நட்டி, அர்ஜூன், ருஹி சிங் (கதாநாயகி) மூவரும் நண்பர்கள்.. கார் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்த இவர்கள் ஒரு கார் திருட்டு போன விவகாரத்தில் வேலையிழந்து ஜெயிலுக்கும் போய் வருகிறார்கள்.. மீண்டும் இவர்களுக்கு எந்த கம்பெனியிலும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள். ஜெயில் நண்பன் மூலமாக சென்னையில் தங்குமிடம் கிடைக்க, அவர் மூலமாக காரை கடத்திக்கொண்டு வரும் வேலையும் கிடைக்க, சூழ்நிலையால் அதை ஏற்கிறார்கள் நட்டி அன் கோ.
முதல் முயற்சியிலே நகைக்கடை ஓனரின் காரை தூக்க, எதிர்பாராத விதமாக அதில் ஒளித்துவைக்கப்பட்ட பல கோடி கருப்பு பணமும் அவர்கள் கைக்கு வருகிறது.. இத்துடன் நிறுத்திக்கொள்ளலாமா என நினைக்கையில் அடுத்ததாக மதுரையில் உள்ள தாதா பாண்டியனிடம் உள்ள பத்து விலையுயர்ந்த கார்களை தூக்கச்சொல்லி அசைன்மென்ட் வருகிறது..
துணிந்து களத்தில் இறங்கும் நட்டி அன் கோவிற்கு, அங்கே சென்றபிறகுதான் தாங்கள் கம்பெனியில் வேலைபார்த்தபோது கார் திருடு போன வழக்கில் சிக்க காரணமே இந்த பாண்டியன் தான் என தெரியவருகிறது. திருடு போன அந்த காரும் பாண்டியனிடம் தான் இருக்கிறது.. இந்தநிலையில் திட்டமிட்டு பத்து கார்களையும் தூக்கும் நட்டி, அந்த ஒரு காரை மட்டும் காரணமாக விட்டு வைக்கிறார்..
மேலும் அந்த காரையும் தூக்குவதாக தாதா பாண்டியனுக்கு சவால் விடுகிறார்.. காருக்கு பாதுகாப்பாக ஆட்களை காவல் போடுகிறார் தாதா பாண்டியன். அதையும் மீறி அந்த காரை நட்டி தூக்கினாரா..? தனது பழைய கணக்கிற்கு பாண்டியனிடம் பழி தீர்த்தாரா என்பது மீதிக்கதை.
செம விறுவிறுப்பான கதை.. அதற்கேற்றாற்போல் நட்டியின் ஸ்டைலான ஸ்பீடான வசனமும் நடிப்பும் கைகொடுக்க படம் போரடிக்காமல் செல்கிறது.. கார்களை நவீன தொழில்நுட்பத்துடன் கடத்தும் விதம் பிரமிப்பூட்டுகிறது.. குறிப்பாக காதல் காட்சிகள் என எதுவும் இல்லாமல் ஆண் பெண் நட்புடன் இந்தப்படத்தை நகர்த்தி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட்..
தானாகவே வந்து நட்டி அன் கோவிடம் மாட்டிக்கொள்ளும் முநீஷ்காந்த் மற்றும் அர்ஜூன் ஆகியோர் கலகலப்புக்கு உத்திரவாதம் தருகிறார்கள். கதாநாயகி ருஹி சிங் கேரக்டருக்கேற்ற பொருத்தமான தேர்வு.. தாதா பாண்டியனாக வரும் வில்லன் சரத் லோஹித்ஸ்வா வழக்கம்போல சவுண்ட் பார்ட்டி.. இடைவேளைக்குப்பின் வரும் போலீஸ் அதிகாரியாக அதுல் குல்கர்னியும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
பாவா லட்சுமணனுக்கு இதில் செமத்தியான தீனி கிடைத்துள்ளது.. மனிதர் காமெடியில் கிளப்புகிறார் போங்கள்.. கார் டெக்னாலஜியை விரல் நுனியில் வைத்திருக்கும் சாம்ஸ், காரை தூக்கவிடாமல் செக்யூரிட்டி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் செம கலாட்டா. அதிலும் வில்லனின் சவாலை ஏற்று சாம்பிளுக்கு அவரே வில்லனின் காரை திருடி காட்டுவது செம கெத்து.
ஒரு சேசிங் படத்துக்கான மூடை மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் உருவாக்கி தருகின்றன. கார் கடத்தலை மையமாக வைத்து, அதில் ஒரு பழிவாங்கல் கதையையும் இடையில் செருகி ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் அக்மார்க் கமர்ஷியல் படமாக இதை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தாஜ்.