‘டிமான்டி காலனி 2’ விமர்சனம்

நடிகர்கள் : அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார், அருண் பாண்டியன்
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன்
இயக்கம் : அஜய் ஞானமுத்து
தயாரிப்பு : பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை, ஒயிட் நயிட் எண்டர்டெயின்மெண்ட் – பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ’டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகமாக அதே கூட்டணியுடன் புதிதாக பிரியா பவானி சங்கர் இணைந்திருக்கும் ’டிமான்டி காலனி 2’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

பிரியா பவானி சங்கரின் காதல் கணவரும், அவரது நண்பர்களும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். கணவரின் மர்ம மரணத்தை நினைத்து தாங்க முடியாத துயரத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர், 6 வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக கணவரின் ஆத்மாவிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது ஆபத்தில் இருக்கும் வேறு ஒரு ஆத்மா அவரிடம் உதவி கேட்கிறது. அதன் மூலம் ‘டிமான்டி காலனி’ முதல் பாகத்தின் கதையோடு தொடர்பு ஏற்படுவதோடு, அதில் இறந்ததாக காட்டப்படும் அருள்நிதியை உயிர் பிழைக்க வைப்பதற்கான ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

அதன்படி, அருள்நிதியை உயிர் பிழைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடும் பிரியா பவானி சங்கர், அவருக்கு சகோதரர் ஒருவர் இருப்பதை (அவரும் அருள்நிதி தான்) தெரிந்துக் கொண்டு அவருடன் இணைந்து முதல் பாகத்தின் நாயகன் அருள்நிதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை முதல் பாகத்தின் காட்சிகளைப் போல் சொன்னாலும், அதை விட பிரமாண்டமான முறையில் சொல்வது தான் ‘டிமான்டி காலனி 2’.

‘டிமான்டி காலனி’ முதல் பாகத்தின் கதையை நாயகன் அருள்நிதி மூலம் நகர்த்திய இயக்குநர் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை பிரியா பவானி சங்கரை முதன்மைப்படுத்தி நகர்த்தியிருக்கிறார். அவருக்கு துணையாக அருள்நிதி பயணித்திருக்கிறார்.

காதல கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் வெளிக்காட்டுவது, உயிருக்கு போராடும் அருள்நிதியை காப்பாற்ற முயற்சிப்பது, டிமான்டி ஆத்மாக்களின் உலகத்தில் தைரியமாக பயணித்தாலும், பயத்தையும், பதற்றத்தையும் அவ்வபோது முகத்தில் வெளிக்காட்டுவது என்று பிரியா பவானி சங்கர் படம் முழுவதும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஒரு வேடத்தை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக கச்சிதமாக கையாண்டிருக்கிறார். மற்றொரு வேடத்திற்கு இந்த பாகத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும், வில்லத்தனம் சாயல் கொண்ட வேடத்தில் மிரட்டியிருக்கும் அருள்நிதி, இறுதியில் நான் கெட்டவன் கிடையாது, என்பதை நிரூபிக்கும் இடம் சிறப்பு.

அருள்நிதியின் சித்தப்பாவாக படம் முழுவதும் பயணிக்கும் முத்துக்குமாரின் நடிப்பில் குறையில்லை. அருண் பாண்டியனுக்கு பெரிய வேடம் என்றாலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மீனாட்சி கோவிந்த், அர்ச்சனா ரவிச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறிய வேடத்தில், நிறைவாக நடித்திருக்கிறார்கள். சீன துறவிகளாக நடித்திருப்பவர்களின் நடிப்பு அளவு.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் -ன் பின்னணி இசை ஓரளவு தான் கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக, டிமான்டி வரும் காட்சியும், அவர் கையில் வைத்திருக்கும் கோல் மூலம் எழுப்பப்படும் இடி சத்தமும் இதில் எந்த ஒரு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனது இசையின் மிகப்பெரிய பலவீனம்.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட் பெரியது என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்துகிறது. பெரிய சைனீஸ் உணவகம் மற்றும் சிறிய அறையில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மிக நேர்த்தியாக படமாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

முதல் பாகத்தின் கதையோடு, இரண்டாம் பாகத்தின் கதையை இணைத்த விதம், அதை தொடர்ந்து வரும் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திய விதம் என்று படத்தொகுப்பாளர் குமரேஸ்.டி திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

திகில் படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமான பாதையில் பயணிக்காமல் சற்று வித்தியாசமான முயற்சி செய்து தனது முதல் படமான ‘டிமான்டி காலனி’-யில் வெற்றி கண்ட இயக்குநர் அஜய் ஞானமுத்து, இந்த முறையும் அதே வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்காக சீன துறவிகள், அவர்களின் பூஜை ஆகியவற்றை தேர்ந்தெடுத்திருப்பதோடு, முதல் பாகத்தின் பாணியிலேயே இந்த இரண்டாவது பாகத்தையும் கையாண்டு ரசிகர்களை திகிலின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

டிமான்டி ஆத்மாக்கள் உலகத்தின் அரசர், அவருக்காக பலி கொடுக்கப்படுவது, அதை தலைமுறை தலைமுறையாக செய்யும் குடும்பம், 6 வருடங்களுக்கு ஒரு முறை அவர்கள் டிமான்டிக்கு பலி கொடுப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கான விடையை அடுத்த பாகத்தில் பாருங்கள் என்பதோடு, ஒவ்வொரு 6 வருடங்கள் இடைவெளியிலும் ’டிமான்டி காலனி’ அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்பதற்கான லீடோடு இயக்குநர் படத்தை முடித்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Arulnidhicinema newsdemonte colony 2 reviewmovie newsPriya Bhavani Shankartamil movie demonte colony 2 reviewஅருள்நிதிடிமாண்டி காலனி 2 திரைப்பட விமர்சனம்டிமாண்டி காலனி 2 விமர்சனம்பிரியா பவானி சங்கர்