டைட்டிலை பார்த்ததுமே புரிந்திருக்குமே..? ஆம்.. பேய்ப்படங்களில் ஒரு புது வரவு தான் இந்த ‘பயமா இருக்கு’..
தனது கர்ப்பிணி மனைவி ரேஷ்மியின் தாயை தேடி இலங்கை செல்கிறார் நாயகன் சந்தோஷ், அவர் இறந்த சேதி அறிந்து ஊர் திரும்பும் வழியில் இலங்கை ராணுவத்திடம் இருந்து லொள்ளுசபா ஜீவா, பரணி, மொட்ட ராஜேந்திரன், ஜெகன் ஆகிய நால்வரையும் காப்பாற்றி, நாகர்கோவில் பகுதியில் காட்டுப்பகுதியில் ஏரியை ஒடி அமைந்துள்ள தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
வந்த நண்பர்கள் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல முடிவு செய்கிறார்கள்.. ஆனால போகப்போக, சந்தோஷின் மனைவி ரேஷ்மி மேனன் ஏற்கனவே இறந்துபோனதும், இப்போது அவர் உருவத்தில் இருப்பது பேய் என்பதும் தெரியவருகிறது. இதை சந்தோஷுக்கு உணர்த்த முயற்சித்து தோல்வியை தழுவுகிறார்கள்.
இறுதியாக இது உண்மையா என அறிய, மந்திரவாதி கோவை சரளாவின் உதவியை நாட, அவர் பேய் யாரென்பதை குறிப்பாக சொல்லாமல் குழப்பி விடுகிறார். ஒருகட்டத்தில் சந்தோஷ், பரணி இவர்கள் மீதெல்லாம் சந்தேகம் திரும்புகிறது.. அப்படியானால் உண்மையான பேய் யார்..? ஒருவேளை ரேஷ்மி மேனன் தான் பேய் என்றால் பிறந்த குழந்தையுடன் கணவனை ஏமாற்ற வேண்டிய காரணம் என்ன..? அவரது இறப்புக்கு காரணம் யாராக இருக்கும் என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது.
சமீப வருடங்களாக பேய்களெல்லாம் சாதுவாக மாறிக்கொண்டு இருக்கின்றனவோ என்பதுபோல சாப்ட்டான பேய்ப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தப்பட்டியலில் இந்தப்படமும் இடம் பிடிக்கிறது. நாயகன் சந்தோஷ் படம் முழுக்க சென்டிமென்ட்டாகவே வர, நாயகி ரேஷ்மி மேனன் பார்வையாலேயே பயமுறுத்த முயற்சி செய்கிறார்..
நண்பர்களாக வரும் லொள்ளுசபா ஜீவா, பரணி, மொட்ட ராஜேந்திரன், ஜெகன் நால்வரும் கலகப்புக்கு உத்தரவாதம் கொடுத்தாலும், அவர்களாகவே தங்களுக்குள் சொல்பேச்சு கேளாமல் திட்டிக்கொள்ளும் காட்சிகளில் ஒருவித எரிச்சலையே உண்டு பண்ணுகிறார்கள்.. கோவை சரளா வழக்கம்போல பேய்க்காமெடியில் வெளுத்து வாங்குகிறார்.
படம் பார்க்கும்போது நமக்கு சில சந்தேகங்கள் ஏற்படவே செய்கின்றன. ரேஷ்மி மேனன் தான் பேய் என்றால், அவர் தனது கணவனுடன் தொடர்ந்து வாழ விரும்பினால், வீட்டிற்கு வந்த விருந்தாளிகளிடம் நல்ல முறையில் நடந்துகொண்டிருந்தால் நண்பர்கள் டீமுக்கு சந்தேகமே வந்திருக்காதே…. அவர்கள் பாட்டுக்கு ஊருக்கு கிளம்பி போயிருப்பார்களே..
அதேபோல நண்பர்களை அவுட் ஹவுஸ் போன்ற வீட்டில் தங்க வைக்கும் சந்தோஷ், அவர்கள் அங்கே செல்வதற்கு முன்பே, அவர்களிடம் அந்த வீட்டில் ஒரு கிழவி தற்கொலை செய்துகொண்டார் என சொல்லி அனுப்புவது எல்லாம் தேவைதானா..? ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் தான் முழுப்படத்தையும் நகர்த்த உதவுகின்றன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
படத்தில் இடம்பெற்றுள்ள லொக்கேசன்கள் பிரமாதம். குறிப்பாக, சந்தோஷ்-ரேஷ்மியின் வீடு அமைந்துள்ள ஏரிக்கரை பகுதி ரம்யமாகவும் அதேசமயம் திகிலூட்டுவதாகவும் இருப்பது படத்துக்கு பிளஸ். பேய் படங்களில் ஒரு புதிய மாற்றை கொண்டுவர இயக்குனர் ஜவஹர் முயற்சித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். எது எப்படியோ முக்கால்வாசி படத்துக்கு தாரளமாக பயப்படலாம். ஓரளவு சிரிக்கவும் செய்யலாம்.