நாயகன் நினைவில், பிரச்சைனையில் இருக்கும் ஒரு இளைஞனும், சிறுமியும் தோன்றுகிறார்கள். அவர்கள் யார்? எதற்காக தனது நினைவுகளில் வருகிறார்கள் என்று யோசிக்கும் நாயகன், அதே சமயம் பல்வேறு ஆபத்துகளை கடந்து காளானை நோக்கி பயணிக்கிறார். இறுதியில் அவர் காளானை கைப்பற்றினாரா? ஆபத்தில் இருக்கும் அந்த இளைஞர் மற்றும் சிறுமிக்கும் நாயகனுக்கு என்ன தொடர்பு என்பதை வித்தியாசமான முயற்சியாக சொல்லியிருப்பது தான் ‘காமா’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஷ்வக் சென், காசியில் அகோரி வேடத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். தன்னை யாரும் தொட கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பவர், தான் யார்? என்று தெரியாமல் குழப்பும் காட்சிகளிலும், தனது நினைவுகளில் அடிக்கடி வந்து போகிறவர்கள் யார்? என்று தெரியாமல் தடுமாறும் காட்சிகளிலும் அசத்தலாக நடித்திருக்கிறார்.
ஆய்வுக்கூட சிறையில் சிக்கி தவிக்கும் இளைஞர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அவர் அங்கிருந்து தப்பிக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.
அபிநயா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் சிறுமி ஹரிகா பெட்டா இருவரும் தங்களது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். சிறுமி ஹரிகா பெட்டா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.
மருத்துவராக நடித்திருக்கும் சாந்தினி செளத்ரி, நாயகனுடன் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தில், பயம் மற்றும் எப்படியாவது காளானை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஷ்வநாத் ரெட்டி செலுமுல்லாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது. மூன்று கதைகளை வெவ்வேறு லைட்டிங் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர், மூன்று கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் உணர்வுகளை ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
ஸ்வீக்கர் அகஸ்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. நரேஷ் குமரனின் பின்னணி இசை திரக்கதையின் விறுவிறுப்பை அதிகரிப்பதோடு, காட்சிகளின் வேகத்தை அதிகப்படுத்தும் வகையிலும் பயணித்திருக்கிறது.
வித்யாதர் ககிடா மற்றும் பிரத்யுஷ் வத்யம் ஆகியோரின் திரைக்கதை வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது. நீல நிற காளானை வைத்துக்கொண்டு, ஆன்மீகம், அறிவியல், அறியாமை போன்ற விசயங்கள் பற்றி பேசியிருப்பவர்கள், அதை வித்தியாசமான திருப்பத்தோடு சாகசம் நிறைந்த படமாக கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குநர் வித்யா காகிடா, உலகத்தரத்திலான ஒரு கான்சப்ட்டை, வைத்துக்கொண்டு, அதை மூன்று விதமான கதைகளாக விவரித்திருப்பதோடு, மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை நகர்த்தி செல்வதோடு, சாகசம் நிறைந்த ஒரு பயணத்தை மிக சுவாரஸ்யமாக சொல்லி ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
ரேட்டிங் 3.5/5