அவதாரம் விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : திலீப், லட்சுமி மேனன், அஞ்சு அரவிந்த், தேவன், அனில் முரளி, கலாபவன் சாஜன், ஜாய்மேத்யூ, ஷம்மி திலகன்  மற்றும் மேஜர் ரவி.

இசை : தீபக் தேவ்

படத்தொகுப்பு : ஷியாம் சசிதரன்

ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்

கதை : வியாசன் எடவனக்காடு

இயக்கம் : ஜோஷி

கதையைப்பற்றி சொல்வதற்கு முன் இயக்குனர் ஜோஷியை பற்றி நாலுவரிகள் சொல்லிவிடுகிறோம். கடந்த 36 வருடமாக மலையாள சினிமாவின் லெஜண்ட்டாக வலம் வருபவர். முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படம் இயக்குவதற்கு மட்டுமே நேரம் உள்ளவர்.. மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து 31 படங்களை இயக்கியுள்ளவர். தமிழில் சத்யராஜை வைத்து ‘ஏர்போர்ட்’ என்ற அதிரடி படத்தை கொடுத்தவர். மலையாள சினிமாவின் அனைத்து ஸ்டார்களையும் ஒரே படத்தில் நடிக்க வைத்து 20-20 என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர்.. ஆக்ஷன் படங்களின் பிதாமகன்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால் இப்போதைக்கு இது போதும்… அப்படிப்பட்ட ஜோஷி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் ‘அவதாரம்’.

விபத்தில் இறந்துபோன கஸ்டம்ஸ் அதிகாரியான தனது அண்ணன் சம்பந்தமான இன்ஸ்யூரன்ஸ் பணம் மற்றும் இதர பணப்பலன்களை பெற்றுத்தர தனது அண்ணிக்கு உதவியாக நகரத்திற்கு வருகிறார் திலீப்.. வந்த இடத்தில் அண்ணனது சான்றிதழ்கள் கிடைக்க தாமதாகும் வேளையில் இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்தில் வேலைபார்க்கும் லட்சுமி மேனனுடன் காதல் ஏற்பட, ஒருகட்டத்தில் அவரை திருமணமும் செய்கிறார்.

இந்த நிலையில் தனது அண்ணன் விபத்தில் இறக்கவில்லை.. திட்டமிட்டு கொல்லப்பட்டார்  என்பது திலீப்புக்கு தெரியவருகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி ட்ரைவர் அனிலை திலீப் விரட்டும்போது அவனை வேறு ஒருவன் கொல்கிறான். இந்த விவகாரத்தில் திலீப் தீவிரமாக மூக்கை நுழைக்க, அதை விரும்பாத எதிராளிகள் அவரது மனைவியான லட்சுமி மேனனை அவர்கள் திருமண நாளன்றே பாலியல் பலாத்காரம் செய்து, கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

நேருக்கு நேராக மோதினால் தனக்குத்தான் பாதிப்பு என்பதை உணர்ந்த திலீப், எதிராளிகளுக்குள் கலகத்தை மூட்டி அவர்களில் ஒவ்வொரு தலையாக சாய்க்கிறார். இறுதியில் தனது அண்ணன் சாவுக்கு மூலகாரணமாக இருந்தவனை அவன் போலீஸ் பிடியில் இருக்கும்போதே தந்திரமாக கொல்கிறார். அதிர்ச்சியில் இருந்து குணமான தனது மனைவியை அழைத்துக்கொண்டு இறுதியில் தனது கிராமத்துக்கே திரும்புகிறார் திலீப்.

படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்டு போடும்போதே கேரளாவின் அதல பாதாளங்கள் நிறைந்த மலைப்பாதையில் ஒரு சுகமான பத்து நிமிட பேருந்துப் பயணத்துடன் நம்மை அழைத்துச் செல்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா.. ஆனால் படத்தின் கதை என்னவோ ரொம்பவே சாதாரண கதை தான். ஆனால் திலீப், லட்சுமி மேனன் உட்பட பலரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் கதையில் எந்தவித திருப்பங்களும் இல்லாததால் படத்தில் நம்மால் ஒன்ற முடியவில்லை என்பதே உண்மை.

மேலே இயக்குனர் ஜோஷியைப்பற்றி எதற்கு அவ்வளவு விபரமாக சொன்னோம் என்றால் அவர் அழைத்தால் திலீப் ஏன் என்று கேட்காமல் நடிக்க வருவார்.. லட்சுமி மேனன் வருவார்.. அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் எதற்காக இப்படி ஒரு அரத பழசான  கதையை தேர்வு செய்தார் என்பதுதான் அதிர்ச்சி தருவதாக இருகிறது…

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் கூட கிறிஸ்டியன் பிரதர்ஸ், ரன் பேபி ரன் என சூப்பர் டூப்பர் ஆக்ஷன்களை கொடுத்தவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்விதான் படம் பார்க்கும்போது எழுகிறது. ஆனால் வில்லன்களை திலீப் தந்திரமாக தீர்த்துக்கட்டும் கடைசி இருபது நிமிடத்தில் ஜோஷி தனது பழைய முகம் காட்டியிருக்கிறார் என்பது மட்டும் தான் மனதுக்கு ஆறுதல்..

 

 

 

Avatharam ReviewDilipLakshmi Menonஅஞ்சு அரவிந்த்அனில் முரளிஅவதாரம் விமர்சனம் (மலையாளம்)கலாபவன் சாஜன்ஜாய்மேத்யூதிலீப்தேவன்லட்சுமி மேனன்ஷம்மி