நடிகர்கள் : பயல் ராஜ்புட், நந்திதா ஸ்வேதா, ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மண்
இசை : பி.அஜனீஷ் லோக்நாத்
ஓளிப்பதிவு : தாசரதி சிவேந்திரா
இயக்கம் : அஜய் பூபதி
தயாரிப்பு : சுவாதி குணப்பட்டி, சுரேஷ் வர்மா, அஜய் பூபதி
மகாலக்ஷ்மிபுரம் எனும் ஊரில் அந்த ஊர் மக்கள் சிலரைப் பற்றி சில எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்படுகிறது. அந்த வாசகங்கள் எழுதப்பட்ட மறுநாள் அவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதுவும் இந்த சம்பவங்கள் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே நடக்கிறது. இந்த மர்ம மரணங்கள் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா சுவேதா விசாரணை நடத்த, இறந்துபோன ஷைலுவின் ஆவி தான் இதற்கு காரணம் என்று அந்த ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் சொல்கிறார். இதை ஊர் நம்பினாலும், நந்திதா சுவேதா சம்பாமல் தனது விசாரணையை தொடர, உண்மையில் இந்த மரணங்களுக்கு பின்னணியில் இருப்பது ஷைலுவின் ஆவி தானா?, யார் அந்த ஷைலு? போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாக விடையளித்திருப்பது தான் ‘செவ்வாய்கிழமை’.
கதையின் நாயகியாக ஷைலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பயல் ராஜ்புத், இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். காமம் சார்ந்த நோயல் உடல் அளவில் மட்டும் இன்றி மனதளவிலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கசப்பான வாழ்க்கையின் வலியை படம் பார்ப்பவர்களிடம் எளிதாக கடத்தும் வகையில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, அழுத்தமான வேடத்தில் பலம் வாய்ந்த பெண் அதிகாரியை பிரபதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு பரிட்சயம் இல்லாத முகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் அஜய் பூபதி, திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். முதல் பாதியில் இடம்பெறும் திகில் காட்சிகள் மிரட்டலாக இருப்பதோடு, அறிமுக காட்சியில் காட்டப்படும் சிறுவன் மற்றும் சிறுமிக்கு என்ன ஆனது? என்ற கேள்வியோடு படம் சுவாரஸ்யமாக நகர, இடைவேளையின் போது சிறுமி பெரியவளாக இருக்கும் வேடத்தை காட்டும் இடைவேளைப் பகுதி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
தொடர் மரணங்களுக்கான பின்னணியை சொல்லும் காட்சிகள் வழக்கமான பாதையில் பயணித்தாலும், அதன் பின்னணியை விவரிக்கும் திரைக்கதை வித்தியாசமாகவும், புதியதாகவும் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
முதல் பாதியில் திகில் காட்சிகள் மூலம் மிரட்டியிருக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் சில இடங்களில் சற்று தடுமாறினாலும், இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் அவருக்கு தோள் கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அவரது பின்னணி இசையும், சில பீஜியம்களும் காட்சிகளை திகிலின் உச்சத்தில் உட்கார வைத்துவிடுகிறது.
ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் அனைத்தும் பயமுறுத்தும் வகையில் இருக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நம்மை திரைக்குள் இழுத்து விடுபவர், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நம் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளும்படி காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். அதிலும் இரவு நேர காட்சிகள் அனைத்தும் திக்…திக்…நிமிடங்களாக இருக்கிறது.
குல்லப்பள்ளி மாதவகுமாரின் படத்தொகுப்பு படத்தின் கதையை மிக தெளிவாக கடத்துகிறது. தஜுதின் சையத் மற்றும் ராகவ் வசனம் எளிமையாக இருந்தாலும் திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
முதல் பாதியில் திகில் காட்சிகளை வைத்து பேய் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கும் இயக்குநர் அஜய் பூபதி, இரண்டாம் பாதியில் க்ரைம் சஸ்பென் திரில்லர் ஜானரில் கதையை நகர்த்தியிருப்பதோடு, மருத்துவர் ரீதியிலான குறைபாட்டை திரைக்கதையில் வைத்து புது வழியில் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ரசிகர்களை முழு திருபதிப்படுத்தும் திகில் படமாக உள்ள இந்த’செவ்வாய்கிழமை’ திகில் படத்தை வித்தியாசமாக சொல்லி பாராட்டையும் பெறுகிறது.
ரேட்டிங் 3.5/5