பசங்க-2 பார்த்துவிட்டு அதன் தாக்கம் தணிவதற்குள் இன்னொரு குழந்தைகள் படம் பார்ப்பது புதிய அனுபவம் தான்.. இதில் குழந்தைகளை வேறுவிதமாக ட்ரீட் பண்ணியுள்ளார்கள்.
பாதர் சுரேஷ் நடத்தி வரும் பள்ளிக்கூடத்திற்கு வரும் நிதி உதவி நிறுத்தப்பட போவதாக தகவல் வருகிறது.. பள்ளி அண்டு விழாவில் கலந்துகொள்ள வாடிகனில் இருந்து வரும் தலைமை பாதரின் மனதை குளிர்வித்து நிதியை தொடர்ந்து பெற முடிவு செய்கிறார். அதற்காக ‘ஏசு பிறப்பு’ நாடகம் நடத்தும் பொறுப்பை சில மாணவர்களிடம் ஒப்படைக்கிறார்..
ஆனால் புதிய மாணவர்கள் ஐந்துபேர் அவரிடம் வந்து இந்தமுறை தாங்கள் அந்த நாடகத்தை புதியமுறையில் ஒரு உயிருள்ள பிறந்த குழந்தையை வைத்து நடத்துவதாகவும், வரப்போகும் பாதரை நிச்சயம் மனம் குளிரச்செய்யும் விதமாக அது இருக்கும் என்றும் சொல்லி அவரிடம் கெஞ்சுகிறார்கள்.. பாதரும் அரைமனதாக சம்மதிக்கிறார்..
குழந்தைக்காக தேடி அலையும் இந்த மாணவர்களும் ஒரு வழியாக அதை கண்டுபிடித்து நாடகத்திற்கு தயாராகிறார்கள்.. நாடகம் நடத்தும் வேளையில் திடீரென குழந்தை காணமல் போக, சிக்கல் ஏற்படுகிறது. அதை தங்களது சக்திக்கு உட்பட்டு இந்த மாணவர்கள் ஐவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
குழந்தைகள் படம் தான் என்றாலும், குழந்தைகளை முன்னிட்டு இதில் பெரியவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அலசியிருக்கிறார்கள்.. மாணவர்களாக நடித்துள்ள ஐந்து சுட்டீசும் (கருணாஸ் மகன் கெவின் உட்பட) துருதுருவென இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
கருணாஸின் குணச்சித்திர பாத்திரப்படைப்பு அற்புதம். தம்பிராமையா, சுரேஷ், ஜான்விஜய், வினோதினி, யாழினி, ரித்விகா, அகில், என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்துள்ளார்கள் தான். இருப்பினும் செயற்கையாக ஜோடிக்கப்பட்ட சில காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடை போடுகின்றன.. படத்தை இயக்கியுள்ள சார்லஸ், கமர்ஷியல் வேல்யூ எதுவுமில்லாமல், குழந்தைகளுக்கான படமாகத்தான் இதை இயக்கியுள்ளார். குழந்தைகளும் ரசிப்பார்கள்.. அது போதும் தானே..!!