’சைத்ரா’ விமர்சனம்

நடிகர்கள் : யாஷிகா ஆனந்த், அவிதேஜ், திவ்யா, கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி
இசை : பிரபாகரன் மெய்யப்பன்
ஒளிப்பதிவு : சதீஷ் குமார்
இயக்கம் : எம்.ஜெனித்குமார்
தயாரிப்பு : மாஸ் புரொடக்‌ஷன்ஸ் – கே.மனோகரன்

விபத்தில் சிக்கி இறந்த தனது தோழி மற்றும் அவரது கணவர் மரணத்தை நேரில் பார்க்கும் நாயகி யாஷிகா ஆனந்த், அன்று முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோடு, விபத்தில் இறந்த அந்த இருவரும் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் அவரது கணவர் அவிதேஜ், மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கிடையே, தனது நண்பருக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் அவிதேஜ், தனது மனைவிக்கு போன் செய்யும் போது அந்த போனை அவர் எடுக்காமல், அவரை தேடி வரும் இறந்துபோன அவரது தோழி எடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் யாஷிகா ஆனந்தின் கணவர் தனது மனைவி சொல்வது போல் இறந்தவர்கள் அவரை தேடி வருவது உண்மை தான் என்று நம்புவதோடு, அந்த பேய்களை விரட்ட தனது நண்பரிடம் சொல்லி சாமியார் ஒருவரை அழைத்து வர சொல்கிறார்.

அதன்படி, அந்த வீட்டுக்கு சாமியாரை அழைத்துச் செல்லும் அந்த நண்பர் திடீரென்று தனது காதலி திவ்யாவுக்கு போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதாக சொல்ல, அவரை தேடி செல்லும் திவ்யா, யாஷிகா ஆனந்தை தேடி வரும் இறந்த தம்பதி என்று சொல்லப்படுகிறவர்களை சந்திப்பதோடு, அவர்களிடம் பேசவும் செய்கிறார். இதற்கிடையே வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது அங்கே சாமியார், யாஷிகா ஆனந்த் அவரது கணவர் என்று அங்கு யாருமே இல்லாத நிலையில், அவரது காதலன் மட்டும் தலையில் அடிபட்ட நிலையில் இருப்பதோடு, யாஷிகா ஆனந்த் சொல்வது போலவே, “அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், நான் சாக வேண்டும்” என்று புலம்புகிறவர், திடீரென்று மயக்க நிலைக்கு சென்றுவிடுகிறார்.

அந்த வீட்டில் என்ன நடந்தது? என்ற உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் திவ்யா மூலம், அங்கிருந்தவர்கள் திடீரென்று மாயமானது ஏன்?, இறந்தவர்கள் என்று சொல்லக்கூடிய கணவன் – மனைவி ஏன் அந்த வீட்டுக்கு திரும்ப திரும்ப வருகிறார்கள்?, அவர்கள் அனைவருடைய கண்களுக்கும் சாதாரண மனிதர்களாக தெரிவது எப்படி?, உண்மையிலேயே அவர்கள் தான் இறந்தார்களா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் ‘சைத்ரா’ படத்தின் கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த், தனக்குள் இருக்கும் பேய் பயணத்தை தனது சிறப்பான நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரிடம் ரசிகர்கள் கவர்ச்சியை எதிர்பார்த்தாலும் அதையும் தாண்டி தன்னிடம் நடிப்பு திறமையும் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்தின் கணவராக நடித்திருக்கும் அவிதேஜ், அவருடைய நண்பரின் காதலியாக நடித்திருக்கும் திவ்யா, இறந்துபோன தோழியாக நடித்திருக்கும் பூஜா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் திகில் படங்களுக்கு ஏற்றபடி இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் எலிஷாவின் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது.

ஒரு பெரிய வீடு, அதில் இருக்கும் பெண்ணுக்கு பேய் பயம் என்று தொடங்கும் கதை, அடுத்தடுத்த காட்சிகளில், உண்மையான பேய் யார்? என்ற கேள்வியோடு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ஜெனித்குமார், திகில் காட்சிகள் மூலம் ரசிகர்களை பீதியடைய செய்கிறார்.

இடைவேளை முடிந்து இரண்டாம் பாதி தொடங்கும் போது ஒருவழியாக இவர்கள் தான் பேய் என்ற முடிவுக்கு நாம் வந்தாலும், அங்கேயும் ஒரு திருப்பத்தை வைத்து மீண்டும் படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கும் இயக்குநர் எம்.ஜெனித்குமார், ஒரு வீடு, 10 கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு முழு படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்தி சென்று நம் முழு கவனத்தையும் தன் வசமாக்கி விடுகிறார்.

ஒரு லொக்கேஷனையும், சில கதாபாத்திரங்களையும் வைத்துக்கொண்டு முழு படத்தையும் யூகிக்க முடியாதபடியும், விறுவிறுப்பாக நகர்த்தி சென்றதற்காக இயக்குநர் எம்.ஜெனித்குமாரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

படத்தின் மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும் அவற்றுக்கு பட்ஜெட் மட்டுமே காரணம் என்பதால் அவற்றை மறந்துவிட்டு படத்தை பார்த்தால் நிச்சயம் ரசிகர்களை முழுமையாக எண்டர்டெயின் செய்யும் நல்ல திகில் படம் தான் இந்த ‘சைத்ரா’.

ரேட்டிங் 3/5

chaitra reviewkollywood movie reviewtamil movie chaitra reviewyashika anand