’தெய்வ மச்சான்’ விமர்சனம்

நடிகர்கள் : விமல், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, பாண்டியராஜன், தீபா சங்கர், பால சரவணன், கிச்சா ரவி
பின்னணி இசை : அஜீஸ்
ஒளிப்பதிவு : கேமில் ஜே.அலெக்ஸ்
இயக்கம் : மார்டின் நிர்மல் குமார்
தயாரிப்பு : உதய் குமார் – கீதா உதய் குமார் மற்றும் எம்.பி.வீரமணி

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், விமல் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

நாயகன் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, அவருக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை முன் கூட்டியே சொல்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அப்படியே நடக்கிறது. இதற்கிடையே விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும், வத்சன் வீரமணிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, ”உன் தங்கை கணவன் மச்சான் திருமணமாகி இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவான்”, என்று சொல்கிறார். இதனால் தங்கையின் திருமணத்தை நிறுத்தி வத்சனின் மரணத்தை தடுக்க நினைக்கும் விமலின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வதே ‘தெய்வ மச்சான்’.

’களவாணி’ போன்ற படங்களில் மிக இயல்பாக நடித்து கவர்ந்த விமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக இருந்தாலும் தன்னை சுற்றியிருக்கும் நடிகர்களுக்கும் சம வாய்ப்பளித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கும் விமல், தனது மச்சானை பாதுகாப்பதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது.

விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நேஹா ஜா, காதல் காட்சிகள் மற்றும் காதல் பாடல்கள் இல்லாத கதாநாயகியாக சில காட்சிகளில் தலை காட்டுகிறார்.

விமலின் தங்கையாக நடித்திருக்கும் அனிதா சம்பத், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், படம் முழுவதும் பாதி தூக்கத்தில் இருப்பவரை போன்றே இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. திருமண தடையால் சோகமாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாலும், திருமணம் நடக்கும் போது கூட அவருடைய முகம் படு சோகமாகவும், பொலிவு இல்லாமலும் இருப்பது, ரசிகர்களையும் சோகமடைய செய்துவிடுகிறது.

படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் வத்சன் வீரமணி, படத்தின் உயிர் நகைச்சுவை தான் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு நடித்திருக்கிறார். விமல் காட்டும் அன்பால் மலைத்து போகும் காட்சிகளில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.

காமெடி ஏரியாவை தன்வசம் வைத்துக்கொண்ட பால சரவணன் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.

பாண்டியராஜன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், கிச்சா ரவி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிரிப்புக்கு உதரவாதம் கொடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே.அலெக்ஸ், நட்சத்திரங்களை அழகாக காட்ட தவறியிருக்கிறார்.

படத்தில் ஒரே ஒரு பாட்டு, அதுவும் மாண்டேஜ் பாடலாக இருக்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் அஜீஸ், கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ், கதை திசை மாறாத விதத்தில் காட்சிகளை தொகுத்திருப்பதோடு, சிறு வசனங்களுக்கு கூட ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கும் அளவுக்கு காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் மற்றும் நடிகர் வத்சன் வீரமணி இருவரும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கதையும், திரைக்கதையும் எளிமையானதாக இருந்தாலும் காமெடி காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய வலிமை சேர்த்துள்ளது.

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், விமலின் கனவு பின்னணியும், அவருடைய மச்சானை மரணத்தில் இருந்து காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

குடும்பமாக சென்று மகிழ்ச்சியாக பார்க்க கூடிய விதத்தில் இருக்கும் இந்த ‘தெய்வ மச்சான்’ நிச்சயம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்வான்.

ரேட்டிங் 3.5/5

anitha sampathBala Saravanandeiva machan reviewkollywood movie reviewtamil film deiva machan reviewtamil movie deiva machan reviewvimal in deiva machan